புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2016

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் ஆண்கள் அரைஇறுதியில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ்– ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள்.
ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சிடம், பெடரர் பணிந்தார்.
இறுதிப்போட்டியில் செரீனா
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் அரங்கேறின. ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), தரவரிசையில் 4–வது இடம் வகிக்கும் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) எதிர்கொண்டார். அசுர வேகத்தில் சர்வீஸ் போடுவதிலும், பந்தை அதிரடியாக திருப்புவதிலும் வல்லவரான செரீனா வில்லியம்ஸ், எதிர்பார்த்தது போலவே முதல் கேமில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். ராட்வன்ஸ்காவை திணறடித்த செரீனா 6–0, 6–4 என்ற நேர் செட் கணக்கில் 64 நிமிடங்களில் வெற்றி பெற்று 7–வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபனை 6 முறை கைப்பற்றியவரான செரீனா கூறும் போது, ‘நீண்ட ஓய்வுக்கு பிறகு களம் திரும்பிய நிலையில், இறுதிப்போட்டிக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, என்னை தோற்கடிப்பது கடினம்’ என்று குறிப்பிட்டார். இதுவரை செரீனாவுக்கு எதிராக மோதிய 9 ஆட்டங்களிலும் ராட்வன்ஸ்கா தோல்வியையே தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கெர்பர் சாதனை
மற்றொரு ஆட்டத்தில் 6–ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7–5, 6–2 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோண்டாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஏஞ்சலிக் கெர்பர், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். 1996–ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி சுற்றை அடைந்த முதல் ஜெர்மனி நாட்டவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
28 வயதான கெர்பர் கூறும் போது, ‘உண்மையிலேயே இது, எனக்கு சிறப்பு வாய்ந்த தருணமாகும். ஏனெனில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறேன். இதற்காக இன்றைய ஆட்டத்தில் எனது முழு ஆற்றலையும் செலவிட்டேன். இறுதிப்போட்டியில் செரீனாவின் சவாலை சந்திக்க ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்’ என்றார்.
நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் மல்லுகட்டுகிறார்கள். இருவரும் இதற்கு முன்பு நேருக்கு நேர் சந்தித்த 6 ஆட்டங்களில் 5–ல் செரீனாவும், ஒன்றில் கெர்பரும் வெற்றி கண்டுள்ளனர். நடப்பு தொடரில் செரீனா ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
34 வயதான செரீனா வாகை சூடினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் 2–வது இடத்தில் உள்ள ஸ்டெபி கிராப்பை (22 பட்டம்) சமன் செய்து விடுவார்.
பெடரர் அவுட்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் ரோஜர் பெடரரின் (சுவிட்சர்லாந்து) முயற்சி அரைஇறுதியுடன் முடிவுக்கு வந்தது. 2012–ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித கிராண்ட்ஸ்லாமும் வெல்ல முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் 34 வயதான பெடரர் அரைஇறுதியில், ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) பலப்பரீட்சையில் இறங்கினார். பெடரரால், ‘பரம எதிரி’ ஜோகோவிச்சுக்கு ஓரளவு நெருக்கடி கொடுக்க முடிந்ததே தவிர அவரது வெற்றிப்பயணத்துக்கு அணை போட முடியவில்லை. பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தானாக செய்யக்கூடிய தவறுகளை பெடரர் அதிகமாக (51 முறை) செய்து எதிராளிக்கு புள்ளிகளை வாரி வழங்கி விட்டார்.
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பரவசப்படுத்திய ஜோகோவிச் 6–1, 6–2, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் பெடரரை சாய்த்து, ஆஸ்திரேலிய ஓபனில் 6–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 19 நிமிடங்கள் நீடித்தது. இன்று நடக்கும் அரைஇறுதியில் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து)– மிலோஸ் ராவ்னிக் (கனடா) மோதுகிறார்கள். இதில் வெற்றி காணும் வீரரை 5 முறை சாம்பியனான ஜோகோவிச் இறுதி ஆட்டத்தில் சந்திப்பார்.

ad

ad