புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2018

எமது தலைமை, தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது

எமது தலைமை யாருடைய பொக்கட்டுக்களுக்குள்ளும் இல்லை. தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது.

அதை விடுத்து யாருடைய பொக்கட்டுக்களுக்குள்ளும் போக மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்தையும் வெல்லக் கூடிய வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே இருக்கின்றது. நாங்கள் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்று வெற்றியடைவோம். அதே நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக இடைக்கால அறிக்கை மற்றும் இரண்டு கோடி ரூபாய்ப் பிரச்சனை. இவ்வாறான பொய்தனமான விமர்சனங்களை வைத்து மக்களைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகளைக் கண்டு மக்கள் குழம்புகின்றவர்கள் அல்ல அவர்களுக்கு உண்மை நிலைமை தெரியும்.
இடைக்கால அறிக்கை என்று சொல்லும் போது அது நடவடிக்கைகக்குழு விவாதித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கை அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதோ நிராகரிப்பதோ என்கின்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. அந்த நடவடிக்கைக்குழுவில் அங்கம் வகித்த கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு இணைப்பு இட்டிருக்கின்றன.
அந்த இணைப்பிலே இது அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட அல்லது முழுமையான அறிக்கை இல்லை என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கை சம்மந்தப்பட்ட ஆறு குழுக்கள் ஆறு முக்கிய விடயங்கள் சம்மந்தமாக ஆராய்ந்து ஆறு அறிக்கைகள் தயாரித்துள்ளன. இவ்வறிக்கைகள் விவாதிக்கப்பட்டு இறுதி அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும். அது தயாரிக்கப்பட்டதன் பின்புதான் அரசியல் வரைபு ஒன்று வரும். அந்த வரைபு வருகின்ற போதுதான் அதனை ஏற்பதா இல்லையா என்ற கேள்வி கேட்கப்படும்.
அதனை ஏற்பதா இல்லையா என்கின்ற கேள்வி வரும் போது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான ஒரு தீர்வாக இருந்தால் மாத்திரமே நாங்கள் அதனை ஏற்போம். தமிழ் மக்களுக்கு பாதகமான அரசியல் தீர்வாக இருக்குமாயின் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது தான் இங்கிருக்கின்ற நிலைமை. இது மக்களுக்கும் தெரியும் இதனை வைத்து விமர்சிப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பலமான கட்சியாக இருக்கின்றது. அதனைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரச கட்சியாக இருந்தாலும் சரி சுயேட்சைக் குழுக்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகவர்கள் எல்லாம் ஏதேதோ கூறுகின்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் இவை இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான். இதில் எமக்கு எவ்வித சந்தேகங்களும் கிடையாது. ஆனால் இன்றிருக்கின்ற நிலையிலே இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒரு அரசினை நடத்துகின்றார்கள்.
இந்த அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்;ப்பதாக சர்வதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அந்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அது மிகமிக மெதுவாக நாங்கள் நம்பிக்கை இழக்கக்கூடிய வகையிலே இருந்தாலும்.
நாங்களாகவே அதனை உடைக்கக் கூடாது என்ற வகையில் மிகக் கவனமாக இருக்கின்றோம். ஏனெனில் சர்வதேசமாக இருக்கலாம் இங்கு வருகின்ற உயர் பிரமுகர்களாக இருக்கலாம் தொடர்ந்து எங்களுக்குக் கூறுகின்ற விடயம் இங்கு நடைபெறுகின்ற விடயங்களைக் குழப்பி விடாதீர்கள் என்பதுதான்.
இது இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயற்படுகின்ற அரசாங்கம் இதில் நாங்கள் எமது முயற்சிகளைக் கைவிடாது தொடர வேண்டும். நாங்கள் எமது நம்பிக்கைத் தண்மையை முழு உலகிற்கும் காட்ட வேண்டும். அதன் பிறகு அரசு குழப்பினால் அது அவர்களின் பிரச்சினை.
அது குழம்புகின்ற பட்சத்தில் நாங்களாகக் குழப்பாமல் விட்டால் தான் மீண்டும் சர்வதேசத்திடம் சென்று எமது பிரச்சினைக்கான உதவிகளைக் கேட்க முடியும். எமது தலைமை யாருடைய பொக்கட்டுக்களுக்குள்ளும் இல்லை. தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது. அதை விடுத்து யாருடைய பொக்கட்டுக்களுக்குள்ளும் போக மாட்டாது.
ஜனநாயக் போராளிகளைப் பொருத்தமட்டில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு மரியாதை மதிப்பு இருக்கின்றது. ஏனெனில் அவர்கள் கூடுதலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய உயிர்களைத் துச்சமாக மதித்துப் போராடியவர்கள்.
அதனடிப்படையில் அவர்கள் மீது எங்களுக்கும் மரியாதை இருக்கின்றது. அவர்கள் எங்களுடன் இணைந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிடுவது எங்களுக்கு ஒரு பலத்தைக் கொடுத்திருக்கின்றது.
காணி அபகரிப்பு, காணாமல் போனார் பிரச்சனை, அரசியற் கைதிகள் பிரச்சனை, வேலையில்லாப் பிரச்சனை போன்ற மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரமான பிரச்சனையல்ல அது வடக்கு கிழக்கு மாகாணம் பூராகவும் உள்ள பிரச்சனை. இந்தப் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் நாங்கள் கூடுதலான அழுத்தம் கொடுத்தக் கொண்டிருக்கின்றோம். அரசு மிகமிக மெதுவாகத்தான் காரியங்களை ஆற்றுகின்றது என்பதால் இவற்றை அவர்கள் உடனடியாகச் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பாக்க முடியாது.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. காணி விடுவிப்புகள் பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மெதுவாக இருந்தாலும் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் பல காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
அதே நேரத்தில் காணி அபகரிப்பு என்பதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை தக்க தருணங்களில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு எடுத்தக் கூறி தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். அதே போன்று அரசியற் கைதிகளிலும் பலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். காணாமற் போனோர் பிரச்சனை தான் பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது.
இந்த அரசு மாத்திரமல்ல எந்த அரசும் இவ்விடயத்தில் சரியான ஒரு பதிலைத் தருவதற்குத் தயக்கம் காட்டுகின்றார்கள். காணாமல் போனோர் அலுவலகம் திறப்பதற்கு வரவுசெலவுத் திட்டத்திலே நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அது சம்மந்தமான நடவடிக்கைகளும் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இக் குறைகளையெல்லாம் நாங்கள் அரசாங்கத்திடம் மாத்திரமல்ல சர்வதேசத்திடமும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறி அவர்களும் அவர்களால் இயன்ற அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். வேலையில்லாப் பிரச்சனை நாடு பூராகவும் இருந்தாலும் வடகிழக்கில் அது பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. சில வேளைகளில் தென்னிலங்கையில் வேலைகள் கொடுக்கப்பட்டு அவர்கள் இங்கு வருகின்ற நிலைமைகளையெல்லாம் பார்க்கின்றோம்.
அது தொடர்பில் நாங்கள் பல முறைப்பாடுகளைப் போட்டு அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். இது எங்களுடைய அரசாங்கம் அல்ல, இவற்றை நாங்களாகவே தீர்க்க முடியாது. நாங்கள் போராடி, பேச்சுவார்த்தைகள் மூலம் தான் பெற வேண்டும். அதற்கான முழுமையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
பிணைமுறி விடயம் தொடர்பில் எமது தலைமை மிகத் தெளிவாக கருத்து வெளியிட்டிருக்கின்றது. அதை விடுத்து ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் போதும் எமது கட்சி சார்பில் குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்க்பட வேண்டும் என்று தெரிவித்தள்ளோம்.
இதற்கு மேல் நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை. இதனை அரசு தான் மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் போது அதற்கு எங்களால் ஆன ஆதரவைச் செய்வோம்.
உள்ளுராட்சித் தேர்தலில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் வரவேற்கின்றோம். பெண்கள் எல்லாத் துறைகளிலும் மிகமிக முன்னேற்றமாக இருக்கின்ற போது அரசியலில் மாத்திரம் மிகவும் பின்னடைவில் இருக்கின்றார்கள்.
இந்த விடயம் சட்டமாக இருந்திருக்காவிட்டால் இவ்வளவு பெண் வேட்பாளர்கள் வந்திருக்க முடியாது. அவர்கள் அங்கத்தவர்களாக வந்த பிறகு தங்கள் கடமைகளை நன்றாகச் செய்வார்கள் என்று நினைக்கின்றேன். ஏனெனில் மாதர் சங்கங்கள் போன்ற சமுக சேவைகளில் அவர்கள் மிகவும் நன்றாக ஈடுபடுகின்றார்கள்.
இது அவர்களுக்கு ஒரு ஆரம்பமாகப் பார்க்கின்றேன். இந்த ஆரம்பம் படிப்படியாக அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைக் கூட்டும் என நம்புகின்றேன். பெண்களை உள்ளடக்கியது தேர்தலைப் பொருத்தமட்டில் பெண்களுக்கு வாக்களிக்கும் ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும் என நான் எதிர்பாக்கின்றேன்.
ஏனெனில் இந்த நாட்டின் சனத்தொகையில் 53 வீதமானவர்கள் பெண்கள் எனவே அவர்களுக்குரிய இடங்கள் கொடுக்கப்பட வேண்டும். இந்த முயற்சியின் மூலம் அடுத்த கட்டத்தில் பெண்களுக்கான சரியான இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ad

ad