புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2015

தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கடகடவென சரிந்தன.

இந்திய- தென்னாப்பிரிக்க தொடரின் இரண்டாம் நாளான இன்று,  28/2 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள்
, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கடகடவென சரிந்தன.
இன்றைய தினம், முதல் ஒரு மணி நேரத்தில் அமலாவும், எல்கரும் மிகவும் ஷார்ப்பாக பந்துகளை தேர்ந்தெடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். விராட் கோலி வேகப்பந்து, சுழற்பந்து என மாற்றி மாற்றி வீசியும் பலனில்லை. 38-வது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொண்ட டீன் எல்கர், அவசியமின்றி பந்தை லெக் சைடில் விளாச முயல, பந்து எட்ஜ் ஆகி ஜடேஜாவின் கையில் தஞ்சமடைந்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். 68-வது ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா.
இதனையடுத்து 17 ரன்கள் முன்னிலை பெற்று,  இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல மோசமான தொடக்கம் அமைந்தது. இந்த டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸிலும் பிலாந்தர் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார் ஷிகார் தவான். அதன் பின்னர் முரளி விஜயும், புஜாராவும் இணைந்து அருமையாக விளையாடினர். ராபாடாவின் பந்துவீச்சை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. அவர் எட்டு  ஓவர்களை வீசி ஒன்பது ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஐந்து ஓவர்கள் மெய்டன். நன்றாக விளையாடி வந்த முரளி விஜய் அரை சதத்தை மூன்றே ரன்களில் தவறவிட்டார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை குவித்திருக்கிறது இந்திய அணி. மொத்தமாக 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  

நறுக்குன்னு நாலு பாயிண்ட்ஸ் 

1. ஹீரோ அஸ்வின்

அஸ்வின் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்க வீரர்களால் சமாளிக்கவே முடியவில்லை. குறிப்பாக தனது சுழலால் டிவில்லியர்ஸை கடுமையாக சோதித்தார் அஸ்வின். முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தனது 29-வது டெஸ்ட்டிலேயே 150 விக்கெட்டுகளை வீழ்த்தி, விரைவில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின் .
2. 'தனி ஒருவன்' டிவில்லியர்ஸ் 

ஜடேஜா பந்துவீச்சில் இரண்டு முறை அவுட்டில் இருந்து தப்பி பிழைத்த டிவில்லியர்ஸ், அதன் பின்னர் சீராக ரன்களை சேர்த்துக் கொண்டே இருந்தார். ஆரம்ப கட்டத்தில் இந்திய சுழலில் திணறினாலும், அதன் பின்னர் இத்தகைய பிட்சில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தனது அனுபவத்தால் சொல்லிக்கொடுத்தார்.  அவ்வப்போது இடைவெளிவிடாமல் ஒன்றிரண்டு ரன்களையும, பவுண்டரிகளையும் விளாசிக்கொண்டே இருந்தார். 83 பந்துகளில், ஆறு பவுண்டரிகள் உதவியுடன் 66 ரன்கள் குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 75.90. தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், தனி ஒருவனாக களத்தில் நின்று போராடினார் டிவில்லியர்ஸ். 

3. புஜாரா அபாரம்

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா அபாரமாக விளையாடி வருகிறார். ரன்கள் தேக்கமடைவதை தடுக்க, முரளி விஜய்யுடன் ஸ்டிரைக் மாற்றிக்கொண்டே இருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் துவண்டு போயினர். ஆட்ட நேர இறுதியில் கடைசி ஓவரில், இம்ரான் தாகீர் வீசிய ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பினர் புஜாரா. இரண்டு நாளிலும் அடிக்கப்பட்ட ஒரே சிக்சர் இது தான். மேலும் 29 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள புஜாராவுக்கு, அவர் விளாசிய நான்காவது சிக்ஸர் இதுதான். புஜாரா சுழற்பந்தை அற்புதமாக கையாண்டு 100 பந்துகளை சந்தித்து, 63 ரன்களை சேர்த்திருக்கிறார். மேலும் நாளைய தினம் சதமடிக்க வாய்ப்புள்ளது.

4.  நாளை ரிசல்ட்? 

இந்திய வீரர்களுக்கு ஏற்ற வகையில் சூழலுக்கு நன்றாக ஒத்துழைக்கிறது மொகாலி மைதானம். இந்த பிட்சில் 250-300 ரன்களை துரத்துவதே மிகவும் சிரமம். நாளை இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி, மேலும் 150 முதல் 200 ரன்கள் வரை சேர்த்துவிட்டாலே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகி விடும். இந்திய அணியின் கை, இந்த டெஸ்ட்டில் மேலோங்கியிருக்கிறது. நாளைய தினம் இந்தியாவை மேலும் 100 ரன்கள் எடுப்பதற்குள் சுருட்டாவிட்டால் ஜெயிப்பது கடினம் என்பதால் தென்னாபிரிக்கா கடுமையாக போராடும். நாளைய தினம், பெரும்பாலும் ரிசல்ட் கிடைத்து விடவும் வாய்ப்புள்ளது. பரபர டெஸ்ட்டில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது நாளை தெரியும் 

ad

ad