புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2016

தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி எதிர்பார்த்தது தான்: வைகோ பேட்டி

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ பேட்டி அளித்தார். அதன் விவரம்:–

கேள்வி: மக்கள் நலக்கூட்டணியின் தோல்வி ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தோல்வியை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
பதில்: எதிர்பார்த்தேன். பிரசாரத்தின் கடைசி 3 நாட்களில் சில மாற்றங்கள் தென்பட்டன. பிரசாரத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த எழுச்சி, ஆர்வம் போன்றவை வாக்காளர்கள் மத்தியில் குறைந்து காணப்பட்டது. நான் கடந்த 1964–ம் ஆண்டில் இருந்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து வருகிறேன். மக்கள் மனநிலையை என்னால் அறிய முடியும். அப்போதே எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து நான் எங்கள் தொண்டர்களிடம் கூறினேன். தோல்வியை எதிர்பார்த்து அதை முழுமையாக எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன். ஆனால் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவனும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
கே: கோவில்பட்டி தொகுதி போட்டியில் இருந்து ஏன் விலகினீர்கள்?
ப: இது சம்மந்தமாக நான் முடிவு எடுப்பதற்கு முன்பு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அங்கு ஜாதி கலவரங்களை தூண்டுவதற்கு சதி திட்டம் தீட்டி இருந்தனர். என்னால் வாக்காளர்கள் பாதிக்கப்படகூடாது என கருதினேன். நான் அங்கு தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலும் நான் தோற்கடிக்கப்பட்டு இருப்பேன்.
கே: தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
ப: பணம் தான் காரணம். தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு எல்லா இடங்களிலும் பணத்தை கொடுத்தார்கள். ஆனால் ஏழைகள் அந்த பணத்தை வாங்கி இருந்தால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் கூட எந்தவித தயக்கமும் இல்லாமல் பணத்தை வாங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை வெட்கப்படும் அளவுக்கு உள்ளது. இங்கு நதி பிரச்சினை, மீத்தேன் திட்ட பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை, ஊழல், தவறான அரசு என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவையெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு பணம் என்ற ஒன்று முன்னே வந்துள்ளது.
கே: தி.மு.க.வை தோல்வி அடைய செய்வதற்காக உங்களை கருவியாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
ப: தி.மு.க.தான் இதை சொல்கிறது. நான் 29 வருடமாக அந்த கட்சியில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்தவன். இந்த நாட்டிலேயே கட்சி தலைவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். இந்த கருத்துக்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இதுஒரு பொறுப்பற்ற குற்றச்சாட்டு. நான் தி.மு.க.வினருடன் சமாதானம் அடைந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் திருமணத்தில் கலந்து கொண்டேன். 2004–ம் ஆண்டு எங்கள் கட்சி எம்.பி.க்கள் 4 பேரை தி.மு.க.வில் கணக்கில் காட்டி காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளை பெற்றார்கள். எனது குற்றச்சாட்டை சோனியாகாந்தியோ, மன்மோகன்சிங்கோ மறுக்க முடியுமா? இது உண்மையில்லை என்றால் நான் அரசியலை விட்டே விலகத்தயார். எனது கட்சியில் உள்ள தலைவர்களை எல்லாம் இழுத்து சென்றார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் இலங்கை தமிழர்களை அழிப்பதற்கு துணை போனதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
கே: நீங்கள் வலுவான கூட்டணியை அமைத்தும் அது வெற்றிபெற கூடிய அளவிற்கு வரவில்லையே. அது ஏன்?
ப: எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்தும், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் வந்தபோது பத்திரிக்கைகளும், அரசியல் நோக்கர்களும் எங்களை வலுவான கூட்டணி என்றே கூறினார்கள். ஆனால் விஜயகாந்த் சேர்ந்ததற்கு பிறகு எங்களை ஏளனமாக சித்தரித்து எதிர்மறை கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். பத்திரிக்கைகளில் எங்கள் செய்தி முன்பக்கத்தில் வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் உரிய அளவில் செய்திகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். எங்கள் இயக்கத்திற்கு 94 விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதற்கு கூட முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடவில்லை. எதிர்வரும் காலங்களிலாவது பத்திரிக்கைகள் நல்லதை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad