புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2015

முரளி இறந்தபோது, இவர்கள் யாரும் வரவில்லைசிவாஜிகணேசனை கையில் தூக்கி வைத்திருந்தேன்கமல்ஹாசன் பாலசந்தர் சாவுக்கே வரவில்லை.


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் அணியினரின் ஆதரவாளர்கள் கூட்டமும், வேட்பாளர்கள் அறிமுக கூட்டமும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சரத்குமார், 1952-ம் ஆண்டு நடிகர் சங்கம் உருவானது. மூத்த கலைஞர்கள் இச்சங்கத்தை உருவாக்கினார்கள். இடமும் வாங்கினார்கள். அந்த இடத்தில் நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக வருமானம் பெறும் நோக்கில் புதிய கட்டிடம் ஒப்பந்தம் போட்டோம். 29 ஆண்டுகள் 11 மாதங்கள் என்று அந்த ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.130 கோடி வருமானம் பெற வாய்ப்புகள் ஏற்பட்டன.

ரஜினிகாந்த் கூட தங்கத்தட்டில் தேங்காய் வைத்தது போல், இந்த இடம் இருக்கிறது. எனவே இந்த இடத்தை வைத்து வருமானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். அதன்படி தான், இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. பொதுக்குழுவில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அப்போது யாரும் எதிர்க்கவில்லை. கேள்வியும் கேட்கவில்லை. இப்போது விமர்சிக்கிறார்கள். என்னையும், விஜயகாந்தையும், ராதாரவிதான் நடிகர் சங்கத்துக்கு அழைத்து வந்தார். நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக பாடுபட்டார். அவரை சுயநலவாதி என்கிறார்கள். 

2000-ம் ஆண்டில் நடிகர் சங்க பொறுப்புக்கு நான் வந்தபோது, ரூ.4 கோடியே 25 லட்சம் கடன் இருந்தது. அதை ரூ.1 கோடியே 25 லட்சமாக குறைத்தேன். அப்போதெல்லாம், நீங்கள் எங்கு இருந்தீர்கள்? சங்கத்துக்கு வந்ததே இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொண்டதும் இல்லை. வருமானம் ஈட்ட வழி சொன்னதும் இல்லை. 

இப்போது தனிப்பட்ட விரோதம் காரணமாக எதிர்க்கிறீர்கள். கையெழுத்து இயக்கம் நடத்துகிறீர்கள். விஷால் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்தார். சம்பளம் அதிகம் கேட்டார். எங்களை பொறுத்தவரை கிரிக்கெட் போட்டிகள் நடத்தியதின் மூலம் ரூ.35 கோடி நஷ்டம் அடைந்துள்ளோம். கிரிக்கெட் மூலம் நடிகர் சங்கத்துக்கு வருடந்தோறும் ரூ.25 லட்சம் வருமானத்தை பெற்றுக்கொடுத்தேன். இது சுயநலமா? 

உனக்கு கிரிக்கெட்டே விளையாட தெரியாது. ஆனால் நீ கேப்டன்! கிரிக்கெட் குழுவில் இருந்தவர்கள் தான் விஷாலுடன் நிற்கிறார்கள். நடிகர்களும், நாடக கலைஞர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

நடிகர் முரளி இறந்தபோது, இவர்கள் யாரும் வரவில்லை. நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கையில் தூக்கி வைத்திருந்தேன். கமல்ஹாசன் அவரது குருநாதர் (கே.பாலசந்தர்) சாவுக்கே வரவில்லை. அமெரிக்காவில் இருந்தார். இவர் போய் நாசர் போட்டியிட முன்மொழிகிறார். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படம் பிரச்சினையில் சிக்கியபோது, அந்த படத்தை வெளிக்கொண்டு வர சாப்பிடாமல், தூங்காமல் 36 மணி நேரம் உழைத்தேன். அதற்கு அவர் நன்றி கூட சொல்லவில்லை. 

என்னை சீண்டி பார்க்காதீர்கள். நடிகர் சங்க இடத்தை விற்று விட்டதாக சொன்னார்கள். விற்கவில்லை என்று பத்திரத்தை காட்டினேன். வருமான வரி செலுத்தவில்லை என்றனர். அதற்கும் விளக்கம் அளித்தேன். நடிகர் சங்க கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி சான்று பெறவில்லை என்றார்கள். அந்த சான்றிதழையும் காட்டினேன். ஆனாலும் தொடர்ந்து பொய் பேசி வருகிறார்கள். 

ராதாரவி தகாத வார்த்தையால் பேசிவிட்டார் என்கிறார்கள். அதற்காக சங்கத்தை உடைக்க வேண்டுமா? நடிகர் சங்க கட்டிட ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது, பணம் வாங்கிவிட்டேன் என்று குற்றம் சொல்கிறார்கள். வேதனையாக இருக்கிறது. நான் உழைத்து சம்பாதித்து சொந்த காலில் நிற்கிறேன். 

பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவன். மற்றவர்களுக்கு உதவி செய்துதான் எனக்கு பழக்கம். நடிகர் சங்கம் ஒரு குடும்பம் போன்றது. சாதி மொழிக்கு அப்பாற்பட்டது. அந்த சங்கத்துக்காக போராடியவனை, ‘வெளியே போ’ என்கிறீர்கள். கஷ்டப்பட்டு கூடு கட்டிய தூக்கணாங்குருவியை கூட்டை விட்டே விரட்ட பார்க்கிறீர்கள். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்தவதற்காக தேர்தலில் நிற்கிறோம். 

நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். ஆனால் தேர்தல் வந்துவிட்டது. இனி ஒற்றுமைக்கு வாய்ப்பு இல்லை. என் மீது எதிர் அணியினர் அவதூறு பேசுகிறார்கள். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். இதனால் என் மனது வலிக்கிறது. நடிகர் சங்கத்துக்காக நிறைய உழைத்து விட்டேன். நாட்டாமையாக இருந்து பஞ்சாயத்துகள் நடத்தி பல பிரச்சினைகளை தீர்த்து இருக்கிறேன். அப்படிப்பட்ட என் மேல் அபாண்டமாக பழி சொல்கிறார்கள். 

எங்கள் அணி சேவை மனப்பான்மை கொண்டது. தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்ற பிறகு நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவோம். வழக்கை வாபஸ் பெறாவிட்டாலும், என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து கட்டிடம் கட்டப்படும். என் இறுதி யாத்திரை நடிகர் சங்க வளாகத்தில் இருந்து தான் தொடங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ad

ad