புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2015

கிழக்கில் தமிழ் கூட்டமைப்பு முதலமைச்சர் பெறுகின்றதா, சபை கலைகின்றதா?


இலங்கை மட்டுமல்லாது சர்வதேசமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு முழுச் சர்வாதிகாரக் குடும்பத்திற்கும் எதிராக முழுநாட்டு மக்களும் வாக்களித்துள்ளார்கள். 
சர்வாதிகாரிகள் தோற்கும் நிலையிலும் எப்போதும் வெற்றியின் மிதப்பில்தான் மூழ்கிக் கொண்டிருப்பார்கள். என்பது வரலாறு. இந்த வாக்கியங்கள் இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது என்று நாங்கள் எங்களது பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படியே மஹிந்தர் நேற்று வரையும் நான்தான் மீண்டும் ஜனாதிபதி என்று மார்தட்டிக் கொண்டிருந்தார்.
மஹிந்தருக்கு மைத்திரி மூலமாக சந்திரிகா அம்மையார் மரண அடி அடித்துள்ளார். இன்னும் அம்மையார் அடித்து வருகின்றார். மஹிந்தர் எழும்ப முடியாத ஒப்பேரசன் ஆரம்பித்து விட்டது.அதன் எதிரொலி கிழக்கு மகாண ஆட்சியிலும் மாற்றம் வருகின்றது.
கிழக்கில் கூட்டமைப்பு வெற்றி
கடந்த கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் கூட்டணியின் ஒரு ஆசனம் திருடப்பட்டு அதன் மூலம் அரசு ஆட்சியமைத்தது. அதனால்தான் தற்போது கூட்டமைப்பு 11 ஆசனங்களுடன் உள்ளது. மஹிந்த கம்பனியின் திருட்டினால் அரசு 3 ஆசனங்களைத் தட்டிப்பறித்தது. அதாவது கூட்டமைப்பின் ஒரு ஆசனத்தையும் கூட்டமைப்புக்குச் சேர வேண்டிய 2 போனஸ் ஆசனங்களையும் மஹிந்த கம்பனி பறித்தெடுத்து முஸ்லிம் காங்கிரசையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்திருக்கின்றார்கள். மஹிந்தவின் அந்த ஆட்சிதான் இப்போது ஆட்டம் கண்டு விட்டது.
கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்பு
ஆனால் கூட்மைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க இணைந்து ஆட்சி அமைப்போம் அதற்காக எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார் என்றும் முதலமைச்சர் பதவி மற்றும் சகல அமைச்சர் பதவிகளையும் மு.கா பெறலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவைகளையெல்லாம் மு.கா உதாசீனம் செய்துவிட்டு ஹக்கீம் தனது அமைச்சுப் பதவி பறிபோய்விடும் என்பதற்காக மஹிந்தவுக்கு முட்டுக் கொடுத்து வந்தார்.
ஆனால் கிழக்கில் மு.கா கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று பெருமளவு மக்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பை ஹக்கீம் நிறைவேற்றவில்லை. இது கறைகடிந்த ஒரு வரலாற்றுத் தவறாக நாங்கள் அப்போது பதிவு செய்திருந்தோம். அந்த நேரம் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் இறுதியாக விட்ட செய்தியொன்று எங்களுக்கும் ஒரு காலம் வரும் அப்போது பார்ப்போம் என்று சொல்லியிருந்தார்.
அந்தக் காலம் வந்து விட்டது.
தற்போது கூட்டமைப்பு 11 ஆசனங்களுடன் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. அதனால் ஆட்சி கோரும் நிலை கூட்டமைப்பின் கையில் உள்ளது. இந்த வாரம் தமிழ் கூட்டமைப்பின் முதலமைச்சர் ஆதிக்கத்தின் கீழ் கிழக்கில் ஆட்சி மலர்கின்றது. முதலமைச்சர் பதவி விடயத்தில் மு.கா வாயே திறக்க முடியாது காரணம் கூட்டமைப்பு தானாகத் தரவிருந்த முதலமைச்சர் பதவியை மு.கா தட்டிக் கழித்தது.ஆனால் இப்போது மு.கா தங்களுக்குத்தான் முதலமைச்சர் வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கின்றது.
மற்றும் முதலமைச்சர் பதவி என்பது எந்வொரு அதிகாரமும் அற்ற தனிமனிதனை அலங்கரிக்கும் பதவி என்று அண்மையில்தான் மு.கா செயலாளர் நாயகம் ஹசனலி தெரிவித்திருந்தார். தனிமனிதனை அலங்கரிக்கும் பதவி உங்களுக்கு எதற்கு விட்டு விடுங்கள் தமிழ் கூட்டமைப்புக்குப் போகட்டும். அவர்கள் காட்டுவார்கள் தனிமனிதனின் அலங்கரிப்பா அல்லது மக்களின் அலங்கரிப்பா என்பதை. இந்த நிலையில் மு.கா முதலமைச்சர் பதவி கோரி நிற்க முடியாது. அப்படியானால் முதலமைச்சர் பதவி தமிழ் கூட்டமைப்புக்குத்தான் சேர்கின்றது. ஹக்கீம் தரப்பு எந்நத வகையிலும் முதலமைச்சர் கேட்டு நிற்க முடியாது.
கிழக்கு மாகாண ஆட்சியின் ஆசனங்களின் எண்ணிக்கை
கிழக்கு மாகாணத்துக்கான மொத்த ஆசனம் 35+2  = 37 அதாவது 35 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களுமாகும். இதில் மஹிந்த அரசு அணி 12+2 = 14 அதாவது 12 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களும் பெற்றிருந்தது. கூட்டமைப்பு 11 ஆசனங்களும் மு.கா 7 ஆசனங்களும் ஐ.தே.க. 4 ஆசனங்களும் ஹெல உறுமயவின் கட்சியின் 1 ஆசனமும் ( திருகோணமலை) உள்ளது.
தற்போதைய நிலை
கூட்டமைப்பு 11, மு.கா.7, ஐ.தே.க.4, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அணி 4  அதாவது இறுதித் தறுவாயில் அதாவுல்லாவின் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஆரிப் சேர்ந்து மொத்தமாக மற்றும் இறுதியாக மைத்திரி பக்கம் இணைந்து ஹெல உறுமய ஆசனம் ஒன்றும் கொண்ட 27 ஆசனங்களும் அதாவுல்லா 2 மற்றும் மஹிந்தர் அணி 8 எல்லாமாக 10 ஆசனங்கள் உள்ளது. எதிர்கட்சித் தலைவராக அதாவுல்லா அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை நியமிக்கப்படலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கூட்டமைப்பின் 11 ஆசனங்களுடன் மு.கா 7, ஐ.தே.க. யின் 4 ஆசனங்களும் இணைந்து 22 ஆசனங்களுடன் நல்லதொரு ஆட்சியை கிழக்கு மக்கள் கண்டிருக்கலாம். அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்த துர்ப்பாக்கிய மக்களாக கிழக்கு மக்கள் உள்ளார்கள். அதற்கான முழுப் பொறுப்பும் ஹக்கீமையே சாரும். சேரும்.
ஆனாலும் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடிய நல்லதொரு சூழல் அன்று தொட்டு இன்று வரையும் உள்ளது. அந்த நல்ல வாய்ப்பு இன்னும் உள்ளது. அந்த வாய்ப்பு இன்னும் நழுவிப் போகவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் மீண்டும் மீண்டும் அந்த வாய்ப்பை மு.கா. தட்டிக் கழித்து வருகின்றது.
கூட்டமைப்பு ஆட்சி அமைக்கின்றது
மத்தியில் கூட்டமைப்புக்கு தற்போதைய அதிபர் மைத்தியிரின் ஆட்சியில் அமைச்சுக்கள் வழங்கப்பட்ட போதும் கூட்டமைப்பு மறுத்து விட்டது. ஆனால் கிழக்கில் அப்படியல்ல. கிழக்கு மாகாணத்தை கூட்டமைப்பு விட்டுக் கொடுக்கமாட்டாது. மஹிந்தவுடன் முஸ்லிம் அணிகள் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகள் பெற்றுக் கொண்டு தமிழர் பகுதிகள் கடந்த 30 வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. வருகின்றது. நாங்கள் எங்களது பல கட்டுரைகளில் கட்டியம் கூறியிருந்தோம்.
சிங்களவர்களுடன் தமிழர்கள் பிரிந்து இருக்கும் வரையும்தான் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் நினைத்த மாதிரி சாதிக்கலாம் அரசியல் வியாபாரம் செய்யலாம். ஆனால் ஒரு காலம் வரும் அப்போது அரசுக்கு வெளியில் இருந்து கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் போது இந்த வியாபாரிகளின் கொட்டம் அடங்கும் என்றும் கூட்டமைப்பின் ஆசீர்வாதம் இல்லாது எதனையும் பெறமுடியாது செய்ய முடியாது என்றும் கடந்த ஆண்டு எழுதியிருந்தோம். இப்போது கூட்டமைப்பு மத்தியில் அரசுக்கு ஆட்சிக்கு ஆதரவு அளிக்கின்றது.
இப்போது கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியைக் கோரி நிற்கின்றது. அதற்கு மு.கா. முட்டுக்கட்டை போட்டு நிற்கின்றது. கூட்டமைப்புக்குத்தான் அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் மத்தியிலும் கருத்து வலுப் பெறுகின்றது. மறுபுறம் தற்போதைய முதலமைச்சர் நஜீட்டையே நியமிக்க வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம் காங்கிரஸ் அணி நஜீட்டிடம் பேசி நஜீட்டையும் சந்திரிகா அம்மையாரையும் சந்திக்க வைத்துள்ளார்கள். அதற்காக அந்த முஸ்லிம் காங்கிரஸ் அணி நஜீட்டுக்கு ஆதரவளிப்பதாகச் சொல்லியுள்ளார்களாம்.
இதே நேரம் தமிழர் முதலமைச்சராகவும் முஸ்லிம் ஆளுநராகவும் சிங்களவர் பிரதம செயலாளராகவும் நியமிக்க புதிய அரசு ஆலோசித்து வருதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் முன்னாள் பொலிஸ் அதிகாரி பொத்துவில் மஜீட் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தவலும் கசிந்துள்ளது.
மு.கா சை நம்ப முடியாது
இந்த நிலையில் மு.கா சை நம்பி கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு தயங்குவதாகவும் கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் மு.கா எந்த நிமிடமும் ஆட்சியைக் கலைத்து விடுபவர்கள். மஹிந்தர் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளர், கொள்ளைக் கூட்டம் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லைத்தான். என்றாலும் மஹிந்தரிடம் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் அனுபவித்து விட்டு விடிந்தால் கல்யாணம் பொண்ணு பிடிக்கவில்லையென்று இரவோடு இரவாக கம்பி நீட்டிய மாப்பிள்ளை போன்று மு.கா மற்றும் ரிஷாத் அணி மஹிந்தருக்கு செய்த அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது.
மு.கா மஹிந்தரை விட்டு வெளிவரத் தயாரில்லை. ஆனால் ரிஷாத் தனது தனிப்பட்ட காரணங்களால் மஹிந்தரை விட்டு வெளியான போது கிழக்கில் ரிஷாத்திற்கான ஆதரவும் வரவேற்பும் அதிகரித்தது. அதனால் மு.கா. உடனடியாக மஹிந்தருக்கு கம்பி நீட்டினார்கள். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வெளியானால் அதில் ஒரு நீதி நியாயம் நேர்மை இருந்திருக்கும். கடைசி நேரத்தில் காலை வாரினால் அதை என்னவென்று சொல்வது.
ஏற்கனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது நல்ல பெயரில்லை. இப்போது மஹிந்தருக்கு இவர்கள் செய்த கழுத்தறுப்பினால் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீதும் ஒரு மேசமான பார்வையை ஏற்படுத்தியுள்ளது. ரிஷாத் வந்தோ அல்லது மு.கா வந்தோ முஸ்லிம்களிடம் மாற்றம் ஏற்படவில்லை. நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒட்டுதொத்த முடிவு மைத்திரிக்கு வாக்களிப்பது என்ற ஒத்த கரத்தில்தான் இருந்தார்கள். மக்களின் முடிவுக்குப் பின்னால் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் வந்து மறைந்து விட்டார்கள்.
அதனால் இந்த ஹக்கீம், ரிஷாத் வந்துதான் முஸ்லிம் மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்று யாரும் தப்பான கணக்குப் போடுவது தப்பு. இப்போது ஹக்கீம் தரப்பு தம்பட்டம் அடிக்கின்றார்கள் இதுகள் வந்துதான் முஸ்லிம்களிடம் மாற்றம் வந்து விட்டதா. கட்டிடம் ஜொலிக்கின்றது அத்திவாரம் அழுகின்றது.
கிழக்கு மாகாண சபை கலைகின்றதா
கூட்டமைப்பும் மு.கா அணியும் கொழும்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது. அதனால் மாகாண சபையை கலைத்துவிடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு உள்ளதாம். அத்துடன் மு.கா சும் சபையைக் கலைத்து விடும் நிலையில் உள்ளதாம். காரணம் தமிழருக்கு முதலமைச்சர் பதவி செல்வதை முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லையாம்.
அதனால் சபையைக் கலைத்து விட்டு புதிய தேர்தலில் அதாவுல்லா இல்லாத தேர்தல் மூலமாக அதிக ஆசனங்களைப் பெறமுடியும் என்று கணக்கொன்று பார்க்கின்றார்கள். அத்துடன் அம்பாறையில் அதாவுல்லா இல்லாத தேர்தல் மூலமாக மு.கா குறைந்தது 9 ஆசனத்தை எதிர்பார்க்கின்றார்கள். அதனால் கூட்டமைப்பு இல்லாமல் அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற கணக்கில் உள்ளதாம்.
அதாவது தனக்குக் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை கூட்டமைப்பிடம் முதலமைச்சர் பதவி போய்ச்சேரக் கூடாது என்ற நிலையில்தான் அந்த முஸ்லிம் காங்கிரஸ் அணி உள்ளதாம். இந்தப் போக்கானது கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனவிரிசல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றதா. மு.கா. முதலமைச்சர் விடயத்தில் விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடித்தால் சபை கலையும்.
புதிய தேர்தலில் கூட்டமைப்பு 16-17 இடங்களைக் கைப்பற்றும் போனஸ் அடங்கலாக. ஆனால் நானா நீயா தமிழனா முஸ்லிமா என்று போட்டியொன்றை மு.கா உருவாக்கினால் கூட்டமைப்பு தனியாக ஆட்சி அமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. காரணம் அந்தளவு தமிழ் மக்கள் வடக்கில் போன்று கூட்டமைப்பை வெல்ல வைப்பார்கள். அந்தளவு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.
மட்டக்களப்பில் பிள்ளையான், கருணா, அம்பாறையில் இனியபாரதி இல்லாத தேர்தலில் கூட்டமைப்பு அமோக வெற்றியடையும். கூட்டமைப்பு தனியாகக் களமிறங்கி 16-17 இடங்களைக் கைப்பற்றினால் சுமார் 2.70.000 வாக்குகளைப் பெறும். 2-3 ஆசனங்கள் மட்டும் ஆட்சியமைக்கத் தேவைப்படும். அந்த 2-3 ஆசனங்களுக்காக 3 முஸ்லிம் வேட்பாளர்களை 3 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு நிறுத்தினால் கூட்டமைப்பு கிழக்கில் தனியாக ஆட்சி அமைக்கும் என்பதை எத்தி வைப்போம்.
அதனால் மு.கா விசப் பரீட்சையொன்றில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றப் பார்க்கின்றது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள்தான் மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மு.கா வும், ரிஷாத் அணியும் எதிர்வரும் கிழக்கு மாகாணத் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம். அப்படி அவர்கள் இணைந்து போட்டியிட்டாலும் ஆகக் கூடுதலாக 11-12 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கும்.
கிழக்கில் கூட்டமைப்பைத் தவிர்த்து மு.கா ஆட்சியமைக்க முடியாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். கிழக்கில் கூட்டமைப்பின் அசீர்வாதமின்றி எதனையும் சாதிக்க முடியாது. முதலமைச்சர் பதவியும் பெற முடியாது. இரண்டரை வருடம் வீதம் தமிழர் முஸ்லிம் முதலமைச்சர் பதவியில் பங்கு போடலாம் என்ற ஒரு உடன்பாட்டுக்கு இரு அணியும் வந்தாலும் முஸ்லிம் முதலமைச்சர் காலம் அடுத்த மாதம் முடிகின்றது. அதனால் தமிழர் ஒருவர் முதலமைச்சர் அடையும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
எப்படிப் பார்த்தாலும் மு.கா வுக்கு முதலமைச்சர் பதவி தற்போது கிடைக்க மாட்டாது. அப்படிக் கிடைத்தாலும் அது கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்பின் மூலமாகத்தான் கிடைக்கும். ஆனால் கூட்டமைப்பு முதலமைச்சருடன் ஒரு அமைச்சும் பெற வேண்டும் என்ற கருத்து பலமாக இருந்து வருகின்றது.
கிழக்கில் மாற்றுச் சக்தி வேண்டும்
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின்பு எதிர்பார்க்கப்படுகின்ற பொதுத் தேர்தலில் போது கிழக்கில் முஸ்லிம்கள் மத்தியில் அரசு அணி.மு.கா அணி தவிர்ந்த மூன்றாவது அணியொன்று உருவாகுமேயானால் மட்டும்தான் எதிர்காலத்திலாவது கிழக்கில் கூட்டமைப்புடன் முஸ்லிம்கள் இணைந்த ஆட்சியை எதிர் பார்க்கலாம். ஹக்கீம் கம்பனி இருக்கும் வரையும் கிழக்கில் தமிழ் முஸ்லிம் இன உறவு வராது. வரவும் விரும்ப மாட்டார்.
தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்துதான் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதுதான் கூட்டமைப்பின் கருத்துக்கள். முஸ்லிம்கள் அந்தக் கருத்துக்களை நன்கு உணர்வுபூர்வமாக உணர வேண்டும். அந்த உண்மைகளை நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தல் நிரூபித்துக் காட்டியுள்ளது.
தனிமனிதனை அழகுபடுத்தும் முதலமைச்சர் பதவியை மு.கா தவிர்த்துவிட்டு கிழக்கில் ஊழலற்ற நல்லாட்சி வேண்டுமானால் கூட்டமைப்பிடம் முதலமைச்சர் இருப்பதுதான் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது. முஸ்லிம் அரசியல் வியாபாரக் கூட்டங்களை நம்பி முஸ்லிம்கள் இனிமேலும் ஏமாறக் கூடாது.
கிழக்கு மாகாணமாக இருக்கட்டும் மத்தியில் எம்பி அமைசச்ராக இருக்கட்டும் முஸ்லிம் அரசில்வாதிகள் நன்றாக உழைத்துள்ளார்கள். கொழும்பில் வீடுகள் வாங்கியுள்ளார்கள். இந்த முஸ்லிம் அரசியல் வியாபாரிகளால் முஸ்லிம் மக்கள் அடைந்த நன்மை என்ன.
கடந்த காலங்கள் என்பது ஆயுத காலமாகவும் கசப்பான காலமாகவும் பார்ப்போம். இனிவரும் காலங்கள் நல்ல காலங்களாக மாற்றலாம். அதற்காக முஸ்லிம் மக்கள் தயாராக வேண்டும். மத்தியில் கூட்டமைப்பினரின் பலம் அதிகரித்துள்ளது. கூட்டமைப்பினர் இதய சுத்தியுடன் முஸ்லிம்களை கூட்டமைப்புடன் இணக்க அரசியலுக்கான அறைகூவல் விடுத்த வண்ணம் உள்ளார்;கள்.
மக்களுக்கான அரசியல் இல்லை
இன்றைய முஸ்லிம் அரசியலில் உள்ள அதிகமானவர்கள் ஏதாவது தனக்குக் கிடைக்குமா என்ற நோக்கத்தில்தான் உள்ளார்கள். மக்களுக்காக இன்று முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இல்லை. மக்களுக்கான முஸ்லிம் அரசியல் இன்று இல்லை.நாங்கள் சொல்கின்ற இந்த மூன்றாவது அணியாக கூட்டமைப்புடன் இணக்க அரசியலுக்கான அணியாக ஒரு அணி கிளம்புகின்ற போதுதான் இந்த முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள். மறைந்து விடுவார்கள் இந்த முயற்சிக்கு கிழக்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.

கூட்டமைப்பின் குரல்கள் ஒலிப்பு
அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான சில சிங்களச் சக்திகள் செயல்பட்டிருந்தது. முஸ்லிம்களின் உணவில், உடையில், மதத்தில் இந்தச் சக்திகள் கைவைத்த போது பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்காக பேசியது கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
இத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் முஸ்லிம்களுக்காக பேசியது இந்த மூன்று பேரும்தான். இது முஸ்லிம் மக்களுக்கு அவமானம் இல்லையா? முஸ்லிம் மக்கள் வாக்களித்து தங்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பும் முஸ்லிம் எம்.பிக்கள் எதற்காக உள்ளார்கள். எதற்காக முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதையாவது முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் வாக்காளர்கள் மாறாதவரை இந்த முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் இப்படித்தான் முஸ்லிம்களை விற்று விடுவார்கள்.
மஹிந்தவுக்கு வக்காளத்து
முஸ்லிம்களின் உயிரிலும் மேலான பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டபோது முஸ்லிம் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் தற்போதைய பிரதமர் ரணில் மற்றும் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன். சுமந்திரன் ஆகியோர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்று மார்தட்டுகின்றவர்கள் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்றும் நாட்டில் எந்தவொரு பள்ளிவாசல்களும் உடைக்கப்படவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்கள்.
சம்பந்தனையும் ரணில் விக்கிரமசிங்கவையும் உரையாற்ற விடாது அரசுக்கு வக்காளத்து வாங்கினார்கள். முன்னாள் எம்.பி அஸ்வர் இவர்களைப் பேச விடாது இடைஞ்சல் செய்து குறுக்கீடு செய்து கொண்டிருந்தார் என்பதை கிழக்கு மக்கள் மறந்து விடுகின்றார்கள்.
முஸ்லிம்களை விற்று அரசியல் பிழைப்பு நடத்தும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளை மக்கள் தூக்கியெறிய வேண்டிய காலம் வந்து விட்டது மத்திய, வடமேல் ஊவா மாகாண முஸ்லிம் மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் அந்த மக்கள் நல்ல தீர்ப்பைக் கொடுத்துள்ளார்கள்.
அப்படியான தீர்ப்பை கிழக்கு மாகாண முஸ்லிம்களும் கொடுக்க வேண்டும். எப்போதும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் ஏமாந்த மக்களாகவே உள்ளார்கள். மக்கள் மாறாத வரை எந்த மாற்றமும் வராது. கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மாறாத வரை முஸ்லிம்கள் மாறாதவரை முஸ்லிம் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது முஸ்லிம் அரசியல்வாதிகளை வாழவைக்க ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் பலிக்கடாவாக்கப்பட்டு வருவதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
-எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com

ad

ad