புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2016

கார்டனுக்கு செல்ல வேண்டும்!’ - முதல்வரின் உறுதி... சசிகலாவின் ஆறுதல்

ப்போலோ மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர்
ஜெயலலிதா. ' இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகே, கார்டன் திரும்புவார் முதல்வர். மருத்துவமனை உணவுகளையே சாப்பிடுகிறார்' என்கின்றனர் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள். 
போயஸ் கார்டனில் நேற்று முன்தினம் இரவு, அரசுச் செயலர்களுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது எதிர்பாராதவிதமாக மயக்கமடைய, பதறிப் போன சசிகலா உள்ளிட்டவர்கள் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல் பரவியதால், மாநிலம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க தொண்டர்கள், மருத்துவமனை வாசலில் குவிந்தனர். நேற்று தலைமைச் செயலாளர் ராம மோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் மட்டும் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்பினர். ' அம்மா நல்லா இருக்காங்க' எனச் சொன்னாலும், அரசியல் கட்சித் தலைவர்களின் அடுத்தடுத்த ஆறுதல் வாழ்த்துக்களால், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் இன்னமும் அச்சம் அகலவில்லை. கோவிலில் சிறப்பு வழிபாடு, மசூதிகளில் தொழுகை என தீவிர பிரார்த்தனையில் இறங்கிவிட்டனர். 
' என்னதான் நடக்கிறது மருத்துவமனையில்?' என்ற கேள்வியை, அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். " அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில், டாக்டர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரையில் ரத்த மாதிரி, ஸ்கேன் உள்பட 12 வகையான சோதனைகள் எடுக்கப்பட்டுவிட்டன. இதற்கான முடிவுகளை எதிர்பார்த்து மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் முதல்வர் மயக்க நிலைக்குச் சென்றதற்குக் காரணமே, அவர் சாப்பிட்ட மருந்து ஒத்துக் கொள்ளாததுதான். இதனால் வயிற்றுப் பகுதியில் தொற்று ஏற்பட்டுவிட்டது. தொற்று தீவிரம் அடைந்ததோடு, காய்ச்சலின் தன்மையும் அதிகமாக இருந்ததால், மயக்கமடைந்துவிட்டார். முதல்வரின் உடல்நிலையை கவனிக்க, கார்டனிலேயே போதுமான சிகிச்சைக் கருவிகள் இருக்கின்றன. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு, கார்டனிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். 
வாரத்தில் இரண்டு முறை தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கார்டனுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சிறுநீரகத்தில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களாக தூக்கமே இல்லாமல் சசிகலா, இளவரசி, மருத்துவர் சிவக்குமார், திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோர் கவனித்து வருகின்றனர். நேற்று மாலையில் இருந்தே, ' கார்டனுக்குப் போக வேண்டும்' என முதல்வர் விடாப்பிடியாக இருந்தார். இதுபற்றி டாக்டர்களிடம் பேசிய சசிகலா, ' கார்டனுக்குள் இப்போதைக்கு அழைத்துச் செல்லும் முடிவில் நாங்கள் இல்லை. அவருக்கு நல்ல ஓய்வு தேவைப்படுகிறது. வீட்டுக்கு வந்துவிட்டால், மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசனை என அமைதியாக இருக்க மாட்டார். அதற்குப் பேசாமல் மருத்துவமனையிலேயே இருப்பது நல்லது' என உறுதியாகச் சொல்லிவிட்டார். முதல்வரையும் சமாதானப்படுத்திவிட்டார். முதல்வருக்கான உணவுகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்தே தயாராகிறது. கார்டனில் இருந்து எந்த உணவுகளும் செல்லவில்லை. காலை, இரவு நேரங்களில் இட்லி மட்டுமே சாப்பிடுகிறார். சிறிதளவே சாதம் எடுத்துக் கொண்டார்" என விவரித்தவர், 
" முதல்வரின் உடல்நலம் குறித்து வெளியாகும் தகவல்களில் முக்கியமான ஒன்று. ' அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார்' என்பது. இந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லை. அப்படிச் செல்லும் அளவுக்கு எதுவும் நேர்ந்துவிடவில்லை. தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்களில் முதல்வர் கார்டன் திரும்புவார். அண்மையில் திருமணம் செய்த விவேக் ஜெயராமன், தற்போது ஹனிமூன் பயணமாக சுவிஸ் சென்றிருக்கிறார். முதல்வரின் உடல்நிலை பற்றிக் கேள்விப்பட்டதும் பதறிவிட்டார். ஆனால், கவலைப்படும்படி நிலவரம் இல்லையென்றதும் சற்றே நிம்மதியாகிவிட்டார். 'முன்னரே திட்டமிட்டபடி 30-ம் தேதி சென்னை வருவேன். அது ஓ.கேதானே... இல்லை முன்னரே கிளம்பி வரவா!' என விசாரித்திருக்கிறார். இரண்டொரு நாட்களில் ஜெயலலிதாவே கார்டன் திரும்பிவிடுவார் என்றதுமே சமாதானமாகி இருக்கிறார். ஆனாலும், சிறுவயதில் இருந்தே முதல்வர் தூக்கி வளர்த்த விவேக், உடனடியாகக் கிளம்பி மருத்துவமனைக்கு வராததில் இளவரசிக்குக் கொஞ்சம் வருத்தம்தான்" என விவரித்து முடித்தார். 
' முதல்வர் சிங்கப்பூர் செல்கிறார்; அமெரிக்கா செல்கிறார்'  என உறுதிப்படுத்தாத தகவல்கள் வலம் வந்தாலும், ' அவர் நன்றாக இருக்கிறார்' என கார்டன் தரப்பில் இருந்தும் தகவல்கள் வெளியாகின்றன. நலம் உண்டாகட்டும்!

ad

ad