புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 ஏப்., 2016

தீர்மானங்களையே ஏற்காதவர்கள் திட்டமுன்வரைபை ஏற்பார்களா? கூட்டமைப்பின் தலைமையை நொந்து பிரதி அவைத்தலைவர் கேள்வி

வடமாகாண சபையின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டமுன்வரைபை ஏற்றுக்கொள்வார்களா என வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் நேற்றையதினம் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 49ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பான விவாதம் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 
அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பாக 18 பேர் கூடி நீண்ட நாட்களாக ஆராய்ந்து தீர்வுத்திட்ட முன்வரைபை தயாரித்துள்ளோம். நாம் தயாரித்த அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்க இருப்பதாக அறிகிறேன். இந்த அறிக்கை நேரடியாக அரசுக்கு போகப்போகின்றதா? இல்லை த.தே.கூ தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்களுக்குள் உள்வாங்கப்பட்டு அவர்கள் ஊடாக போகப்போகின்றதா என்று தெரிய வேண்டும்.

நாங்கள் நீண்ட நாட்களாக ஆராய்ந்து தயாரித்து கொடுக்கும் இந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் அனைத்தும் த.தே.கூ தயாரித்துகொடுக்கும் தமது தீர்வுத் திட்ட அறிக்கையில் உள்ளடக்கப்படுமா என சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. 

ஏனெனில் கடந்த காலங்களில் த.தே.கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள் வடமாகாண சபையின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எந்தவிடயங்களுக்கும்  வடமாகாண சபையின் கருத்துக்கள் உள்வாங்கப்படுவதில்லை. அவர்கள் எமது கருத்துக்களை வேறாகவும் தமது முடிவை வேறாகவும் தான் செயற்படுத்தி வந்தார்கள். இது பொய் இல்லை நடைபெற்று வருகின்ற உண்மை.

எனவே தான் நாங்கள் இவ்வாறு நீண்ட நாட்களாக நேரத்தை ஒதுக்கி மிகவும் சிரமப்பட்டு இந்த தீர்வுத் திட்டத்தை தயாரித்துக் கொடுக்கும் போது அது சாதகமானதாக போய் சேருமா என்பதற்கு முதலமைச்சரும் அவைத் தலைவரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்வுத்திட்ட அறிக்கையை தயாரித்து விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆகவே நாங்கள் ஏமாற்றப்படக்கூடிய சூழல் வரக்கூடாது என்பதில் திடமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.