புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2015

இலங்கையில் மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் மாணவி முதலிடம்

இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய
மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
டென்சிகாவின் தந்தையார் தேவதாஸ் (சின்னவன்) சிறந்த உதைபந்தாட்ட வீரர் ஆயினும் விபத்தொன்றின் காரணமாக அவர் விளையாட முடியாதவராகிவிட்டார்.
தன் விளையாட்டு கனவை தன் பிள்ளைகள் மூலம் அவர் காணமுனைவதன் அடையாளமே டென்சிகா. ஏழ்மையான குடும்பத்தின் நட்சத்திரமாக இப்பொழுது டென்சிகா சாதித்திருக்கின்றாள்.
இந்த மாணவியின் வெற்றி குறித்து வாழ்த்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க நிர்வாகம் அதனது வாழ்த்துச் செய்தியில் பின்வரும் வேண்டுகோளை விடுத்து இருக்கின்றது.
"எமது அன்புக்குரிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று உலகெலாம் பரந்திருக்கும் பழைய மாணவர்களே மற்றும் சமுக ஆர்வலர்களே! மாணவி டென்சிகாவை இன்னும் மேலும் சிறந்ததொரு சாதனையாளராக மாற்றவேண்டுமாயின் அவருக்கு உங்களால் முடிந்த ஊக்கத்தையும் உதவிகளையும் செய்ய வேண்டிய கடமைகள் எல்லோருக்கும் உண்டு. அவருக்கு பயிற்சிக்கும் போட்டிக்குமான விலையுயர்ந்த சப்பாத்துக்கள் துறைக்கான ஆடைகள் போஷாக்கான உணவு என்பன அவசியம் என்பதால் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான அனுசரணைகளை வழங்க வேண்டியது எமது கடமையென்பதையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் மண்ணில் இருக்கும் மாணவர்கள் யுத்த கால வடுக்களை சுமந்து வாழும் நிலையிலும் போசாக்கு இல்லாத நிலையிலும் சாதனைகள் படைத்து வருகின்றார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டியவர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள்.
எம் மாணவ செல்வங்களின் வாழ்வில் ஒளியேற்றும் பணியை அனைவருமாக ஒன்றிணைந்து ஆற்றுவோம்.

ad

ad