புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2016

ரிஷப் பந்த் அதிரடி; டெல்லிக்கு 5-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ். 

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி 5-ஆவது வெற்றியைப் பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பந்த் 40 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தார். 
ராஜ்கோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பிரத்வெயிட், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்குப் பதிலாக ஜே.பி.டுமினி, சபேஷ் நதீம் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். குஜராத் அணியில் டுவைன் பிராவோ காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஆரோன் ஃபிஞ்ச் சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான மெக்கல்லம் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஜாகீர்கான் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 
4-ஆவது ஓவரை வீசிய சபேஷ் நதீம், முதல் பந்தில் டுவைன் ஸ்மித்தையும், கடைசிப் பந்தில் ஆரோன் ஃபிஞ்சையும் வீழ்த்தினார். ஸ்மித் 15 ரன்களும், ஃபிஞ்ச் 5 ரன்களும் எடுத்தனர். இதனால் 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது குஜராத்.
தினேஷ் அரை சதம்: இதையடுத்து கேப்டன் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடி 7 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. 20 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
இதையடுத்து தினேஷ் கார்த்திக்குடன் இணைந்தார் ஜடேஜா. இந்த ஜோடி சிறப்பாக ஆட 15.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது குஜராத். 42 பந்துகளில் அரை சதம் கண்ட தினேஷ் கார்த்திக், அடுத்த பந்தில் (முகமது சமி ஓவரில்) போல்டு ஆனார். அவர் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். 
பின்னர் வந்த ஃபாக்னர் 7 ரன்களில் நடையைக் கட்ட, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது குஜராத். ஜடேஜா 26 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 
டெல்லி தரப்பில் சபேஷ் நதீம் 3 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். 
முதல் விக்கெட்டுக்கு 115: பின்னர் ஆடிய டெல்லி அணியில் டி காக், முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விரட்ட, குல்கர்னி வீசிய அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி அதிரடியில் இறங்கினார் ரிஷப் பந்த். 
தொடர்ந்து வேகம் காட்டிய பந்த், ரெய்னா வீசிய 9-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி 25 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் 10 ஓவர்களில் 93 ரன்களை எட்டியது டெல்லி. 
அந்த அணி 13.3 ஓவர்களில் 115 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் ஜடேஜா. 40 பந்துகளைச் சந்தித்த பந்த் 69 ரன்கள் எடுத்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். 
இதையடுத்து சாம்சன் களமிறங்க, டி காக் 45 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
பின்னர் டுமினி களமிறங்க, ஜடேஜா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி ஆட்டத்தை முடித்தார் சாம்சன். டெல்லி அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. 
ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்
குஜராத்-149/7 
கார்த்திக் 53 (43)
ஜடேஜா 36* (26)
நதீம் 2வி/23
டெல்லி-150/2
ரிஷப் பந்த் 69 (40)
டி காக் 46 (45)
கெüஷிக் 1வி/29
டுவைன் ஸ்மித் 2,000
டெல்லிக்கு எதிராக 15 ரன்கள் எடுத்த டுவைன் ஸ்மித், ஐபிஎல் போட்டியில் 2,000 ரன்களை விளாசியவர் என்ற பெருமையைப் பெற்றார். ஐபிஎல் போட்டியில் 2,000 ரன்கள் குவித்த 25-ஆவது வீரர் ஸ்மித் ஆவார். அதேநேரத்தில் இந்த மைல்கல்லை எட்டிய 2-ஆவது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்மித். முதல் வீரர் கெயில் ஆவார். அவர் 3,207 ரன்கள் குவித்துள்ளார்.

இன்றைய ஆட்டம்
கொல்கத்தா-பஞ்சாப், இடம்: கொல்கத்தா,நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்.

ad

ad