புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2016

தமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்!

தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். அதன் மூலமாகவே தமிழ் மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியும் என மொழிகள், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தனிநாடு உருவாகாமல் ஒரே நாட்டுக்குள் தமிழர்கள் வாழவேண்டும்இதமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இன்று காலை மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையில் சமாதான சகவாழ்விற்கான அணுகுமுறைகள் பற்றிய தேசிய கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரித்தானிய தூதரகத்தின் அனுசரணையுடன் சேவாலங்க நிறுவனம் மற்றும் தேசிய சமாதான கற்கைகள் நிறுவகம் இணைந்து இந்த கருத்தரங்கினை நடாத்தியது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன்,
இன நல்லிணக்கம் என்பது வானத்தில் இருந்து வரும் விண்கல் அல்ல. பாதாளத்தில் இருந்து வெளிவரும் அற்புத பொருள் அல்ல. மக்கள் மனதில் உருவாக வேண்டிய, உருவாக்கப்பட வேண்டிய ஒரு செயற்பாடு ஆகும். இதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இதில் முதலாவது நிபந்தனையாக சமத்துவத்தினை கொள்ள முடியும். இனங்களுக்கு மத்தியில் மதங்களுக்கு மத்தியில் சமத்துவம் இருக்கும் போதே சகவாழ்வினை ஏற்படுத்த முடியும். சகவாழ்வு இல்லாத இடத்தில் சமத்துவத்தினை பற்றி பேசினால் ஆட்சி செய்பவருக்கும் அடிமைக்கும் இடையிலான உறவாகவே கருதப்படும்.

நாங்கள் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை அலசி ஆராய்ந்து தவறுகளை திருத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த நாட்டில் உள்ள அனைவரும் தவறுகளை விட்டுள்ளோம். வரலாற்றினை நாங்கள் திரும்பி பார்ப்பது அந்த நிலைக்கு போவதற்கு அல்ல. அந்த இருண்ட பகுதிக்குள் மீண்டும் செல்லக்கூடாது என்பதற்காகவே ஆகும். அந்த நிலையை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் அனுமதியளிக்க முடியாது.

இன்று இனவாதம் இல்லை. மதவாதம் இல்லை. தீவிரவாதம் இல்லை, பிரிவினைவாதம் இல்லை.அதிகாரபூர்வமாக பகிரங்கமாக இல்லை. அதனை இந்த அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இன்று எவராவது இனவாதம் மதவாதம் பேசுவாரேயானால், அடுத்தவருக்குரிய மதம், மொழி,கலாசாரங்களை அவமானப்படுத்துவாரேயானால், அடுத்தவருக்குரிய காணிகளை அபகரிப்பாரேயானால் அவர்களே இந்த நாட்டின் பிரிவினைவாதிகளாக கருதப்படுவார்கள். ஏன் நாங்கள் கொடிய யுத்தத்தினை சந்தித்தோம் என்பதை நாங்கள் ஆராய வேண்டும். 

போர் ஆரம்பித்ததற்கான அடிப்படை காரணத்தினை கண்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போது தான் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடிவதுடன் சிறந்த ஜனநாயக நாட்டினை கட்டியெழுப்ப முடியும். ஒரே நாட்டுக்குள் நாங்கள் அதிகாரத்தினை பகிர வேண்டும். அதிகாரங்கள் பகிரப்படுவது தொடர்பில் நாங்கள் பகிரங்கமாக பேசுவதில்லை. அதிகாரப்பகிர்வு என்பது வெறுமனே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல அது ஒரு ஜனநாயக நடவடிக்கையாகும்.

கொழும்பில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் அனைத்து மாகாணங்களுக்கும் மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் செல்லவேண்டும். யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் எவ்வாறு அதிகாரங்கள் தேவைப்படுகின்றதோ அதேபோன்று மொனராகலைக்கும் அம்பாந்தோட்டைக்கும் அதிகாரங்கள் தேவைப்படுகின்றது.

இந்த நாட்டில் தனி தமீழத்தை உருவாக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்ககூடாது. தனிநாட்டினை நோக்கி தமிழர்கள் செல்வார்களானால் அது தமிழர்களுக்கு பெரும் அழிவினைத்தரும் என்ற உண்மையினை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இலக்கினை அடைவதற்காக நாங்கள் ஆயுதம் ஏந்தும் கொள்கையினை கைவிட வேண்டும். அது அழிவினையே ஏற்படுத்தும். தனிநாடு உருவாகாமல் ஒரே நாட்டுக்குள் தமிழர்கள் வாழவேண்டும் என்றால் தமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இந்த நாடு தனி ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ சொந்தமான நாடு அல்ல. இது ஒரு பன்மைத்துவம் வாய்ந்த நாடு என்ற உண்மையினை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.பன்மைத்துவம் என்பது எமது பலவீனம் அல்ல.அது சக்தி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பல மதங்கள் உள்ள.பல இனங்கள் உள்ளன. பல்வேறு கலாசார மக்கள் வாழ்கின்றனர். அங்கு நாங்கள் இந்தியர்கள் என்று அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். அதற்கு காரணம் அந்த நாட்டின் பன்மைத்துவத்தின் உண்மையை அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் தேசிய கீதம் அந்த நாட்டின் பெரும்பான்மை மொழியான ஹந்தியில் இல்லாமல் அங்குள்ள சிறுபான்மை மொழியான வங்காள மொழியிலேயே உள்ளது. அதனை அனைத்து இந்தியர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பெரும்பான்மை மதமாகவும் இந்தியாவில் உருவாகிய மதமாகவும் இந்துமதத்தினை கொண்ட போதிலும் அந்த நாடு மதச் சார்பற்ற நாடாக இன்றும் இருந்து வருகின்றது. அதனால் தான் நாம் இந்தியர் என்ற உணர்வு அங்கு மேலோங்கி காணப்படுகின்றது.

இந்த நாட்டில் உண்மையான சமாதான சகவாழ்வு ஏற்பட வேண்டுமானால் வெட்கப்பட்டு அச்சப்பட்டு தயங்கி இருக்காமல் பகிரங்கமாக கலந்துரையாடவேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் தனி தமிழீழத்தினை நிராகரித்து கலந்துரையாடவும் ஆயுதப் போராட்டத்தினை விமர்சனம் செய்து கலந்துரையாடவும் ஒரு தயக்கம் இருக்கின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் சென்று அதிகாரத்தினை பகிர்வது தொடர்பாகவும் இந்த நாடு பன்மைத்துவமிக்க நாடு என்று சொல்வதிலும் ஒரு தயக்கம் இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் மகளிர் அணி தலைவியாக இருந்த தமிழினி அவர்கள் எழுதிய புத்தகத்தினை கிளிநொச்சியல் வெளியிடுவதை தடைசெய்த போது அதற்கான அனுமதியை நான் பெற்றுக் கொடுத்தேன்.

ஒரு நல்லெண்ண கலந்துரையாடலை ஏற்படும் என்பதற்காக அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தேன். அதற்காக பிரதமரும் உதவி செய்தார். அதற்காக புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு பகுதியினர் என்னை விமர்சித்தனர். இனவாதிகள் எதிர்க்கின்றார்கள் என்பதற்காக மனசாட்சிக்கு சரியென தோன்றும் விடயங்களை செய்யாமல் விட வேண்டாம் என இங்குள்ள இளம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன். அடிப்படை உரிமைகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டால் தான் இங்குள்ள இனப்பிரச்சினை தீரும் என்று ஜே.வி.பி.தலைவர் அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதனை நான் வரவேற்கின்றேன்.

ஆனால் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும்.அதிகாரப்பகிர்வு தொடர்பில் இலங்கையில் உள்ள பெரியகட்சிகள் குழப்பமில்லாமல் தெளிவான முறையில் தமிழ் மக்களை நோக்கி அறிவிக்க வேண்டும். அதன் மூலமாகவே தமிழ் மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியும்.

ad

ad