முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களை ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்
' என நேற்று ஆளுநர் வெளியிட்ட அறிக்கை, 20 நாட்களாக நிலவிவந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ' மருத்துவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்த நாளாக நேற்று அமைந்துவிட்டது. ஆனால், ஓ.பி.எஸ் வசம் இலாகாக்கள் ஒப்படைக்கப்பட்டதை, சசிகலா ரசிக்கவில்லை" என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ வெளியிடும் தகவல்கள் மட்டுமே, அ.தி.மு.க தொண்டர்களுக்கு நிம்மதியை அளித்து வந்தது. ' முதல்வர் குணமடைந்து வரும் வரையில் பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை, தி.மு.க எழுப்பி வந்தது. ' அதற்கான அவசியம் ஏற்படவில்லை. அப்படித் தேவைப்பட்டால், அதை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முடிவு செய்யட்டும்' என்ற எதிர்க்குரல்களும் எழுந்தன. ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சித் தலைவர்களின் வருகையால், அப்போலோ மருத்துவமனையே அரசியல் மேடையாக காட்சியளித்தது.
இந்நிலையில், நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் இருந்து அறிக்கை வெளியானது. அதில், ' இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3-ன்படி, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டங்களுக்கு இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி, அவர் மீண்டும் தனது பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பார்' என அறிவித்தார். ஆளுநரின் அறிக்கையை தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.
"முதல்வர் ஆலோசனையின்படிதான், ஓ.பி.எஸ் வசம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதா?" என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த நிலையைவிட, நேற்று காலை முதலே முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் பெருமளவு குறைந்துவிட்டது. '1984-ம் ஆண்டு மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று வந்தபோது, நாவலர் நெடுஞ்செழியன் முதல்வரின் இலாகாக்களை கவனித்தார். அதேபோல், ' யாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது' என்ற விவாதம் சில நாட்களாக நடந்து வந்தது. ஆனால், சசிகலாவின் சாய்ஸாக ஓ.பி.எஸ் ஒருபோதும் இருந்ததில்லை. கவர்னரை சந்திக்கும்போதுகூட எடப்பாடி பழனிச்சாமியையும் உடன் அனுப்பி வைத்தார் சசிகலா. இதனால், 'எடப்பாடிக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம்' என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நேற்று மதியம் கண்விழித்த முதல்வர் சசிகலாவை மட்டும் சந்தித்திருக்கிறார். அதன்பின் ஓ.பி.எஸ் வசம் பொறுப்புகள் ஒப்படைக்க, முதல்வர் கிரீன் சிக்னல் கொடுத்தார்" என விவரித்தவர்,
அதேநேரத்தில், கார்டன் வட்டாரத்தின் கடும் கோபத்துக்கும் ஆளானார். இதுதொடர்பாக, இரண்டு முறை முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க மனு கொடுத்தார். இரண்டு முறையும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்தக் கடிதத்தில், 'அம்மா உங்களை சந்தித்து விளக்கம் கொடுப்பதற்கு மட்டும் நேரம் அளியுங்கள். எல்லாவற்றுக்கும் பதில் கொடுக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இரண்டு முறையும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், முதல்வரின் தேர்வாக ஓ.பி.எஸ் இருக்க ஒரே காரணம், 'நம் கையை விட்டு அவர் செல்ல மாட்டார்' என்கின்ற முதல்வரின் நம்பிக்கைதான். இதனால், மன்னார்குடி வகையறாக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்" என விரிவாக பேசி முடித்தார்.
மருத்துவர்களுக்கு எப்படி நல்ல நாளாக நேற்று அமைந்ததோ, அதேபோல் ஆட்சி அதிகாரத்திலும் மிஸ்டர்.பணிவு வலம் வர ஆரம்பித்துவிட்டார். தலைமைச் செயலகத்தில் பணிகள் வேகம் பெறட்டும்... முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெறட்டும்!