ஆட்சியை பொறுப்பேற்று 20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு எதிரி நாடுகள் இல்லையென்றும் அனைத்து நாடுகளும் இலங்கையின் செயற்பாடு குறித்து மகிழ்வுறுவ தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி, அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி தொடர்ந்தும் கூறுகையில்-
”தற்போது எந்த நாடும் இலங்கையுடன் வெறுப்புடனோ அல்லது பகையுணர்வுடனோ இல்லை. பல தசாப்தங்களின் பின்னர் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நான் ஆட்சிக்கு வரும்போது சர்வதேசத்து டனான உறவு சீர்குலைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த 20 மாதங்களில் நாங்கள் அந்த நிலையை மாற்றியமைத்துள்ளோம். அனைத்து நாடுகளும் எமக்கு ஆதரவு வழங்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக உள்ளன.
ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹுசைனை சந்தித்து பேசியபோது இலங்கைக்கும் தனக்கும் எந்தவிதமான இடைவெளியும் இல்லையென குறிப்பிட்டதோடு, வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்குமாறு குறிப்பிட்டார். உலகத் தலைவர்களின் இந்த சாதகமான நிலைப்பாட்டை இலங்கைக்கு திரும்பிச் செல்கையில் நான் எடுத்துச் செல்வேன்.சர்வதேசத்தின் நட்புறவானது முதலீட்டை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை நாம் பயன்படுத்திக்கொள்வோம்.
மேலும், உலக வெப்பமயமாதல் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து, பொருளாதார ரீதியில் பலம் மிக்க தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்” என்றார்.