புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2016

மக்கள் பேரணியானது ஒட்டு மொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும்

தமிழர்களின் பூர்வீக  இடங்களில் சிங்கள - பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்.பல்கலைக் கழக ஊழியர் சங்கம் என்பன தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளன.“எழுக தமிழ்” மக்கள் பேரணியானது ஒட்டு மொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை குருநகர் டேவிட் வீதியில்  உள்ள கலைக்கோட்டத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேற்படி இரு சங்கங்களும் இணைந்து இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,



ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முகமாக நடைபெறவுள்ள இவ் "எழுக தமிழ்" எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் யாழ்.பல்கலைக்கழக  ஊழியர் சங்கமும் எமது பூரண ஒத்துழைப்பினையும் அனுசரணையையும்  வழங்கி நிற்பதாக குறிப்பிட்டன.

நடந்து முடிந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னைய சூழ்நிலைகளும் நம்பிக்கையூட்டக்கூடிய அளவுக்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் கோரிக்கைகள்  அனைத்தையும் பெறுமதியற்றதாக மாற்றுவக்குரிய  சூழ்ச்சியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந் நிலையில் தமிழர் தாயகமானது சிங்கள பெளத்த மயமாக்கலுக்குட்பட்டு பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பெளத்தர்களையும்  சிங்கள  சகோதரர்களையும் வெறுக்கும் மதவாதிகளோ அல்லது இனவாதிகளோ நாமல்ல. மாறாக எமது இனத்துக்கான அடையாளங்களை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தினை வழங்காது அடக்கு முறையின் அடையாளமாக சிங்கள பெளத்த மேலாதிக்கத்தினைத் திணிக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இது தமிழரின்  தனித்துவத்தை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடு எனவும் சங்க அங்கத்தவர்கள் தெரிவித்தனர். 

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று தனித்துவத்தை அழிக்கும் வேலைத் திட்டத்தினை செய்யும் இராணுவம் எமது மண்ணிலிருந்து முதலில் அகற்றப்படவேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக சொந்த வாழ் விடங்களிலிருந்து விரட்டப்பட்டு அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின்  பூர்வீக நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.


இறுதி யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கடத்தப்பட்ட, சரணடைந்த பின்னும் காணாமற்போன ஒவ்வொருவரின் நிலைமை தொடர்பாகவும் உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக் கூறல் இடம்பெற வேண்டும். 
இன அழிப்புத் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும். அத்துடன் இவையெல்லாம் மீண்டும் ஏற்படாத வண்ணம் தமிழர் தேசம், அதன் தனித்துவம், இறைமை, சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி தீர்வுத்திட்டம் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.

இவை போன்ற கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் முகமாக ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய  களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும். 

தற்போதைய சூழலில்  ஒன்றிணைந்த மக்கள் எழுச்சி ஒன்றே தமிழ் மக்களின் வரலாற்றினை தீர்மானிக்கும் என்பதை அறிவு பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். எழுக தமிழ் பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

ad

ad