யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒருவரை நல்லூர் பகுதியில் வழிமறித்து தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று
பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் வேலை முடித்து விட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒருவரை நல்லூர் பகுதியில் வழிமறித்த ஐவர் அவரை நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பொது மலசல கூடத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரது ஆடைகளை களையுமாறு வற்புறுத்தியதுடன் அவரையும் தாக்கியுள்ளனர். அத்துடன் அவரிடமிருந்து சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் தொலைபேசி என்பவற்றையும் பறித்துச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டினையடுத்து நேற்று மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். இன்னும் இருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று கைதான மூவரும் இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். குறித்த மூவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.