தேசிய ஜனநாயக்
கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "16வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற நம்முடைய கடுமையான உழைப்பைத் தர வேண்டியது நமது தலையாய கடமையாகும்.
இருபது ஆண்டுகள் துன்ப முட்களைச் சுமந்துவந்த நாம் பட்டபாடுகளுக்குப் பலனாக ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற காலம் கனிந்திருக்கிறது. இத்தனை வருடங்கள் கழகக் கண்மணிகள் ஆற்றிய பணிகளுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஒவ்வொருவரும் தம் முழு வலிமையையும் பயன்படுத்தி, அணுவளவும் தன்னலம் கருதாது தன் முனைப்பு பாராது கழக வேட்பாளர்களுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் கடுமையாக உழைத்து வெற்றியை ஈட்டித் தர வேண்டுகிறேன்.
வேட்பாளரின் தேர்தல் அலுவலகங்களில் எதையும் நாடாது இதுகாறும் நம் இயக்கம் பெற்றிருக்கின்ற நன்மதிப்பையும், பெருமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கண்ணியத்தோடு தேர்தல் பணியாற்றுவதே நமக்கு மேலும் மதிப்பைத் தரும்.
முன்னேறிச் செல்! உழைப்பை வழங்கு! உரிய பலன் தானாகக் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.