புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2015

புலிகளின் முக்கிய தளபதிகள் படையினரால் கொண்டு செல்லப்பட்டதை நேரில் கண்டேன்: பூநகரி தளபதியின் மனைவி


தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையே. புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பங்களாகவும், தனியாகவும் பிரான்சிஸ் பாதர் வழிகாட்டிலில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதையும், அவர்கள் படையினரால் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதையும் நான் நேரில் கண்டேன்.
மேற்கண்டவாறு காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்  பூநகரி தளபதியாக இருந்த சு.பரந்தாமனின் மனைவி சாட்சியமளித்துள்ளார்.
(மனைவியின் பெயர் அவருடைய சுய பாதுகாப்பு கருதிய வேண்டுதலுக்கிணக்க இங்கு தரப்படவில்லை) குறித்த சாட்சியத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2009ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்து இளம்பருதி, எழிலன், இராகுலன், வேலவன், தங்கன், மஜித் இன்பம், போண்டா ரூபன், குமாரவேல், ருபன், ராஜா மாஸ்டர் உள்ளிட்ட சுமார் 60ற்கும் மேற்பட்ட தளபதிகள் அல்லது முக்கிய போராளிகளுடன் எனது கணவரும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்
இதில் சிலர் குடும்பங்களாகவும் படையினரிடம் சரணடைந்தனர்.
இவர்கள் ஜோசப் பிரான்சிஸ் பாதரின் ஒழுங்கமைப்பில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன். அவர்களை படையினர் பேருந்துகளில் கொண்டு சென்றதை நாங்கள் எங்கள் கண்ணால் பார்த்தோம்.
போர் நிறைவடையும் கட்டத்தில் புலிகள் இயக்கத்தில் அங்கம் பெற்றிருந்தவர்கள் ஆயுதங்களை கைவிட்டு தங்கள் குடும்பங்களுடன் மீள் இணைந்து கொண்டனர்.
அவ்வாறே எனது கணவனும் எங்களுடன் வந்து சேர்ந்தார். இதன் பின்னர் நாங்கள் மே மாதம் 17ம் திகதி படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றிருந்தோம்.
இதன்போது படையினர் எங்களுக்கு தண்ணீர் கொடுத்து முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட பகுதிக்குள் அமர்த்தினார்கள்.
பின்னர் 18ம் திகதி காலை படையினர் புலிகள் அமைப்பில் இருந்தவர்களை சரணடையுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, பாதர் பிரான்சிஸ் தலைமையில் தளபதிகள் முக்கிய போராளிகள் சரணடைந்தார்கள்.
அதில் எனது கணவனும் ஒருவர். அவர்களை படையினர் பேருந்துகளில் கொண்டு சென்றார்கள். எனவே படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் உறவுகள் உயிருடன் இருக்கவேண்டும்.
அவர்களுக்கு படையினர் பொறுப்புகூற வேண்டும். எனவே எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.

ad

ad