புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 செப்., 2015

மக்கள் ஆய்வு மையம் வெளியிட்ட கருத்து கணிப்புக்குப் பின் தி.மு.க.வின் முதல்வர் வேட் பாளராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்
என அவரது ஆதரவு மாவட்ட செயலர்கள் வலியுறுத்துவதால் கருணாநிதி, ஸ்டாலின் இடையே புகைச்சல் உருவாகி உள்ளது.
அதனால், பெரம்பலூர் சுற்றுப்பயண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ள ஸ்டாலின், முக்கிய முடிவு எடுக்க விரைவில் பெங்களூருக்கு செல்ல உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக மக்கள் ஆய்வு மையம் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில், தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என 31.56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அடுத்ததாக ஸ்டாலின் முதல்வராக 27.98 சதவீதத்தினரும் மூன்றாவதாக கருணாநிதிக்கு ஆதரவாக 21.33 சதவீதம் கருத்து கூறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் சிலரை தன் கோபாலபுரம் இல்லத்திற்கு அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதேபோல் ஸ்டாலினும் தன் ஆதரவு மாவட்ட செயலர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆலோ சித்து உள்ளார். அத்துடன் பெரம்பலூர் மாவட் டத்தில் கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்க இருந்ததையும் ரத்து செய்துள்ளார்;. இது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பெங்களூருக்கு சென்று முக்கிய முடிவு எடுக்க ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. வட்டாரங்கள் கூறிய தாவது: வரும் 2016 சட்ட சபை தேர்தலில் தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக கருணாநிதி தான் போட்டியிடுவார். தி.மு.க. கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த தி.மு.க. மகளிர் அணியினரின் மதுவிலக்கு மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.
மக்கள் ஆய்வு மைய கருத்துக் கணிப்புக்குப் பின், ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக வேண்டும்; கருணாநிதி விட்டுக்கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் குடும்பத்தினரும் அவரது ஆதரவு மாவட்ட செயலர்களும் கட்சியின் மூத்த தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இத்தகவல் அறிந்த கருணாநிதி, ஸ்டாலின் ஆதரவு மாவட்ட செயலர்கள் மீது, கடும் அதிருப்தியடைந்து உள்ளார். எனவே அவரை சமாதானப்படுத்த கருணாநிதியே முதல்வர் வேட்பாளராக தொடர வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
அதனால் பெங்களூரில் உள்ள செல்வி வீட்டிற்கு விரைவில் ஸ்டாலின் செல்கிறார். அங்கு தன் குடும்ப உறுப்பினர்களுடன் முதல்வர் வேட்பாளர் குறித்தும் கூட்டணி தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.