புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2018

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்... தேர்தலைக் குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.க !

மு.க.ஸ்டாலின் - தி.மு.க.
மிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க-வுக்கு ஆட்சியமைக்கக்கூடிய
அளவு பலம் கிடைக்காத நிலையிலும், அதிக இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
அந்தத் தேர்தலுக்கு முன் 2004-ம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரி என 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் தி.மு.க-காங்கிரஸ்-பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கைப்பற்றின. "அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, வீடு புகுந்து ஊழியர்களைக் கைதுசெய்தது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் 'டெஸ்மா' சட்டத்தைப் பயன்படுத்தியது, தற்காலிக ஊழியர்களை நியமித்தது” என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 96 இடங்களில் வென்று கருணாநிதி முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
ராகுல்காந்தி - கருணாநிதி
தற்போது ஜெயலலிதா இல்லாத நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டார். முரசொலி நாளிதழின் பவளவிழா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்ததன் வைரவிழாவையொட்டி, சென்னையில் தேசிய அளவில், பி.ஜே.பி. தவிர்த்த அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில்தான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக, தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.
தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம் என்ற சூழல் நிலவிவரும் வேளையில், தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் அமைந்தது.
ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா அறிவாலயத்தில் வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் வரும்பட்சத்தில், இந்த தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து ஏற்கனவே கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வரும் ஸ்டாலின், அனைத்துக் கட்சிக்கூட்டத்தை நடத்தியிருப்பதன் மூலம் தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
ஸ்டாலின் - முத்தரசன்
இந்தக் கூட்டத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 
கூட்டத்திற்குப் பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் கட்சிகள், தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுமா என்பது எதிர்காலத்தில் தெரியவரும் என்றார். அண்மையில் நடந்து முடிந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்ததுடன், டெபாசிட் தொகையை இழந்தது, கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பது, கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவே தெரிகிறது.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தி.மு.க-வின் திட்டம் குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய வலுவான அணியை உருவாக்க வேண்டியது அவசியம். அதன் ஒருபகுதியாகவே இந்தக்கூட்டம் நடத்தப்பட்டது.
பல்வேறு மாவட்ட நிர்வாகிகளிடமும் செயல்தலைவர் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட அளவில் கட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அவர் கேட்டுள்ளார். எனவே, இது நல்ல முயற்சியாக அமையும். தி.மு.க.வின் வளர்ச்சிக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய மு.க.ஸ்டாலின் தயாராகி வருகிறார். கட்சியின் நலனுக்காக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தயாராக உள்ளார். தமிழக அரசியல் களத்தில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் நிச்சயம் தேவை" என்றார்.
இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், தமிழக அரசின் பல்வேறு தோல்விகளைக் கண்டித்தும், அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவ அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்வதுடன், அவர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எனினும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் செயல்படும் ஸ்டாலினின் முயற்சி எடுபடாது என்று மாநில அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ad

ad