புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜூலை, 2016

துருக்கியில் கொத்துக் கொத்தாதாக களையெடுப்பு : அரசதரப்புக்கு பலமா? பலவீனமா?

ராணுவசதிப்புரட்சி முயற்சிக்குப் பின்னரான களையெடுப்பில் துருக்கி அரசதரப்பு சமரசத்துக்கு இடமின்றி தீவிரமாகச் செயற்பட்டு
வருகின்றது. அதன் புதியகட்டமாக இன்று கல்வித்துறையில் 15,200 பணியாளர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட கல்வித்துறைப்பணியாளர்கள் அனைவருக்கும் சதிப்புரட்சி சூத்திரதாரியாக தம்மால் அடையாளப்படுத்தப்படும் அமெரிக்காவில் வசிக்கும் மதகுரு பெத்துல்லா குலெனுடன் தொடர்பு உண்டென அரசதரப்பு குறிப்பிடுகிறது.
சதிப்புரட்சியுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் வேருடன் களையப்படுவார்களென சூளுரைக்கும் அரசதரப்பு தொடர்ந்;தும் கைதுகள் மற்றும் பணிநீக்கங்களை துரிதமாக செய்துவருகின்றது.
இதற்கிடையே, இன்று இடைநிறுத்தபட்ட 15,200 கல்வித்துறைப் பணியாளர்களைத்தவிர பல்கலைக்கழங்க பீடாதிபதிகள் 1 500 பேரும் தத்தமது பதவிகளிலிருந்து விலகும்படி கோரப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிரவு இடம்பெற்ற சதிப்புரட்சி தோல்வியில் முடிவடைந்த பின்னர் இடம்பெற்றுவரும் நடவடிக்கைளில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட ஜெனரல்தர படைத்துறை உயரதிகாரிகள், கடற்படைஅட்மிரல்தர அதிகாரிகள், படைஉறுப்பினர்கள், மூவாயிரத்துக்கு மேற்பட்ட நீதிபதிகள் அரச சட்டத்துறை அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட சதிப்புரட்சியுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 7500 காவற்துறை அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசதலைவர் ஏர்டோகனின் தரப்பு இவ்வாறான நகர்வுகளை செய்தாலும் இந்த நகர்வுகளின் எதிர்வினை துருக்கியின் தேசியப் பாதுகாப்பில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏனெனில் தற்போது துருக்கிய படைத்துறையின் முக்கால் பங்கு உயரதிகாரிகள் சதியுடன் தொடர்புடைய குற்றத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சிரியா, ஈராக் மற்றும் ஈரான் போன்ற கொதிநிலை நாடுகளுடன் எல்லைகளை கொண்டுள்ள துருக்கியின் தேசிய பாதுகாப்பு குறித்தும் கவலைகள் எழுகின்றன.
இதனைவிட குர்திஷ் போராளிகள் மற்றும் ஐ.எஸ் ஆயுதாரிதாரிகளின் அச்சுறுத்தலும் துருக்கிக்கு உண்டு. இதனைவிட அமெரிக்கா தலைமையிலான நேட்டோ எனப்படும் வட அத்திலாந்திக் ஒப்பந்த ராணுவக் கூட்டமைப்பில் உள்ள ஒரேயொரு முஸ்லிம்நாடு துருக்கி.
இதனடிப்படையில் சிரியாவிலுள்ள ஐ.எஸ் நிலைகளைத் தாக்குவதற்கு துருக்கியிலுள்ள வான்படைத் தளங்களைத்தான் அமெரிக்கப் போர்விமானங்களும் பயன்படுத்திவருகின்றன.
ஆகையால், ராணுவச் சதிப்புரட்சிக்குப்பின்னான துருக்கியின் நிலைவரங்கள் அமெரிக்காவுக்கும் நிச்சயமாக கவலையளிப்பன.
இவ்வாறான ஒரு நிலையில் சதிப்புரட்சிக்குப் பின்னரான கொத்துக்கொத்தான களையெடுப்பு நாட்டின் சகலமட்டங்களிலும் தொடர்ந்தால் அது களையெடுப்பு என்ற நிலையிலிருந்து நாட்டைமிகப்பலவீனமாக்கும் நிலைக்குமாறக்கூடுமென்பதே படைத்துறை ஆய்வாளர்களின் புதிய கவலையாகும்.
இதேவேளை மதகுரு பெத்துல்லா குலெனுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் ஊடகங்களின் உரிமங்கள் பறிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக துருக்கிய அரசாங்ககம் அறிவித்துள்ளது.