புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2015

206 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்: ஜெ., தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–  “உண்டிகொடுத்தோர், உயிர் கொடுத்தோரே” என்ற புறநானூற்று வரிகளுக்கேற்ப திருக்கோயில்கள் வாயிலாக இறை அன்பர்களுக்கு அமுது படைக்கும் அன்னதானத் திட்டம் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் 2002 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 23 ஆம் நாளன்று மைலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தற்போது 518 திருக்கோயில்களில் நடைபெற்று வரும் அன்னதானத் திட்டத்தினால் ஒரு நாளைக்கு சுமார் 47809 பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்தத் திட்டம், ஆன்றோர்கள், சான்றோர்கள், இறையன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு பெரும் பயனளிக்கும் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 206 திருக்கோயில்களுக்கு அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்ட மன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, 206 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா 15.9.2015 அன்று துவக்கி வைத்தார். இதன் மூலம் திருக்கோயில் ஒன்றுக்கு 50 பக்தர்கள் வீதம், நாளொன்றுக்கு 10,300 பக்தர்கள் பயன்பெறுவர்.

கிராமப் புறங்களில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட 10,000 சிறு சிறு திருக் கோயில்களுக்கு முறையான பூஜை செய்திட ஏதுவாக, பித்தளைத் தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு ஆகியவை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும் என்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா 12.8.2014 அன்றுசட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, பூஜையே செய்ய வசதி இல்லாத 10,000 சிறு சிறு திருக் கோயில்களுக்கு தலா 2440 ரூபாய் மதிப்பிலான 5 பூஜைப் பொருட்கள், என மொத்தம் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பூஜைப் பொருட்களை வழங்கும் அடையாளமாக 5 திருக்கோயில் பூசாரிகளுக்கு பூஜைப் பொருட்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் பணிகளில் சமையல் செய்பவர், உதவியாளர், துப்புரவாளர் என்ற நிலைகளில் 673 நபர்கள் தினக் கூலி அடிப்படையிலும், 147 நபர்கள் தொகுப் பூதிய அடிப்படையிலும், என மொத்தம் 820 நபர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சீரமைத்திட தங்கள் பணியினை ஊதிய விகித அடிப்படையில் வரன்முறைப்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்களது குடும்ப சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, தினக் கூலி மற்றும் தொகுப் பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களது பணிவரன் முறை செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா 12.8.2014 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, திருக்கோயில்களில் நடைபெறும் அன்னதானத் திட்டத்தில் தினக்கூலி மற்றும் தொகுப் பூதியத்தில் பணியாற்றி வரும் 820 பணியாளர்களுக்கு பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியத்திற்கான ஆணையினை வழங்கிடும் அடையாளமாக 2 பணியாளர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைகளை வழங்கினார்’’என்று  கூறப்பட்டுள்ளது.

ad

ad