புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2014

எங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்திய போது கடந்த மாகாணசபைத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவினை மக்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் சர்வதேசம் ஜெனீவா தீர்மானம் தொடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும், வெளிப்படுத்தி ஒரு தீர்வினைக் காண வேண்டுமென மிகத் தீவிரமாக இருக்கின்றது. சுவி வீரமக்கள் தினத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட 25ஆவது வீரமக்கள் தினம் 06.07.2014 சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அவரது பாரியார் திருமதி மீனா சித்தார்த்தன் ஆகியோர் திரு.திருமதி விஜயநாதன் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தியும், குழந்தைகளினால் பூச்செண்டு கொடுத்தும் வரவேற்கப்பட்டு மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.  

இதனைத் தொடர்ந்து திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் திருமதி மீனா சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சுவிஸ்கிளை சார்பில் தோழர் செந்தா, தோழர் ராஜன்; புளொட் சுவிஸ்கிளை சார்பில் புளொட்டின் சுவிஸ்கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய தோழர் தீபன், லண்டன் கிளையின் சார்பில் தோழர் வவா, ஜெர்மன் கிளையின் சார்பில் தோழர்கள் அப்பன், ஜூட், நோர்வே கிளையின் சார்பில் தோழர் ராஜன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, வரவேற்புரையினை புளொட்டின் சுவிஸ்கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய தோழர் சுவிஸ்ரஞ்சன் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அங்கிருந்த "வீரமக்களின்" உருவப்படங்களுக்கு கலந்து கொண்டவர்களினால் "மலரஞ்சலி" செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய தோழர் தீபனின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அவர் தனது தலைமையுரையில் "புளொட்" அமைப்பினர் வருடாவருடம் வீரமக்கள் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம், காரணங்களை விளக்கிக் கூறியதுடன், அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்.

முதலில் வரவேற்பு நடனம் இடம்பெற்று தொடர்ந்து திரு.விவேகானந்தன் மாஸ்டர் தலைமையில் பட்டிமன்றமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகளும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நடனங்கள், என்பனவும் இடம்பெற்றன. நாட்டிய நடனங்களை திருமதி ஜெயவாணி குகராஜசர்மா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, சுவிஸ் சூரிச் தமிழ் சங்கத்தின் சார்பில் திரு.ரட்ணகுமார், சூரிச் சயன்ஸ் அக்கடமி சார்பில் திரு.கணபதிப்பிள்ளை மாஸ்டர், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் சுவிஸ் கிளையின் சார்பில் பங்கேற்றிருந்த திரு.சுதா, நோர்வேயிலிருந்து வருகை தந்திருந்த தோழர் ராஜன் ஆகியோர் உரைநிகழ்தினார்கள். 

ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் சுவிஸ் கிளையின் சார்பில் பங்கேற்றிருந்த திரு.சுதா, ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அணி பொதுச்செயலர் சுகு தோழர் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அறிக்கையை வாசித்ததுடன், நமது ஒற்றுமையினை வலியுறுத்திப் பேசினார். 

அத்துடன்று, சூரிச் சயன்ஸ் அக்கடமி சார்பில் திரு.கணபதிப்பிள்ளை மாஸ்டர் அவர்கள் தனதுரையில், "தாங்கள் இதுவரை காலமும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு மிகவும் பயந்த சூழ்நிலையில் இருந்ததைக் குறிப்பிட்டு, இப்போது நல்லதொரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை தொடரவேண்டும். எமது ஒற்றுமை வலுப்பெற வேண்டும்" என்றார். 

சுவிஸ் தமிழ் சங்கத்தின் சார்பில் திரு.ரட்ணகுமார் அவர்கள் தனதுரையில், "ஆரம்ப காலம்முதல் வீரமக்கள் தினத்திற்கான தமது முதலாவது போஸ்டரில் தொடங்கிஇன்று 25வருடங்களாக ஒற்றுமையை வலியுறுத்தி அதற்காக செயற்பட்டு வருவது புளொட் அமைப்பே என்றும், அது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்" என்றும் குறிப்பிட்டதுடன், அதுபோல் நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பிரதம விருந்திராக கலந்து கொண்டிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றினார். 

புளொட் தலைவர் தனதுரையில், 

"கடந்த 25வருடங்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் மூத்த அரசியல் தலைவருமான அமிர்அண்ணர் (அமிர்தலிங்கம்) அவர்கள் இறந்த நாள் தொடக்கம் எமது தலைவர் உமாமகேஸ்வரன் அவர்கள் இறந்த நாள் வரையான காலப்பகுதியை 'வீரமக்கள் தின'மாக கடந்த 25 வருடங்களாக நினைவுகூர்ந்து வருகின்றோம்.

இன விடுதலைக்கான போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அனைவரையும் நினைவு கூருவதென்பது, அவர்கள் முன்னெடுத்த இன விடுதலை கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து இலக்கினை அடைய நாங்கள் உறுதியுடனிருப்பதையே  குறித்து நிற்கின்றது. 

தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டம் முகிழ் கொண்ட காலங்களிலிருந்த சர்வதேச அரசியல் ஒழுங்கானது விடுதலைப் போராட்டத்திற்கு பல வகையிலும் சாதகமானதாக இருந்தது. எமது இலட்சியத்தை அடைவதற்கான தந்திரோபாயங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவானதும், சாதகமானதுமான நிலைப்பாடுகள் இருந்தன. விரும்பியோ, விரும்பாமலோ பிராந்திய அரசியல் தேவைகளும் எமது போராட்டத்தினை கூர்மைப்படுத்துவதாகவே இருந்தது. அத்துடன் சர்வதேசத்தின் தேவைகளை எமக்கு சாதகமாக பாவிக்கக்கூடிய அரசியல் நிலைமைகள் அன்றிருந்தது.

பின்னர், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறத் தொடங்கும்போது அதற்கேற்ப எமது விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்ள நாம் தவறி விட்டோம். இதுவே எமது இன்றைய நிலைக்கு காரணமென எனது பார்வைக்கு புலப்படுகின்றது. 

மாறுபடும் சர்வதேச ஒழுங்குகளை கவனத்திலெடுத்து அதற்கொப்ப எமது போராட்ட வடிவங்களையும், அணுகுமுறைகளையும் நாம் மாற்றியிருந்திருக்க வேண்டும். 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற மார்க்ஸின் கூற்றுக்கேற்ப, நாமும் மாற்றங்களுக்கு உட்பட்டு எமது திசைவழிகளை மாற்றி இலக்கிற்கான பயணத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும்.

அதேபோல் எமது போராட்டத்திற்கு மிக முக்கிய பின்னடைவாக அமைந்தது எமக்குள் ஒன்றுமையின்மையே என்பதும் மறுதலிக்க முடியாதது. ஒரு ஆயுதப் போராட்டம் நடைபெறும் சமூகத்தில் ஆயுதமேந்திய போராட்ட குழுக்கள் தமக்கிடையே ஏற்படும் சிறுசிறு முரண்பாடுகளை ஆயுத முனையில் தீர்க்க முற்பட்டதும், அதன் விளைவுகளும் குறித்து நான் இங்குள்ள எமது மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

'ஏகம்' என்ற சிந்தனையில் உருவான சிங்கள ஏகாதிபத்தியத்திடமிருந்து ஜனநாயகத்தை மீட்கவே நாம் போராட முற்பட்டோம். அதே 'ஏகம்' என்ற சிந்தனை எம் ஒவ்வொருவருக்குள்ளும் குடிகொண்டது. அது எமது சிந்தனைக்குள் வரத் தொடங்கிய காலத்திலிருந்தே எம்மையுமறியாமல் நாம் 'ஜனநாயக விரோதி'களாகி விடுகிறோம். இது வெறும் ஆயுத போராட்ட தலைமைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் பொருந்தும். இதனை நான் கூறுவதற்கு அஞ்சவோ, வெட்கப்படவோ தேவையில்லையென்றே கருதுகின்றேன். 

எமது தவறுகளை நாமே உணர்ந்து சரியான பாதையில் பயணிக்காவிடின் இப்போது உள்ள சோக வரலாறு இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தலைமைகள் விடும் தவறுகளே அந்த சமூகத்தை இழி நிலைக்குள் தள்ளி விடுகின்றது. 

எது எவ்வாறாயினும், பல கோணங்களிலே நின்ற நாங்கள் அனைவரும்; 2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்திற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒரு அணியாக ஒற்றுமைப்பட்டுள்ளோம். 

தம்பி பிரபாகரன் தன்னுடைய தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம், அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவேயாகும். 

பிரபாகரன் தமிழீழத்தை ஒருபோதும் கைவிட மாட்டார், புலிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என தொடர்ந்து வந்த அரசுகள் கூறிவந்ததை நம்பிய சர்வதேசம், -முக்கியமாக எங்களுடைய பிரச்சினையில் அக்கறை கொண்டிருக்கின்ற நாடுகளான இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள்- இறுதியுத்தத்தின் போது அரசிற்கு மிகப்பெரிய அளவிலே ஆதரவைக் கொடுத்தது. விடுதலைப் புலிகள் என்றுமே ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வர மாட்டார்கள் எனக் கருதியே சர்வதேசம் யுத்ததிற்கு துணை புரிந்தது. இன்று இதுகுறித்து அவர்கள் எங்களுடன் அளவளாவும் போது, அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்ற ஒரு மனத்தாங்கலை வெளிப்படுத்துவதை எங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இன்று சர்வதேச நாடுகள் அனைத்தும் யுத்த காலத்தில்கூட இல்லாத அளவிற்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக அதிக கரிசனை கொள்கின்றன. அது எங்களுடைய ஒற்றுமையின் விளைவுதான் என்பதில் சந்தேகமில்லை. எங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்திய போது கடந்த மாகாணசபைத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவினை மக்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் சர்வதேசம் ஜெனீவா தீர்மானம் தொடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும், வெளிப்படுத்தி ஒரு தீர்வினைக் காண வேண்டுமென மிகத் தீவிரமாக இருக்கின்றது. 

சர்வதேசத்திலே வாழுகின்ற பல தமிழ் அமைப்புகளும், புலம்பெயர் தமிழர்களும் காட்டிய அக்கறையும், அவர்களுடைய செயற்பாடுகளும் இந்த ஜெனீவா தீர்மானம் மாத்திரமல்ல சர்வதேசமும் எங்கள்மேல் அக்கறை எடுப்பதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது என்பது யாவருமறிந்ததே. தொடர்ந்தும் புலம்பெயர் மக்கள், தமிழ் மக்களுடைய ஒரு நியாயமான தீர்வுக்காக தங்களுடைய அர்ப்பணிப்புகக்ளை செய்ய வேண்டும்.

போராட்ட காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன விடுதலைக்காக வழங்கிய தார்மீக, பொருளாதார ஆதரவுகள் காலத்தால் அழியாதன. அவர்களின் அந்த பலம் இல்லாமல் போராட்ட வரலாறு இவ்வளவு நீண்டிருக்க முடியாது. இவையாவும் வீணாகி விட்டதேயென நாம் சோர்ந்து விடவோ அல்லது துக்கித்துக் கொண்டோ இருந்துவிட தேவையில்லை. 

மாறாக, தாயகத்தில் நலிந்து போயுள்ள எமது உறவுகளுக்கு தங்களாலான பொருளாதார, மனோபலங்களை வழங்கி அவர்களையும் வருங்கால எமது சந்ததியினரையும் வளமான, அறிவார்த்தமானவர்களாக உருவாக்க வேண்டும். இதனூடாக எமது இனத்தின் இருப்பை மீண்டும் வலுவானதாக்க வேண்டும். 

பெருமளவிளான எமது உறவுகள் புலம்பெயர்ந்த நிலையில் தாயகத்தில் நாம் சகல வகைகளிலும் பலமற்றவர்களாக்கப்பட்டுள்ளோம். இந்நிலையை மாற்ற புலம்பெயர் சமூகம் உதவுகின்றது. அது இன்னும் பெரிய அளவில் உதவ வேண்டும். அவ்வாறு உதவிகளை வழங்கி இந்த மக்களை வாழவைக்க வேண்டும். முக்கியமாக கல்வி மேம்பாட்டுக்காக தங்களுடைய உதவிகளை பாரிய அளவில் தொடர வேண்டும். இவ்வாறு புலம்பெயர் சமூகம் உதவுவதன் மூலம் தான் தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்தக் கால்களிலே நிற்கும் பலம் பொருந்திய சமூகமாக உருவாக்க முடியுமென்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

ஒற்றுமை ஒன்றே இன்று எமது பலமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளில் நாம் மென்மேலும் பலப்பட்டு  ஒற்றுமையாக எமது உரிமைகளுக்காக ஒரே குரலில் ஓங்கியொலிக்க வேண்டும். மக்களின் உண்மையான விடுதலையை வென்றெடுப்பதே தமது இன்னுயிரையீந்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம். வரலாறு எம் மக்களின் வாழ்வை மீட்டுத் தரும்" என்றார். 

இதனைத் தொடர்ந்து காலையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சைகளில் பங்குபற்றியிருந்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் விசேட பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியோர் மற்றும் பல வழிகளிலும் உதவிகளை வழங்கிய அனைத்து வர்த்தக ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து புளொட் சுவிஸ் கிளையின் சார்பில், சுவிஸ்கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவராகிய சுவிஸ்ரஞ்சன் அவர்கள் நன்றியுரை யாற்றுகையில்...  

நடனம் மற்றும் நாட்டியங்களை ஒழுங்கு செய்து தந்த திருமதி ஜெயவாணி குகராஜசர்மா, நடனம் மற்றும் நாட்டியங்கள் உட்பட அனைத்து கலைநிகழ்வுகளையும் அளித்த மாணவ, மாணவிகளுக்கும்   பட்டிமன்றங்களை தலைமை தாங்கி நடாத்திய திரு விவேகாநந்தன் மாஸ்டர் மற்றும் திரு. பற்றிக், திரு மயூரன், திரு பொலிகை ஜெயா, திரு. செல்வராஜா மாஸ்டர், திரு. சிவசோதிலிங்கம், திரு சண்முகராஜா.. 

அத்துடன் பரீட்சைக்கு தலைமை தாங்கியது முதற்கொண்டு  நடுவர்களாகவும் மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்தவர்கள், கலை நிகழ்ச்சிகளில் சரீர உதவி, நிதியுதவி, போட்டோ உதவிகள் என பல்வேறு உதவிகளைப் புரிந்த திருமதி இரட்ணகுமார், திருமதி கௌரி ஜெகநாதன், திருமதி கருணாகரன், திருமதி வர்ணகுமாரன்  திருமதி அரியராஜசிங்கம், திருமதி இரதீஸ்வரன், திருமதி வாகீசன், திருமதி ஜெயமோகன், திருமதி ஜெயவாணி குகராஜசர்மா, திருமதி சண்முகராஜா, திருமதி புஷ்பானந்தசர்மா, திருமதி செல்வி ஜெகன், திருமதி செல்வக்குமாரன் மற்றும் திரு வாகீசன்,  திரு சண்முகராஜா, திரு மயூரன், திரு ஜெகநாதன், திரு இரட்ணகுமார், திரு. பண்டிதர், திரு முருகதாஸ், திரு தேவன் கிளௌரூஸ், திரு. வீடியோ சுதா (வீடியோ), திரு இந்திரன் (சவுண் சிஸ்டம்), திரு. நவம் (மண்டப சோடனை உதவி) திரு சஜந்தன் ரதீஸ்வரன், திரு ஆகாஸ் புவனேந்திரன், அத்துடன் புளொட் தோழர்கள்,ஆதரவாளர்கள் மனோ, சிவா, பிரபா, வரதன், செல்வபாலன், கணேஷ், செல்லப்பா, ராஜேந்திரம், ரமணன், குமார், புவி, ஸ்ரீ, யோகன் உட்பட பலரும் "பல பொறுப்புக்களை" பகிந்தெடுத்து செய்தமைக்காகவும்....

மற்றும் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் யுத்தம் உட்பட பலவழிகளிலும் பாதிக்கப்பட்டு வாழும் மக்களுக்கு உதவும் முகமாக பலவழிகளிலும் உதவிகள் புரிந்த சுவிஸ் வர்த்தக ஸ்தாபனங்களான...
வேலா கிரடிட் (வரதன் சூரிச்), ஏ.ஜீ.எஸ் கியோஸ்க் (அப்பையா கடை சூரிச்), சிவா ட்ரவல்ஸ் (சிவா பேர்ன்), சென்னை சில்க்ஸ் (ரஞ்சன் சூரிச்), இம்போர்ட் தாஸ் (சிறீதாஸ் சூரிச்), எஸ்.கே.ரி சொப் (நாதன் கடை சூரிச்), மிதுர்  ஜூவலரி (சங்கர் சூரிச்), முனியாண்டி விலாஸ் (லோகன் சூரிச்), ஈரோ ஹோம் போக்கல் (சந்திரன் பேர்ன்), திவா மார்க்கட்டிங்  (மனோ லுசேர்ன்), சுவிஸ்கான் (மகேந்திரன் லுகானோ), என்.எஸ். ஜூவலரி (சாந்தன் சூரிச்), எல்லாளன் இறைச்சிக்கடை (கண்ணன் லுசேர்ன்), ஸ்டேன்லி லோன்ஸி (ஜோன் சூரிச்), சாய் ரேடர்ஸ் (சாய்ரவி சூரிச்), கமல் ட்ரேடிங் (கமல் ஓல்டன்), ஏசியன் எண்டர்பிரைஸ் (பேரின்பம் சூரிச்)
வில்லியம் சேர்விஸ் Gmbh (கஜன் சூரிச்), கனி கேஸ் அண்ட் கறி (கஜன் சூரிச்), நிம்மி கடை (மணி சூரிச்), சோலோ மூவிஸ் (வசி சொலத்தூண்), எஸ்.பி.ரி சொப் (பாஸல் ரவிகடை)

உட்பட மற்றும் இதில் தெரிந்தோ, தெரியாமலோ பெயர் தவறவிட்டவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது நன்றியினை புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான திரு சுவிஸ்ரஞ்சன் அவர்கள் தனது நன்றியுரையின் போது தெரிவித்துக் கொண்டார். 

ந்தன. 
நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. 

ad

ad