புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2014


விடுதலைப் புலிகள் சந்தேகநபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்தது நீதிமன்றம்!
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சந்தேகநபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பான தனது தீர்மானத்தை வவுனியா மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் நேற்று திங்கட்கிழமை வழங்கினார்.
வவுனியாவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணேசரத்தினம் சாந்ததேவன் என்பவருக்கு எதிரான வழக்கிலேயே இந்த  முடிவை நீதிபதி அறிவித்தார்.
பூஸா முகாமிலும் நாலாம் மாடித் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டிருந்த சமயம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட எதிரிக்கு, அவர் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை அளித்தால் குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார் என்று ஆசை காட்டி, அழுத்தம் கொடுத்து, அவர் கைப்பட அந்த வாக்குமூலம் எழுதிப் பெறப்பட்டது என எதிரித் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வாக்குமூலத்தை, தாமாக - சுயமாக - விரும்பி எதிரி வழங்கினாரா, அப்படி வழங்குவதற்கான நேர்மையான மனநிலையில் அவர் இருந்தாரா என்பது குறித்து நீதிமன்றம் சந்தேகமடைவதாகத் தெரிவித்தார்.
அதனால் அந்த வாக்குமூலத்தை எதிரிக்கு எதிரான சாட்சியமாக ஏற்கமுடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்துக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தவும், வன்செயல்களை முன்னெடுக்கவும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து இயங்கினார் என இந்த வழக்கில் எதிரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் மேற்படி முடிவை அடுத்து இந்த வழக்குக் குறித்து மேலதிக தீர்மானங்களை எடுத்து நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்துவதற்காக பிறிதொரு திகதிக்கு அதனை ஒத்திவைக்கும்படி அரசுத் தரப்பில் கோரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ad

ad