வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு
காணாமல்போனோர் அலுவலகத்தால் 'இனிமேலும் காணாமலாக்கப்படுவதை தடுப்போம்"
எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நேற்று
ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட
உரையாற்றிய போதே மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச ரீதியில்
முன்னிலை பெற்றுள்ளது. மனித உரிமை தொடர்பில் ஏனைய நாடுகளுக்கு
முன்னுதாரணமான நாடாகவே இலங்கை பார்க்கப்படுகின்றது. இலவசக்கல்வி, இலவச
மருத்துவம் மற்றும் தனிமனித அபிவிருத்தி என்பவற்றில் முன்னிலையில் உள்ளது.
எனினும் இங்கு வலிந்து காணாமலாக்கப்படுதல் எனும் பாரிய மனித உரிமை மீறல்
இடம்பெற்றுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் நீதித்துறை சார்ந்த பிரச்சினையாக மாத்திரமே
பார்க்கப்படுகின்றது. எனினும் அது நீதித்துறைசார் பிரச்சினை என்பதுடன்
பாரியதொரு சமூகப்பிரச்சினையும் ஆகும். ஆனால் எமது சமூகத்திலே இவ்விடயம்
தொடர்பில் தெளிவற்ற நிலையே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பேசும்
போது அநேகம்பேர் யுத்தத்ததை வென்ற வீரர்களுக்கு எதிராகப் பேசுவதாகவும்,
அவர்களை துரோகிகளாகவும் பார்க்கும் நிலையும் உள்ளது. அது முற்றிலும்
தவறாகும். இவ்விடயத்தை இன, மத ரீதியாகப் பார்ப்பது நாட்டுக்குச் செய்யும்
துரோகமாகும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனையை அவர்களின்
நிலையிலிருந்து நோக்கினால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும்.
காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் செயற்றிறன் மிக்க
வகையில் செயற்பட்டு வருகின்றது. பொதுவாக எத்தனைபேர் காணாமல் போனார்கள்
போன்ற எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். எனினும் ஒருவருக்கு
அநீதி இழைக்கப்பட்டாலும் அது மனித உரிமைக்கான சவாலாகும். இவ்விடயத்தில்
காணாமல்போனோர் அலுவலகம் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில் அலுவலகத்தை மேலும் பலப்படுத்துவதுடன், இவ்விடயம் சார்ந்த ஏனைய
பங்காளர்களையும் பலப்படுத்துவது அவசியமாகும். காணாமல்போனோர் அலுவலகத்திற்கு
இதுவரையில் எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் காணப்படவில்லை என்பதுடன்,
அதன் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கவில்லை காணாமல்போனோர்
அலுவலகம் மக்களுக்கானது. எனவே அதன் சுயாதீன செயற்பாடுகளுக்கு மக்கள் தமது
பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
|