புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2015

மூன்று கோடி ரூபாவில் ஞானம் அறக்கட்டளையால் முல்லை வித்தியானந்தாவிற்கு விடுதி வசதி


முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் பௌதீக தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஞானம் அறக்கட்டளையால் மூன்று கோடி ரூபா பெறுமதியில் ஆண் பெண்களுக்கான தங்குமிட விடுதிகள் அமைக்கப்பட்டு நேற்று பாடசாலை சமுகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
வைபவ ரீதியாக ஞானம் அறக்கட்டளையின் நிறுவுனர் திருமதி.அல்லிராஜா பாஸ்கரன் மற்றும் லைக்கா மொபைல் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோரால் இது கையளிக்கப்பட்டுள்ளது
புதிய நம்பிக்கையை கொடுக்கும் ஞானம் அறக்கட்டளையின் மனிதாபிமானப் பணிகள்
இலங்கையில் நடந்து முடிந்த யுத்தம் பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்தது. பல ஆயிரம்பேரை அங்கவீனர்களாக்கியது. பல ஆயிரம் பெண்களை விதவைகளாக்கியது. பிள்ளைகளை அநாதைகளாக்கியது, குடும்பங்களை சிதைத்து சீரழித்தது.
ஆறு வருடங்கள் ஆகிவிட்டபோதும், யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும், வலிகளும், இழப்புக்களும் இன்னும் தமிழ் மக்களை விட்டு அகலவில்லை. பல ஆண்டுகளுக்கு அகலவும் மாட்டாது.
ஒரு பக்கம் உயிர், உடமை, வாழ்வாதார இழப்புக்கள், மறுபக்கம் இன விடுதலைக்கான உந்ததலும், அரசியல் உரிமைக்கான போராட்டமுமாக தமிழர்களில் ஒவ்வொரு விடியலும் விடிகின்றது.
அரசியல் உரிமையை வென்றெடுக்கும்வரை தமிழருக்கு ஓய்வென்பதே இருக்கப்போவதில்லை. இதற்கிடையே தமிழ் மக்களின் இழப்புக்களை ஈடுசெய்வதற்கும், கௌரவமான வாழ்வுக்கும் வழிசெய்ய வேண்டும்.
இழந்த உயிர்களை எவராலும் மீட்டுத்தர முடியாது. ஆனால் இழந்த வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும், இருக்கின்ற மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் நாம் முயற்சி செய்தால் முடியும்.
புலம்பெயர்ந்து வாழும் ஈழ உறவுகள் பொது உடன்பாடொன்றுக்கு இணக்கம் கண்டால் ஈழத்தில் தமிழர் வாழ்வை மிகக் குறுகிய காலத்தில் தூக்கி நிறுத்த முடியுமென அடிக்கடி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு யார்? முன்னிற்பது என்பதுதான் கேள்வியாக இருந்து வருகின்றது?
இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் பெருமிதம் அடையும் வகையில் திரு. அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையில் இயங்குகின்ற லைக்கா நிறுவனமானது, பார்வையாளராக இருக்காமல் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் பங்காளியாக களத்தில் இறங்கியுள்ளது. தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க தனது கரங்களை நீட்டியிருக்கின்றது.
கடந்த ஓராண்டு காலமாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனமாக செயற்பட்டு வருகின்ற லைக்காவின் கிளை நிறுவனமானது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், யுத்தத்தினால் சொந்த நிலம் இழந்து, வேர்கள் அறுக்கப்பட்டு இடம்பெயர்க்கப்பட்ட எமது மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க லைக்காவின் ஞானம் அறக்கட்டளை கருணை உள்ளத்தோடு முன்வந்திருக்கின்றது.
வவுனியாவின் பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் பகுதியில் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 150 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களின் அகதி வாழ்வுக்கு முற்றுப் புள்ளிவைப்பதற்கான அடிக்கல் நாட்டிய நிகழ்வு நேற்று ( 26.08.2015) அன்று சின்ன அடம்பன் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இந்த மக்கள் சொந்தக் காணிகள் இல்லாததால் அவர்களுக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளமுடியாதிருந்தது. ஆனால் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை அமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடமும்,பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிடமும் கோரிக்கைவிடுத்து இந்த மக்களுக்கு அரசாங்கம் அரசு காணிகளை வழங்கினால் தாம் 17.5 பில்லியன் ரூபா செலவில் 150 வீடுகளை கட்டிக் கொடுப்பதாக கூறினார்கள்.
நியாயமானதும், மனிதாபிமானமுமான இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் சின்ன அடம்பன் பகுதியில் அரச காணிகளை இந்த மக்களுக்கு வழங்கியுள்ளது. லைக்காவின் ஞானம் அறக்கட்டளை அமைப்பினரின் இந்த முயற்சிக்கு பக்கபலமாக இருந்து உதவி, ஒரு உடன்பாட்டையும் செய்து கொண்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சின் பங்கையும் பாராட்ட வேண்டும்.
புதிதாக அமைக்கப்படுகின்ற கிராமத்துக்கு ‘லைக்கா கிராமம்’ எனும் கௌரவ நாமம் சூட்டப்பட்டுள்ளது. உலகத் தமிழர்களின் ஒரு அடையாள அங்கமாகியுள்ள லைக்கா தொலைத் தொடர்பு நாமம், இலங்கையில் உயர்ந்த மனிதாபிமான பணியை பொறுப்பேற்றுச் செய்வதில் லைக்கா குழுமம் மட்டுமல்ல உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் அத்தனை பேரும் பெருமையடைகின்றனர்
லைக்கா கிராமத்தின் 150 வீட்டுத்திட்டப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால ஆரம்பித்து வைப்பதாக இருந்தபோதும், தற்போதைய அரசியல் சூழலில் அமைச்சுப் பொறுப்புக்களை ஒதுக்குகின்ற முக்கியமான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரால் வருகைதர முடியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அவருக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் சின்ன அடம்பன் பகுதிக்கு வருகை தந்து வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்து திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துவைத்தார்.
வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வில் சந்திரிக்கா அம்மையாரோடு சேர்ந்து லைக்கா குழுமத்தின் தலைவரும், ஞானம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான அல்லிராஜா சுபாஷ்கரன் தனது பாரியார் சகிதம் கலந்து கொண்டதோடு, லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, ஞானம் அறக்கட்டளையின் இணை ஸ்தாபகத் தலைவர் திருமதி ஞானாம்பிகை அம்மையார், லைக்கா குழுமத்தின் சர்வதேச செயற்பாடுகளுக்கான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி பாலசிங்கம் ராஜ்சங்கர், லைக்கா குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவர்களோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்மந்தன், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் வவுனியா அரச அதிபர், அரச அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட மனிதாபிமான உதவிகளிலேயே தனியார் நிறுவனங்கள் வழங்கிய மிகப் பெரும் உதவியாக லைக்கா குழுமமும், ஞானம் அறக்கட்டளையினரும் வழங்கும் இந்த உதவி அமைந்திருக்கின்றது.
உரிமையோடும், அன்போடும் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை லைக்கா மற்றும் ஞானம் அறக்கட்டளையின் தலைவர் மதிப்புக்குரிய சுபாஷ்கரன் அவர்கள் நெகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் மக்களுக்கும் பெரும் ஆறுதலாக அமைகின்றது.
லைக்காவின் நிழல் தமிழர்களுக்கு பாதுகாப்புக் கவசமாகட்டும், தொடரட்டும் உங்கள் மனித நேயப்பணிகள். லைக்கா மற்றும் ஞானம் அறக்கட்டளையின் நாமம் நிலைத்தோங்கட்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்த்துக்களோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ad

ad