புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2013

இராணுவத் தடையை மீறி வலி.வடக்கிற்குச் செல்வேன்! அ​ந்த மண்ணில் உயிர் பிரிவது பாக்கியம்: ​விக்னேஸ்வ​ரன் சவால்
அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13வது திருத்தச் சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாது விடுவதே, அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன என சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர் திருப்பி அனுப்பி விட்டனர்.
இந்த நிலை தொடர்ந்தால் இராணுவத்தினரின் தடையை மீறி நான் அப்பகுதிக்குச் செல்வேன். அப்போது இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர் விடவும் நான் தயாராக உள்ளேன். அத்தகைய உயிரிழப்பை பாக்கியமாகவே கருதுவேன் என்றும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்றுமாலை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போதே முதலமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாது விடுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதிகாரத்தைப் பகிர்வதாக கூறி 13வது திருத்தச் சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாது விடுவதே அரசின் திட்டமாகவுள்ளது.
இதுவரை எமக்கு இதுபற்றி தெரியாமல் இருந்தது. தற்போது வடமாகாண சபைக்கு அரசாங்கம் போடும் முட்டுக்கட்டைகளைப் பார்க்கும்போது இதன் பின்னணி விளங்குகின்றது.
அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் பரிபாலித்துவிட்டு சிங்கள மேலாண்மையை உட்புகுத்தவே முயல்கின்றது. தமிழ் மக்களும் தமிழ் பிரதிநிதிகளும் இதனை உலகுக்கு எடுத்துச் சொல்ல முன்வரவேண்டும்.
இதுவரை உங்கள் தலைமையிலான அணியின் ஒத்துழைப்பு பூரணமாக வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைத்துள்ளது. இது தொடரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
நாடு பூராகவுமுள்ள சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதுற்கு முகம். கொடுக்க நாம் பின்நிற்க மாட்டோம்.
வடக்கில் நில ஆக்கிரமிப்பு தொடர்ந்து வருகின்றது. ஆலயங்கள், வீடுகள் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இடித்து அழிக்கப்படுகின்றன. இவ்வாறு அழிக்கப்படும் ஆலயங்களை பார்வையிடுவதற்கு நான் கடந்தவாரம் சென்ற போது இராணுவத்தினர் என்னை தடுத்து நிறுத்திவிட்டனர்.
இத்தகைய செயல்கள் இனியும் தொடர்ந்தால் இராணுவத்தையும் மீறி நான் அப்பகுதிக்குச் செல்வேன் , என்மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் வீழ்ந்து உயிரிழக்கும் பாக்கியத்தை நான் பெறுவேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலுகுமார், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களான வேலணை வேணியன், சண். குகவரதன், பிரியாணி குணரத்ன, கே.ரி. குரு - சாமி, எஸ் . பாஸ்கரா, லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றனர்.

ad

ad