-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

27 டிச., 2018

இராணுவ முன்பள்ளி:வக்காலத்து வாங்குகின்றார் ஆளுநர்

இலங்கை இராணுவத்தின் பிரிவான சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் ஊதியத்தில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை கடமையிலிருந்து நீக்க கூட்டமைப்பே காரணமென்கிறார் வடக்கு ஆளுநர்.

அடுத்து நடைபெறவுள்ள வடக்கு கிழக்குக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளித்து தகுந்த தீர்வொன்றினை பெற்றுக்கொள்ளும்வரையில் அவர்கள் முன்பள்ளியினை நடாத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் மேஜர் கொஸ்வத்தை என்பவருக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளாராம்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் மக்களை இராணுவ மயமாக்கல் திட்டத்தின் கீழ் முன்பள்ளிகள் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. 2012ம் ஆண்டிலிருந்து சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் 30 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கான ஊதியத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வடக்கு கிழக்குக்கான ஜனாதிபதி செயலணியில் இந்த விடயம் பேசப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் எம்.ஏ.சுமந்திரன் ,இரா.சம்பந்தன் ஆகியோர் ஜனாதிபதியிடம் இராணுவத்தின் கீழியங்கும் முன்பள்ளிகளை வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ளீர்க்க கோரியிருந்தனர்.

நீண்ட இழுபறிகளின் பின்னராக சிவில் பாதுகாப்பு திணைக்களம் முன்பள்ளி ஆசிரியர்களது ஊதியங்களை நிறுத்தி பணியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு பணித்துள்ளது.

இதுனால் தமது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தும் தமக்கு தீர்வினை பெறறுத்தருமாறு கோரி முன்பள்ளி ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் இன்று (26) ஈடுபட்டிருந்தனர்.

இராணுவத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களாக வேலை செய்வதில் ஜனாதிபதிக்கோ சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கோ மத்திய அரசுக்கோ எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லையென பதிலளித்துள்ள ஆளுநர் இது தொடர்பில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்வொன்றினை பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் ஆளுநர் ஜனாதிபதியுடன் பேசி முடிவொன்றினை வழங்கும்வரை தொடர்ந்தும் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பணியாற்ற உத்தரவுபிறப்பித்துள்ளார்.

விளம்பரம்