21 செப்., 2016

எழுக தமிழ் பேரணி - பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும்

தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்படவுள்ள பேரணி, பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமென கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
24 ஆம் திகதி நடக்கவிருக்கும் இந்த பேரணியில் அனைத்து தமிழ் மக்களும் பங்கெடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
எழுக தமிழ் பேரணி தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறுபாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடயங்களில் சில விட்டுக்கொடுப்புகள் இடம்பெற்றுள்ளன. சில விடயங்கள் எமக்குத் தெரியாமலே நடைபெறுகின்றன எனவும், தமிழ் மக்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாகவும், மீண்டும் அழிவுப் பாதைக்கு அவர்களை கொண்டு செல்லக் கூடாது, அவ்வாறு செய்யவும் மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும் நாமும் பொறுமையுடன் இருக்கின்றோம். அதனால் எம்மை மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று கருதக்கூடாது எனக் கூறியுள்ளார்.
நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டியுள்ளது எனவும், அண்மையிலே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வருகை தந்தபோது பல விடயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடயத்தில் சர்வதேச தலையீடு இருக்கிறது. சர்வதேசத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளுக்காக அரசாங்கத்திற்கு தான் ஆதரவு வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர், தமக்கு சார்பான அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே எங்கள் விடயத்தில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, எங்களுக்காக அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் இவ்விடயங்களை மனதில் கொண்டு பல விடயங்களைச் சாணக்கியமான முறையில் கையாள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஜனநாயக முறையில், நியாயமான வகையில் நாங்களே எங்கள் விடயங்களை கையாளக்கூடிய தீர்வை வென்றெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல கருத்துக்கள் இருந்தாலும் இந்த விடயத்தில் ஒற்றுமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தமிழ் மக்கள் பேரவை, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள ஒரு சிலர், ஏனைய கட்சிகள் இணைந்து கொண்ட பாரிய மக்கள் எழுச்சியாக வரவேண்டும் என்பதே எனது நீண்டகால எண்ணமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.எழுக தமிழ் பேரணி - பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும்