7 ஆக., 2013

எமது மண்ணையும் எம்மையும் நாமே ஆள வேண்டும்!- கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சிவகரன்
எமது மண்ணையும் மக்களையும் நாமே ஆள வேண்டும் என வடமாகாண சபைக்கான மன்னார் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான வி. எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி ஏலவே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
எமது மண்ணையும் மக்களையும் நாமே ஆள்பவர்களாக ஆணை பெறுவோம். எத்தகைய சலுகைகளைக் கண்டும் எமது மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை பலமுறை நிருபித்த பின்பும், அரசாங்கம் பல ஏமாற்று மோசடி வேலைகளில் எமது மக்களை பலிகடாவாக்கி வாக்கினை பெறலாம் என எண்ணுகின்றது.
பல தசாப்த இனவிடுதலை போராட்டம் அதனால் பல லட்சம் உயிர்கள் அழிக்கப்பட்டும் அனாதைகள், அங்கவீனர்கள், விதவைகளாக ஆக்கப்பட்டும் செட்டிகுளத்தில் முட்கம்பிக்குள் முடக்கப்பட்ட போதும், எமக்குத் தேவை சலுகை இல்லை உரிமை என உரத்த குரலில் உலகிற்கு ஒப்புவித்தவர்கள்.
எமது மக்களை இராணுவப் பிரசன்னத்தாலும் அடக்குமுறை நிர்வாகத்தை உபயோகிப்பதனாலும் தமது இலக்குகளை இலகுவில் எட்டிவிடலாம் என அறுபது ஆண்டுகளாக தோற்றுப்போன ஆட்சியாளர்கள் மறுபடியும் வீறு கொண்டு புதிய ரூபத்தில் உட்புகுந்திருக்கிறார்கள்.
நாம் மாகாண சபை நிர்வாக முறைமையையோ அல்லது 13வது சரத்தின் மூலம் எமது மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றோ நம்பவில்லை.
ஆனால் இனப்பறிப்பை விட மோசமான நிலப்பறிப்பு நிகழ்கின்றது. இது எமது அடிப்படைக் கோட்பாடான தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, பண்பாட்டியல் பாரம்பரியம் போன்றவற்றை வேரறுத்து புதிய மரபியல் கோட்பாட்டை பௌத்த ஏகாதிபத்தியம் நிலைநாட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்.
இன அழிப்பு நடைபெற்றது என்பதை ஒருமித்த வாக்குப்பலத்தினால் சர்வதேசத்திற்கு நிருபிக்க வேண்டும்.
சலுகைகள் கடந்து சந்தர்ப்பவாதங்கள் இன்றி அபிவிருத்தி மாயை அகப்பாடின்றி எத்தனை சோதனைகள் வரினும் எம்முடைய அடிப்படைக் கோட்பாட்டில் மாற்றமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும்.
ஜெனிவா உட்பட சர்வதேசம் எம் நலனில் மேலும் அக்கறை கொள்ள அவர்களால் எதிர்பார்க்கும் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலை மாற்ற வேண்டும்.
எனவே எமது மக்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அத்தனையும் மறந்து இனஉரிமை, மொழியுரிமை இரண்டையும் வாழ்வுரிமையாக்குவதற்கு அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்.
இது இனமான உணர்வின் மற்றுமொரு இடைநிலைச் சந்தர்ப்பமாகும். ஆகவே சத்திய வேள்வியில் நித்தமும் வேகியவர்கள் என்பதால் சலனங்களையும் சங்கடங்களையும் சலுகைகளையும் கண்டு ஏமாந்து விடமாட்டோம் என்பதை நெஞ்சில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது தமிழ் மக்களுடைய தார்மீக கடமையும் உரிமையுமாகும்.
இளைய தலைமுறையினர் ஏமாற்று சக்திகளிடமிருந்து எமது மக்களிற்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.