புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2016

விஜயகாந்துக்கு என்னாச்சு; விளக்கம் சொல்லும் சுதீஷ்

தேமுதிகவை தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே பிரச்சாரக் களத்தில் தீவிரம்
காட்டி வருகின்றனர். கூட்டணியில் தொகுதிகளை கண்டறிவதும் பங்கீடும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேமுதிகவுக்கு 124 இடங்கள், மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நான்கு கட்சிகளுக்கும் சேர்த்து 110 இடங்கள் என்று மொத்தக் கணக்கில் கொடுக்கப்பட்டு அதை பிரித்துக் கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் தேதி வாக்கில் நடைபெறும் என்று வைகோ உள்ளிட்ட ம.ந.கூ. தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

'புதிய தமிழகம், த.மா.கா. போன்ற கட்சிகள் கூட்டணிக்குள் வருகிற பட்சத்தில் அவர்களுக்கான இடங்களை தேமுதிகதான் தங்களின் 124 தொகுதியில் இருந்து கொடுக்க வேண்டும்' என்று வைகோ நேற்று கூறியுள்ளார். (கூட்டணிக்குள் புதிதாக வருகிற கட்சிகளுக்கு தேமுதிகவிற்கு ஒதுக்கிடு செய்தவற்றிலிருந்துதான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவிருப்பதை கடந்த வாரமே நாம் எழுதியிருந்தோம்). இது போக,  ஆம் ஆத்மியிடமும் பேசிக் கொண்டிருப்பதாக வைகோ  தெரிவித்துள்ளார்.

இன்று தஞ்சாவூர், நாளை திருச்சி என்று மாவட்டங்களில் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்கள் நலக்கூட்டணியின் வேகத்தை அனைத்துக் கட்சியினருக்கும் சவாலாக காட்டிக் கொண்டிருக்கிறார், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா. அந்த வேகம் கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடம் இல்லாத காரணம், யாருக்கு எத்தனை இருக்கைகள், எந்தெந்த தொகுதிகள் என்கிற அம்சம் உறுதி செய்யப் படாததே என்கின்றனர், கூட்டணி வட்டாரத்தில்.

நாம் முன்னரே குறிப்பிட்டு இருந்தபடி பிரதானமான 10 இடங்களில் மட்டும் (இது ஜெ.பாணி) பிரமாண்ட  மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து விஜயகாந்த் பேசுவார் என்பது உறுதியாகி வருகிறது. ஒரு மேடைக்கு 20 முதல் 25 வேட்பாளர்கள் வரை நிற்க வைத்து வேட்பாளர் அறிமுக உரையை பிரேமலதா வாசித்து முடிக்க அதன் பின்னர், வேட்பாளர்களை ஆதரிக்கும்படி விஜயகாந்த் சிறப்புரை மட்டும் வழங்குவார் என்பது போல  நிகழ்ச்சிகளை தெளிவாக திட்டமிட்டுள்ளது தேமுதிக.
இது ஒருபுறம் இருக்க, ம.ந.கூ. தேர்தல் உடன்படிக்கைக்குப் பின்னர், விஜயகாந்த் என்ற பிம்பம் அப்படியே அமுங்கி விட்டது போல் ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக காணப்படுகிறது. இதனிடையே விஜயகாந்திற்கு மீண்டும் உடல்நலம் சரியில்லை என்ற பேச்சும் பரவலாக பேசப்படுகிறது. விஜயகாந்தின் விவாகரம்தான் என்ன என  தேமுதிக ஏரியாவில் விசாரித்தோம்.

" பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்தின் பேச்சு 'நச்' ரகத்தில், டெரர் ஆக இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக சட்டசபையில் யாருமே எதிர்த்துப் பேச முடியாது என்று கருதப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா முன்பாக, துணிச்சலாக எழுந்து நின்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டும் நாக்கைத் துருத்தியும் கேள்வி கேட்ட அந்த கேப்டனை மீண்டும் பார்க்க வேண்டும் என்பதில் எங்கள் அண்ணியார் (பிரேமலதா) உறுதியாய் இருக்கிறார்.

அதனால் போகிற இடங்களில் எல்லாம், 'தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப் பார்த்து உட்காருன்னு சொன்ன ஒரே ஆம்பளை கேப்டன் தான்' என்று சொல்லி வருகிறார். கேப்டன் நடித்த சத்ரியன்  படத்தில் வில்லன் திலகன் சொல்வது போல், பழைய பன்னீர் செல்வமா எங்க கேப்டனை நாங்கள் பார்க்கணும். அதற்காகத்தான் அவர் ஓய்வெடுத்துக் கொண்டு தயாராகி வருகிறார்'' என்று கூறி நெகிழ்கின்றனர்.
முன்பொருமுறை,  உடலை முறுக்கேற்றி பிரச்சாரத்துக்கு ஏற்றார் போல் வைத்துக் கொள்ள விஜயகாந்த் மூலிகை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார், அதற்காகத்தான் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் வைத்திய சுற்றுலா மேற்கொண்டு வருகிறார் என்று தகவல் கிளம்பியது. அதையும் அப்போது விஜயகாந்த் தரப்பு மறுத்தது. இந்த நிலையில் மீண்டும் அதே போன்றதொரு தகவல் அலையடிக்கத் தொடங்கியிருக்கிறது.

விஜயகாந்த் குறித்து ஓரிரு நாட்களாக  தகவலே இல்லை என்ற நிலையில் சமூக வலைதளங்களில், கேப்டன் உடல் நிலை காரணமாக வெளிநாடு பயணம், இன்று இரவு அவர் கிளம்புகிறார் என்றும் இல்லை, இல்லை நாளைக் காலைதான் அவருக்கு ப்ளைட் என்றும் தகவல்கள் கிளம்ப, தேமுதிகவின் இளைஞரணி மாநிலச் செயலாளர் எல்.கே.சுதீஷ், ''தவறான தகவல்களுடன் சமூக வலைதளங்களில் பொறுப்பற்ற நிலையில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.  ஊடகங்கள் அதை நம்பவேண்டாம்.   தேமுதிக தலைமையை தொடர்பு கொண்டு உண்மையை  எழுதவும்'' என்று தேமுதிக சார்பில் ஓர் அறிக்கையே நேற்று அளித்தார்.

ஆனாலும் மீண்டும் முன்பை விட வேகமாக விஜயகாந்தின் வெளிநாட்டுப் பயணச் செய்தி இன்று காலை முதலே பறக்கத் தொடங்கி விட்டது. தேமுதிகவின் இளைஞரணிச் செயலாளர் சுதீஷிடமே கேட்டேன். " அதெல்லாம் ஒன்றுமேயில்லை, கேப்டன் பார்ட்டி ஆபீசில்தான் இருக்கிறார். பரவிக் கொண்டிருப்பது தவறான தகவல்" என்றார்.

தேமுதிகவினர் எதிர்பார்ப்பது போல் பழைய  அவர், 'பன்னீர்செல்வமா' வந்தால் சந்தோஷம்தானே?

ad

ad