வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள
குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர்
து.ரவிகரன் கொண்டு வந்த பிரேரணை சபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில்
அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நடைபெற்றது. இதன்போதே மேற்படி பிரேரணையை
ரவிகரன் சபைக்கு கொண்டு வந்தார்.
பிரேரணையை முன்வைத்து ரவிகரன் உரையாற்றுகையில்,
தமிழர் நிலங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் இதுவரை சட்டத்திற்கு புறம்பாக
மேற்கொள்ளப்பட்ட சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புகளையும் தற்போது
முல்லைத்தீவு உட்பட ஏனைய நான்கு மாவட்டங்களிலும் நிகழ்த்தப்படும்
சிங்களமயமாக்கல் முன்னெடுப்புகளையும் தகுந்த வல்லுநர் குழாம் ஒன்றை நிறுவி
அவர்களினூடாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவ்வாவணப்படுத்தல் வடமாகாணத்தில்
மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கல் தொடர்பான வட மாகாணசபையின்
உத்தியோகபூர்வ ஆவணமாக இருத்தல் வேண்டும்.
தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும் இச்சமயத்தில் தமிழ் மக்களின் இருப்பையே
கேள்விக்குள்ளாக்கும் இக்குடியேற்றங்களை உடன் நிறுத்தவேண்டும் என்ற எமது
அழுத்தமான கருத்தினை அரசாங்கத்துக்கு உரிய வகையில் தெரியப்படுத்துதல்.
தற்போது முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சட்டத்திற்கு புறம்பான
மாயபுர குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் முகமாக வட மாகாணசபையை
சார்பாக்கும் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் குறித்த இடத்திற்கு வருகை
தந்து தொடரும் சிங்கள மயமாக்கலை எதிர்த்து வலிமையான கண்டனங்களை
தெரிவிக்கும் வகையில் ஒருநாள் கவனயீர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மூன்று
கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த விடயம் தொடர்பாக
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா
ஆகியோர் தொடர்ச்சியாக அரசுடன் பேசி வருகிறார்கள். ஆகவே ஆக்கபூர்வமான தீர்வு
கிடைக்கும் என கூறினார்.