புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

சென்னையில் பலத்த மழை: சாலைகளில் மழை வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் இரவு முழுக்க தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகளில் குளம்போல மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுப் பின்னிரவு(வியாழன்) 2 மணியில் இருந்து இன்று காலை 7 மணிவரை இடைவிடாது
விடியவிடிய கனமழை பெய்தது. விடிந்த பின்னரும் பல்வேறு பகுதிகளில் அடை  மழை பெய்து வருகிறது. 

சென்னையில் தாம்பரம், பல்லாவரம், பரங்கிமலை, கிண்டி, அசோக்நகர், கோடம்பாக்கம், மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அயனாவரம். பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, மூலக்கடை, சர்மாநகர், கொருக்குப்பேட்டை, மணலி, மாதாவரம், மூலக்கொத்தளம், தங்கசாலை, புதிய மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், காசிமேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய சாலைகளில் மழைவெள்ளம்  தேங்கி உள்ளது.
குறிப்பாக, அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் தொடங்கி ஓட்டேரி கூவம் பாலம்வரை சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. இதனால், அப்பகுதியை வாகனங்கள் மூலம்  கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

புறநகர் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் ரயில் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிண்டி,சைதாப்பேட்டை,எழும்பூர்,பேசின் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தாம்பரத்தில் ரயில்வே தரைப்பாலம் மழைநீரால் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையில் தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் மின்சார ரயில்கள் தாமதமாக செல்கின்றன.

மழைநீர் சூழ்ந்து உள்ளதால் சென்னை செல்லும் 2 விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன . 

திருவெற்றியூர் - பேசின்பிரிட்ஜ் வரையில் தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. மழைநீர் தேங்கி உள்ளதால் அம்மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கும்மிடிப் பூண்டியில் இருந்து சென்னை வரையில் இயக்கப்படும் ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

திருத்தணியிலிருந்து சென்னை வரும் மின்சார ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டதால்  பயணிகள் முற்றுகைப் போரட்டத்தில்  ஈடுபட்டனர்.இதனால் திருத்தணி ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.  

ad

ad