நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுக ளின் செயலாளர் நாயகம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி, பான் கீ மூனுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன, அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதையும் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கமும் இலங்கை மக்களும் வெளிப்படுத்திய பேரன்பான வரவேற்புக்கும் உபசரிப்பிற்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு தனது நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கும் பான் கீ மூன் ஆற்றிய சேவைகளைப் பாராட்டிய ஜனாதிபதி, விசேடமாக பாரிஸ் மாநாட்டினூடாக அவர் ஆற்றிய சேவையை இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் இலங்கைக்கு உதவிகளை வழங்கிய அனைத்து அமைப்புக்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.