புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2016

சுவாதியை கொலை செய்தவன் யார்? நீடிக்கும் மர்மம்

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் இருக்கும் மகேந்திர சிட்டியில் இன்போசிஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்த சுவாதி தினமும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.45 மணி ரெயிலில் பரனூருக்கு செல்வது வழக்கம். நேற்று காலை அவர் வழக்கம்போல ரெயில் ஏறுவதற்காக வந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவருக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சுவாதியிடம் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினார். முகம், கழுத்து, தாடை ஆகியவற்றில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டதால் ரெயில்வே பிளாட்பாரத்திலேயே சுவாதி சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.

சுவாதி கொலை குறித்து ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. பாலசுப்பிரமணி, சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு கால் டாக்சி டிரைவர் ஒருவருக்கும், சுவாதிக்கும் தகராறு ஏற்பட்டது. சுவாதி கொடுத்த புகாரால் அந்த டிரைவருக்கு வேலை பறிபோனது. இதனால் அவர் கொலை செய்து இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.  இதையடுத்து போலீசார் அந்த கால் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் இந்த கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சுவாதிக்கு காதல் பிரச்சனை ஏதும் உண்டா? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுவாதியின் குடும்பத்து உறவினர்கள், அவருடன் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தோழிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. சுவாதியின் தந்தை மட்டும் போலீசாரிடம் சில சந்தேகங்களை தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சுவாதிக்கு வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  ஆனால் அந்த காதல் முறிந்து போனதாகவும் தெரிகிறது. இந்த விவகாரம் கொலைக்கு காரணமாக இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று காலை வரை சுவாதி கொலையில் எந்தவித துப்பும் துலங்கவில்லை. போலீசார் மேற்கொண்ட விசாரணைகள் அனைத்தும் ஒரு கட்டத்துக்கு மேல் நகராமல் நிற்கிறது.  இதனால் அடுத்து வேறு கோணங்களில் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது போலீசாரிடம் 3 விதமான ஆதாரங்கள் உள்ளன. ஒன்று சுவாதியின் செல்போன் ஆகும். அந்த செல்போன் காணாமல் போய் விட்டது. கொலையாளியே அந்த செல்போனை எடுத்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  என்றாலும் அந்த செல்போனில் பதிவான அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். இதற்காக சுவாதியின் செல்போன் எண்ணுக்கு கடந்த 6 மாதங்களில் வந்த அதிக அழைப்புகள் யார் யாருடையது என்ற விசாரணை நடந்து வருகிறது. இதில் குற்றவாளி பிடிபட்டு விடுவான் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள்.

இரண்டாவதாக கொலையாளி விட்டு சென்ற பட்டா கத்தியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் பதிவாகி உள்ள கைரேகைகள் மூலம் துப்பு துலக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டா கத்தி எங்கு தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இந்த பட்டாகத்தி புத்தம் புதிதாக இருக்கிறது. எனவே கொலையாளி சுவாதியை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் அதை வாங்கி வந்து இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே அந்த மாதிரி பட்டாக்கத்திகள் எந்தெந்த கடைகளில் விற்பனையாகிறது என்ற விசாரணை நடக்கிறது.

3-வதாக ரெயில் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமிராவில் ஒரு வாலிபர் வேகம் வேகமாக நடந்து செல்வது தெரிகிறது. சுவாதி கொல்லப்பட்ட 6.42 மணிக்கு பிறகு 6.43க்கு இந்த காட்சி பதிவாகி இருக்கிறது. எனவே அவர்தான் கொலையாளி என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிபரின் படம் தற்போது தெளிவு இல்லாமல் இருக்கிறது. அந்த வீடியோ காட்சியை மிகவும் தெளிவாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம் சென்னை போலீசாரிடம் இருக்கிறது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாலிபர் படத்தை மிக மிக தெளிவாகவும், துல்லியமாகவும் காண்பதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

இது தொடர்பாக போலீஸ் உயர் ஒருவர் கூறுகையில், “சுவாதி கொலையில் துப்பு துலங்க தொடங்கி இருக்கிறது. விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம். அவன் எங்களிடம் இருந்து தப்ப முடியாது” என்றார்.  ஆனால் இதுவரை சுவாதியை கொலை செய்தவன் யார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.

ad

ad