புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2018

முழு ஒத்துழைப்புக்கு இந்தியா தயார்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் வாழ்க்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தைக்
கட்டியெழுப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில், அவதானம் செலுத்தியுள்ள இந்தியா, அபிவிருத்தி மற்றும் நிர்மாணப்பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்குவற்கும் தயாரென அறிவித்துள்ளது, 
 அதில், பலாலி, மட்டக்களப்பு, மத்தல ஆகிய விமான நிலையங்களை அபிவிருத்தி செய்தல், காங்​கேசன்துறை, திருகோணமலைத் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்தல் மற்றும் வடக்கில் வீடுகள் மற்றும் கைத்தொழில் வலயங்கள் ஆகியனவற்றை நிர்மாணித்தல் தொடர்பில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. 
இந்தியாவுக்கான இரண்டு நாள்கள் விஜயத்தை மு​டித்துக்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை இரவு நாடுதிரும்பினார். அவர், தன்னுடைய இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், இந்திய உள்விவகார விவகார அமைச்சர் ரஜ்நாத் சிங், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 
பிரதமர் ந​ரேந்திர மோடியுடனான சந்திப்பு, புதுடெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில், கடந்த 20ஆம் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில், இலங்கைப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையி​ல் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுப்பதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது” என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, தொழில்வாய்ப்புகள் மற்றும் வருமான வழிவகைகளைப் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளமையால், தனிநபர் வருமானம் மற்றும் பிரதேசத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.  
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை - இந்திய அதிகாரிகள் இணைந்து, அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடித் தீர்மானம் எடுப்பதும் மிகவும் உசித்தமானதாகும் என்பது தொடர்பில், இந்தச் சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.  
இதேவேளை, பெருந்தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் உதவிகள் தொடர்பில் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய வீடமைப்பு வேலைத்திட்டங்களுக்கு தேவையான காணியை இனங்காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,  
பெருந்தோட்டங்களில், இன்னும் 10 ஆயிரம் வீடுகளுக்கான வேலைத்திட்டங்களுக்கு தாம் ஒத்துழைப்பு நல்குவதற்குத் தயாரென, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதன்போது தெரிவித்துள்ளார்.  
இந்நிலையில் மனிதவள ​அபிவிருத்தி மேம்பா​ட்டை முழுமைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பில், இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது.  
இ​தேவேளை, தெற்கு இந்தியாவிலிருந்து பலாலி மற்றும் மட்டக்களப்பு வரை, கூடிய விரைவில் நேரடியான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை அபிவிருத்திப் பணிகளை மிகவிரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இதன்போது கருத்துரைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் பெரிய விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில், ஓடுபாதையை விஸ்தீரணப் படுத்துவதற்கான தேவை ஏற்படு​மென சுட்டிக்காட்டினார். அதற்கு, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நல்கமுடியுமென, இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதேவேளை, இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்த நிறுவனங்களின் ஊடாக திருகோணமலை நகரம் மற்றும் துறைமுகம் ஆகியனவற்றை அபிவிருத்தி செய்யமுடியுமென்பது தொடர்பில், இந்தச் சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ad

ad