புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஜன., 2016

அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா? திமுகவை பின்பற்றுகிறதா?

அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா?திமுகவை பின்பற்றுகிறதா? என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பாக நடந்த விவாதத்தின் போது பதிலளித்த அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவர்கள் தமிழகத்தில் மதுக் கடைகளை மூடமுடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அமைச்சரின் குரல் முதல்வரின் குரல்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். தமிழக முதல்வரின் இந்த நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கவில்லை என்றாலும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
மதுஒழிப்புக்காக போராடிய தியாகி சசிபெருமாளின் சாவுக்கு பின்னர், தமிழகத்திலெழுந்த மாபெரும் போராட்டத்தையொட்டி முதல்வரின் நிலைப் பாட்டில் சற்று தளர்வு ஏற்பட்டிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவானது.
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடாவிட்டாலும் படிப்படியாக, பகுதிவாரியாக மதுக்கடைகளை மூடுவதற்கு முன்வருவாரென எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால், ஆளும்கட்சியைத்தவிர, தமிழகத்திலுள்ள அனைத்து கட்சியினரும் சமூக அமைப்புகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஒருமித்தகுரலில் மதுக்கடைகளை மூடும்படி வலியுறுத்திப் போராடினர்.
எனவே, முதல்வர் மக்களின் உணர்வுகளை மதிக்கும்வகையிலும், பெண்களின் மீது இரக்கம் காட்டும்வகையிலும் தனது பிடிவாதத்திலிருந்து கீழ்இறங்குவாரென எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ‘யார் வாழ்க்கை இழந்தாலும் அரசு வருமானத்தை இழக்க முடியாது’ என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார் என்பதை அமைச்சர் நத்தம் விசுவாதன் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
மதுக்கடைகளை மூடினால் தமிழகத்திற்கு வரவேண்டிய வருமானம் அண்டை மாநிலங்களுக்கு போய்விடும் என்பதும், இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டுவந்தால் தான் தமிழ்நாட்டிலும் அதனை நடைமுறைப்படுத்தமுடியுமென்றும் அமைச்சர் நத்தம் விசுவாதன் அவர்கள் விளக்கமளித்திருக்கிறார்.
இதற்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அப்போதைய விளக்கங்களை தற்போது மேற்கோள் காட்டியிருக்கிறார்.
அதாவது,மதுவியாபாரம் செய்வதில் அதிமுக அரசு, திமுக தலைவரைப் பின்பற்றுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தியிருக்கிறார்.
இவர்கள் அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு கலைஞர் கருணாநிதியின் வழியில்தான் ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதிமுக அரசின் நிலைப்பாடு மதுவிலக்குக் கொள்கையில் மிகவும் உறுதியாகயிருந்த தந்தை பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் அவமதிப்பதாகயுள்ளது.
பெரியார், அண்ணா ஆகியோரின் புகழைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த இவர்கள் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எதிராக எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் மதுவிலக்குக் கொள்கையை ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் ‘மக்கள் வாழ்வைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை அரசாங்கமே வியாபாரம் செய்யக்கூடாது’ என்பதை ஒரு விதியாக பதிவு செய்திருக்கிறார்.
எனவே, மதுவிலக்கை இந்தியா முழுவதும் ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க அரசியல் அமைப்பு சட்டமே ஏதுவான வாய்ப்பளித்துள்ளது.
எனினும், இந்திய ஆட்சியாளர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லையென்பது வேதனை அளிக்கிறது.
இந்திய அளவில் மதுவிலக்கு நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறுவதாக தெரியவில்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதென்பதற்கு ஒரு நொண்டிச்சாக்கு தேடுவதாகவே தெரிகிறது.
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் மதுவிலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? மக்கள் மீது அக்கறையும் முற்போக்கு சிந்தனையும் இருந்தால் மற்றவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, நாங்கள் செய்து காட்டுவோமென
தமிழக முதல்வர் மதுகடைகளை மூட முன்வந்திருப்பார்.
ஆனால் ‘மதுக்கடைகளை மூடமுடியாது, வருமானத்தை இழக்கமுடியாது' என்று தமிழக அரசு மிகுந்த பிடிவாதத்துடன் ஈவிரக்கமற்ற முறையில் வெளிப்படையாக இந்த நிலைப்பாட்டை அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.
பள்ளி செல்லும் மாணவர்கள், பெண்கள் என பரவலாக தமிழ்ச் சமூகம் சீரழியும் வகையில் குடிக் கலாச்சாரத்தை ஒரு பொதுக் கலாச்சாரமாக மாற்றியுள்ள தமிழக அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக
வன்மையாக கண்டிக்கிறது.
வெகுமக்களின் துணையோடு தமிழகத்தில் முழுமையாக மதுவை ஒழித்திட மக்கள் நலக்கூட்டணி தொடர்ந்து போராடும்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- தொல்.திருமாவளவன்,
 தலைவர்,விசிக.