புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2013

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி! பன்னாட்டு விசாரணைக்கு ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்!- வைகோ
ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, உலகம் தடை செய்த குண்டுகளையும், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகள் தந்த ஆயுதங்களையும் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, மிகக் கொடூரமாகக் கொன்று குவித்தபோது, அக்கோரக் கொலைகளைத் தடுக்கும் கடமையில் ஐ.நா. மன்றம் திட்டமிட்டே தவறியது என்பதை, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ஐ.நா.வின் இலங்கை நடவடிக்கை குறித்த உள்ளக ஆய்வு குறித்த, ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்துள்ளார்.
யுத்தத்தை நிறுத்தவோ மனித உரிமைகளைக் காக்கவோ, தக்க நடவடிக்கைளை ஐ.நா. எடுக்கவில்லை; அதில் தோற்றுப் போனது, அதற்கு, ஐ.நா. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று கூறியிருக்கிறார்.
இலங்கையில் யுத்த காலத்தில் ஐ.நா. எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை, சார்பில் பெட்ரி தலைமையில், 2012 ஆம் ஆண்டு, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் அமைத்தார்.
அந்தக் குழு, எட்டு மாத காலம் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை தந்தது. பல உண்மைகள் அந்த அறிக்கையில் முழுமையாக வெளிவராவிடினும், இன படுகொலையை ஐ.நா. அதிகாரிகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; சிங்கள ராஜபக்ச அரசின், அராஜகமான ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தனர்.
ஈழத்தமிழர்கள், குறிப்பாக வயோதிபர்களும், பெண்களும், ஐ.நா. அதிகாரிகளின் கால்களில் விழுந்து எங்களை விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் என்று மன்றாடிய போதும், இரக்கம் காட்டாமல், அந்த இடங்களை விட்டு ஐ.நா. அதிகாரிகள், கொழும்புக்குச் சென்று விட்டனர். ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கோட்பாடே குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
பான் கி மூன் அமைத்த மூவர் குழு, தனது அறிக்கையில், ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, தகுந்த ஆதாரங்களோடு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல், இதுகுறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்து இருந்தது.
ஆனால், அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
அண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஆணைக்குழுவின் கூட்டத்தில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழத்தமிழர் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே, அது குறித்து எந்த விசாரணையையும் உலக நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நிரந்தரமாக ஈழத்தமிழர்களை, சிங்களவரின் அடிமை நுகத்தடியில் அழுத்துவதற்காகவே, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு, பொதுநலவாய மாநாட்டை, நவம்பர் 17, 18 ம் திகதிகளில், கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தந்து உள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஐ.நா. சபையின் திட்டமிட்ட தோல்வி என்பது மட்டும் அல்ல, திட்டமிட்ட துரோகம் என்பதுதான் உண்மை ஆகும்.
கடமை தவறிய ஐ.நா. அதிகாரிகளும், இந்த இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனும் இதற்குப் பொறுப்பாளி ஆவார்.
மனித உரிமைகள் கோட்பாடு ஐ.நா. மன்றத்தில் இனியும் இருக்குமானால், ஈழத்தமிழர் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ad

ad