புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2013

தமிழகம் முழுவதும் மழை : மின்னல் தாக்கி 7 பேர்  பலி
 
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.


இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை கொட்டியது. நெல்லையில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. நேற்று மாலை 5 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மானூர் அருகே உள்ள தெற்கு வாகைக்குளத்தை சேர்ந்த துரைப்பாண்டி (22), லட்சுமணன் (21) உள்பட 7 தொழிலாளர்கள், வடக்கு வாகைக்குளம் அருகே பாலஸ்தீனபுரத்தில் தோப்படி சுடலைமாடன் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் நேற்று மராமத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பலத்த மழை பெய்ததால் நனையாமல் இருக்க துரைப்பாண்டியும், லட்சுமணனும் அங்குள்ள மரத்தின் கீழ் ஒதுங்கினர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி இறந்தனர்.

 
மானூர் அருகே மடத்தூரைச் சேர்ந்தவர் மரியம்மாள் (65). நேற்று அங்குள்ள தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த தாழையூத்து டிஎஸ்பி நடராஜன், மானூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மின்னல் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. மீசநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 15 பெண்கள் வேர்க்கடலை பறித்துக் கொண்டு இருந்தனர். பலத்த மழை பெய்ததால் அவர்கள் தெய்யார் கூட்டு சாலையில் உள்ள ஒரு கொட்டகையை நோக்கி ஓடினர்.
அப்போது மின்னல் தாக்கியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி ஜெயா (40) என்பவர் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மணி என்பவரது மனைவி முனியம்மாள் (46) படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீசநல்லூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பனின் மனைவி விஜயலட்சுமி (36). தனது தந்தை ஏழுமலையுடன் நிலத்தில் தைல மரக்கன்றுகளை நட்டுக் கொண்டு இருந்தார் அப்போது இடி தாக்கியதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மின்னல் தாக்கியதில் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த 2 பேர் பலியாகியுள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த பூஜா என்ற பெண்ணும் மற்றொரு ஆணும் மின்னல் தாக்கியதில் பலியாகியுள்ளனர்

ad

ad