புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜூலை, 2016

பெண்ணால் சிக்கிய 103 போலி பாஸ்போர்ட்டுகள்

கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவேறு இடங்களிலிருந்து ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வுப்
பிரிவினர் 103 கடவுச்சீட்டுகளை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில், அம்பாறையைச் சேர்ந்த ஒருவரை, கொழும்பில் வைத்துக் கைதுசெய்துள்ளதாகவும் அப்பிரிவினர் அறிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போலியான கடவுச்சீட்டு மற்றும் போலியான குவைத் விசா ஆகியவற்றுடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இவ்வாண்டு ஜூன் 03ஆம் திகதியன்று, பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார். அப்பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, போலியான கடவுச்சீட்டுகள், போலியான விசாக்கள் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்து, பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சட்டவிரோதமான வர்த்தகம் அம்பலமானது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், அம்பாறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட நபரொருவர் 28 கடவுச்சீட்டுகளுடன் ஜூலை 17ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த வர்த்தகத்துடன் தொடர்புடையவர் இருப்பதாக கூறப்படும், கொடிக்காவத்த பகுதியில் உள்ள வீடொன்று, கடந்த 18ஆம் திகதியன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவ்வீட்டிலிருந்து 75 போலியான கடவுச்சீட்டுகள், போலியான விசாக்கள் மற்றும் அடையாள அட்டைகள் பல கைப்பற்றப்பட்டன. அதற்கு மேலதிகமாக, கணினிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் போலி இறப்பர் முத்திரை, குடிவரவு மற்றும் குடியகல்வு முத்திரைகள், 2 இலட்சம் ரூபாய் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கு அப்பால், காரொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.