புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2013

மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் 'உலக ஆண்டறிக்கை-2013' : சிறிலங்கா பற்றிய குற்றப் பட்டியல்

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் ஜனநாயக ஆட்சியை மீறும் செயல்களை 2012லும் தொடர்ந்தும் மேற்கொண்டதுடன், 2009ல் நாட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் தனது தரப்பால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிப்பதற்கான பயனுள்ள நகர்வுகளை மேற்கொள்ளத் தவறியுள்ளது.

தனது நாட்டில் வாழும் மக்கள் சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டது. அத்துடன் தனது சொந்த மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்ததுடன், மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும் தடைவிதித்தது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் போர்க்கால மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் பதிலளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக விமர்சித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளும் சிறிலங்கா அரச ஆதரவு ஊடகங்களும் அச்சுறுத்தின.

தமது பணியாளர்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் தாம் உதவி வழங்கும் மக்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் உள்நாட்டில் பணிபுரியும் ஆர்வலர்கள் அதிகம் கவலை வெளியிட்டனர்.

சிறிலங்காவில் தற்போது நிலவும் பல்வேறு சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் தற்போதும் விசாரணையின்றி தடுத்து வைக்கும் நிலை தொடர்கிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவொரு விசாரணைகளோ அல்லது வழக்குகளோ இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்படும் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகள் உள்ளடங்கலாக சிறுபான்மைத் தமிழ் மக்களை சிறிலங்கா பாதுகாப்பு படையினர் எந்தவொரு காரணமுமின்றி கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர். வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது இயல்பு வாழ்வை வாழ்வதற்கான போதியளவு அபிவிருத்திச் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இந்த மக்களின் இயல்பு வாழ்வுக்காக மனிதாபிமான அமைப்புக்களே தம்மாலான உதவிகளைச் செய்துவருகின்றனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் நாட்டின் முக்கிய பல்வேறு அதிகாரங்களைத் தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய அரசாங்க ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த போது 2010ல் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட 18வது திருத்தச் சட்டத்தின் மூலம் ராஜபக்ச இந்தக் கோரிக்கைகளை புறக்கணித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 26 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் போது போரில் பங்கு கொண்ட இவ்விரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கையையும் சிறிலங்கா அரசாங்கம் 2012ல் மேற்கொள்ளவில்லை.

மே 2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளால் 'மனிதக் கேடயங்களாகப்' பயன்படுத்த தமிழ்ப் பொதுமக்கள் மீது சிறிலங்கா அரசாங்கப் படைகள் எவ்வித தயவுதாட்சண்ணியமுமின்றி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது.

இதேபோன்று சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போதான மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவால் 2011ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், வல்லுனர் குழுவால் பரிந்துரைக்கப்படும் விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக சுயாதீன அனைத்துலக பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதனை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் அசட்டை செய்து வந்துள்ளது. அத்துடன் யுத்த கால மீறல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்கான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வல்லுனர் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.

மார்ச் 2012ல் ஜெனீவாவில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது அனைத்துலக சட்டம் மிக மோசமாக மீறப்பட்டமை தொடர்பாக சுட்டிக்காட்டவில்லை எனவும் யுத்த கால மீறல்கள் தொடர்பில் நீதி எட்டப்படுவதையும் பொறுப்பளித்தலையும் உறுதிப்படுத்துவதற்கான அவசியமான நகர்வுகள் எடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்கான முழுமையான திட்டம் ஒன்றை சிறிலங்க அரசாங்கம் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கேட்டுக் கொண்டது.

பேரவையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாக அச்சுறுத்தியது. கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான செயற் திட்டம் ஒன்றை வரைந்துள்ளதாக கடந்த யூலையில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பதிலளிப்பதுடன் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் எனவும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. நன்னடத்தை சார் விசாரணைகள் 12 மாதங்களிலும், மேலதிக விசாரணைகள் 24 மாதங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது யுத்த கால மீறல்கள் தொடர்பான விசாரணைகளை வெளிப்படையாக மேற்கொள்ளாது சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையினரால் மேற்கொண்டுள்ளது.

யுத்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிப்பதற்கான சிறப்பு இராணுவ விசாரணை நீதிமன்றங்களை மேற்கொள்வது எனக் கூறப்பட்டபோதிலும், இவை தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

2006ல் 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இரு வேறு சம்பவங்களில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டதற்கான உறுதியான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் கூட, சிறிலங்கா அரசாங்கம் இவ்விரு சம்பவங்களிலும் ஈடுபட்ட எந்தவொரு குற்றவாளிகளையும் கைது செய்து தண்டனை வழங்கவில்லை.

காவற்துறை மீது சுயாதீன அதிகாரங்கள் மீளவும் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்து சிறிலங்கா காவற்துறை அகற்றப்பட்டு புதிய கட்டமைப்பொன்று உருவாக்கப்படுவதுடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இவை இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.

நவம்பர் 2012ல் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பூகோள கால மீளாய்வின் போது பேரவையின் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட 100 வரையான பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கமறுத்தது. இவற்றுள் யுத்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்பளித்தலில் நேரடித் தாக்கம் விளைவிக்கும் பரிந்துரைகள் சிலவும் உள்ளடங்குகின்றன.

எந்தவொரு காரணமுமின்றி மக்களைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கான எதேச்சதிகாரத்தை சிறிலங்கா காவற்துறையும் பாதுகாப்புப் படைகளும் கொண்டுள்ளன. காவற்துறையின் சில அதிகாரங்கள் பாதுகாப்பு படையிடம் வழங்கப்பட்டுள்ளன.

2011ல் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவசரகாலச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் பல ஆயிரக்கணக்காண மக்களை சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் போன்றவற்றைக் கூட சிறிலங்கா அரசாங்கம் வெளியிடத் தவறியுள்ளது.

யுத்தத்தின் இறுதியில் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கபட்ட 11,000 வரையான உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் 180 பேர் தீவிர குற்றம் புரிந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டு தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

2012ல் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் காணாமற் போதல்கள், பலவந்த ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் இடம்பெற்றதாக உள்நாட்டு மனித உரிமைக் குழுக்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டின. சிறிலங்காவின் வடக்கிற்கு பயணம் செய்வதற்கான தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கிய போதிலும் கூட, தொடர்ந்தும் வடக்கில் உயர் பாதுகாப்பு பணிகள் தற்போதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரலில் புலிகளுடன் தொடர்புபள்ளதாகச் சந்தேகிக்கப்பட்ட 220 தமிழ் ஆண்கள் மற்றும் பெண்கள் திருகோணமலையில் வைத்து கைதுசெய்யப்பட்டு, எந்தவொரு விசாரணைகளுமின்றி சில நாட்கள் சிறிலங்கா இராணுவத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் உள்ளடங்கலாக பல தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டு வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட சிலர் சிறிலங்கா மத்திய புலனாய்வுத் திணைக்களத்தாலும் ஏனைய பாதுகாப்பு படைகளாலும் சித்திரவதைகளுக்கு உள்ளடக்கப்பட்டனர்.

இவ்வாறான அறிக்கைகளின் அடிப்படையில், பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 30 தமிழர்களை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என அந்நாட்டு நீதிமன்றங்கள் கட்டளையிட்டிருந்தன. சிறிலங்காவில் தற்போதும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நடைமுறையில் காணப்படுகிறது.

2012ல் கூட்டப்பட்ட மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் ஒளிப்படங்களையும் அவர்களின் பெயர் விபரங்களையும் ஊடகங்களில் வெளியிட்ட சிறிலங்கா அரசாங்கமானது இவர்களை தேசத்துரோகிகள் எனவும் முத்திரை குத்தியது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்திய சிறிலங்கா அமைச்சரான மேர்வின் டீ சில்வாவுக்கு எதிராக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

யூன் 2012ல் சிறிலங்கா குற்றவியல் விசாரணை திணைக்களம், சிறிலங்கா மிரர் மற்றும் சிறிலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தள பணியகங்கள் மீது திடீர் சோதனையை மேற்கொண்டது. இந்த பணியகத்தில் பயன்படுத்தப்பட்ட கணணிகள் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றையும் சிறிலங்கா குற்றவியல் விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் கையகப்படுத்தியதுடன், இங்கு பணிபுரிந்த ஒன்பது பேரை கைதுசெய்தது. இந்த இணையத்தளங்கள் சிறிலங்கா தொடர்பில் போலியான, உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இங்கு கைதுசெய்யப்பட்ட இணையத்தளப் பணியாளர்கள் 120வது சரத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். இவர்கள் சிறிலங்கா அரசாங்க அதிபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செய்திகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்ட மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சித்த ஐந்து வரையான இணையத்தளங்களை கடந்த ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்தது. அத்துடன் இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் இணையத்தள தணிக்கையைத் தவிர்ப்பதற்காக பல இணையத்தளங்கள் தமது பிரதான பதிலிகளை வெளிநாடுகளில் செயற்படுத்த தொடங்கின. தன்னை கோத்தபாய ராஜபக்ச மிரட்டி வருவதாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த பிறெட்றிக்கா ஜான்ஸ் கடந்த யூலையில் அறிவித்திருந்தார்.

சுவிற்சர்லாந்திலிருந்து நாய்க்குட்டி ஒன்றைக் கொண்டு வருவதற்காக சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றைப் பயன்படுத்துவது என கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்த போது அதனை பிறெட்றிக்கா ஜான்ஸ் விமர்சித்திருந்த நிலையிலேயே இவர் அச்சுறுத்தப்பட்டார். இதேபோன்று சிறிலங்காவில் செயற்பட்ட பல்வேறு சுயாதீன ஊடகவியலாளர்கள் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினர். 2009ல் பட்டப் பகலில் சிறிலங்கா காவற்துறை நிலையம் ஒன்றுக்கு அருகில் சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இன்று வரை இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

இதுபோன்று ஜனவரி 24,2010ல் காணாமற் போன ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட தொடர்பான உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படவில்லை. எக்னெலிகொட காணாமற்போகவில்லை எனவும், இவர் வெளிநாடொன்றில் வாழ்வதாகவும் பிரதம நீதியரசராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள மோகன் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

போர் முடிவுற்ற பின்னர் வவுனியால் அமைக்கப்பட்டிருந்த மெனிக் பாம் இடைத்தங்கல் முகாமில் 300,000 வரையான பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டனர். இந்த முகாம் செப்ரெம்பர் 2012ல் முற்றாக மூடப்பட்டதாகவும் இதில் எஞ்சியிருந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இருந்த போதிலும் இன்றும் கூட பல பத்தாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தமது உறவுகளின் வீடுகளிலும் தற்காலிக வீடுகளிலும் தங்கியுள்ளனர். தமது கிராமங்களில் இன்னமும் நிலக்கண்ணிவெடி அகற்றப்படாத காரணத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேறிடங்களில் வாழ்கின்றனர்.

வடக்கு கிழக்கில் சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் முன்னிலை கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கூட தற்போதும் இங்கு வாழும் பொதுமக்களின் நாளாந்த வாழ்வில் பாதுகாப்பு படையினர் அதிகம் குறுக்கீடு செய்கின்றனர். வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளில் இடம்பெறும் துடுப்பாட்டப் போட்டிகள், ஆலயங்களில் இடம்பெறும் விழாக்கள் உள்ளடங்கலாக பொதுமக்களின் பல்வேறு நிகழ்வுகளில் சிறிலங்காப் படை தனது தலையீட்டை மேற்கொள்கிறது. இங்கு வாழும் மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நடவடிக்கைகளிலும் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தலையீடு செய்வதாக முறையிடப்பட்டுள்ளது.

போர்க் கால மீறல்கள் தொடர்பில் பயனுள்ள வகையில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பளிக்கத் தவறியது தொடர்பில் அனைத்துலக அரங்கிலுள்ள முக்கிய நாடுகள் தமது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. கடந்த மார்ச்சில் கூட்டப்பட்ட பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து 24 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இவ்வாக்கெடுப்பில் எட்டு நாடுகள் கலந்து கொள்ளவில்லை. நைஜீரியா, உருகுவே, இந்தியா போன்ற பேரவையின் உறுப்பு நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தன.

யுத்த கால மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தை இந்தியா அழுத்தி வருகிறது. அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், தமிழ் சிறுபான்மையினருடனான மீளிணக்க முயற்சிகள் போன்றன சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் மிக முக்கிய நட்பு நாடாக சீனா விளங்கிவருகிறது. சிறிலங்கா அபிவிருத்தித் திட்டத்தில் பெருமளவான முதலீட்டை சீனா மேற்கொண்டுள்ளது. இதைவிட சிறிலங்காவின் உயர் மட்ட இராஜீக மற்றும் இராணுவ உடன்படிக்கைகளிலும் சீனா கைச்சாத்திட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சீனா முற்றாக எதிர்த்திருந்தது.
thx putinapalagai
அறிக்கை வழிமூலம் : Human Rights Watch
மொழியாக்கம் : நித்தியபாரதி

ad

ad