1 ஜன., 2019

பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பெற்றுக்கொண்டமை
பொன்னான சந்தர்ப்பமாகும். முழு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பாராயின் சிங்கள மக்கள் மத்தியில் நாயகனாக வலம்வந்திருப்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தினை முழமையாக நழுவ விட்டுவிட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- நாட்டில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டு சற்று ஓய்ந்திருக்கின்ற நிலையில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- அதிகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் அரசியல் செயற்பாடுகளாகவே உள்ளன. எந்தவொரு தரப்பினரும் கொள்கை அடிப்படையில் அதனை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றார்கள் என்று கூறமுடியாது. நாட்டில் ஏற்பட்ட புரட்சி விகாரமானதாகும். பாராளுமன்றத்தில், பிரதானமான இரு தரப்பினருக்கும் பெரும்பன்மை காணப்படவில்லை. 
இருப்பினும், ஒருதரப்பினருக்கு எதிரான நிலைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை கொண்டிருந்தன. தற்போது அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட்டமைப்பு, ஜே.வி.பி போன்றவை அரசாங்கத்திற்கு ஆதரவானவை அல்ல. அதனால் தான் நாட்டில் புரட்சி மற்றம் அதன் பின்னரான நிலைமைகளை நான் விகாரமானவை என்று குறிப்பிட்டேன்.
நாட்டின் தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. நாட்டின் எதிர்காலம் சார்ந்து அவர்கள் நிச்சயமாக சிந்தித்து தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். அதாவது, சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், நாட்டின் நிலங்களை வெளிநாடுகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் எதிர்க்கட்சிக்கு எவ்விதமான நிலைப்பாடும் இல்லை. உதராணமாக கூறுவதாயின் சிங்கப்பூர் ஒப்பந்தம், திருகோணமலையில் அமெரிக்க படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலம் போன்றவற்றில் எதிர்க்கட்சியினரிடத்தில் எவ்விதமான நிலைப்பாடுகளும் இல்லை. அமைதியாகவே இருக்கின்றார்கள்.
அரசாங்கத்திற்கு அல்லது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணிக்கு ஆதரவளிப்பதோ எதிர்ப்பதோ என்பது கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்திற்காக போராடினாலும் போராடிய தரப்பினரிடத்தில் ஜனநாயகம் உள்ளதா என்பது கேள்விக்குரியதாகின்றது. ஆகவே பாராளுமன்ற பெரும்பான்மை உள்ள அரசாங்கமொன்று மக்கள் ஆணையுடன் மீண்டும் அமையப்பெறுவதே பொருத்தமானதாகும்.
கேள்வி:- தேசிய அரசாங்கமொன்று அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மக்கள் ஆணை நோக்கி செல்வதற்கு வாய்புண்டா?
பதில்:- ஏதோவொரு அரசியல் கட்சியுடன் இணைந்தால் தேசிய அரசாங்கத்தினை அமைத்து விட முடியும் என்றில்லை. ஆரசியலமைப்பில் அதுதொடர்பாக கூறப்பட்டுள்ளது. ஆகவே தேசிய அரசாங்கம் அமைவதற்கு வாய்ப்பில்லை. மீண்டும் மக்கள் ஆணைக்குச் செல்ல வேண்டும். அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் எனக்கருதுகின்றேன்.
கேள்வி:- தேசியப்பட்டியல் ஊடாக உங்களுக்கு உறுப்புரிமை தந்த கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் தொடர்ந்தும் சுயாதீன உறுப்பிராகவா செயற்படவுள்ளீர்கள்?
பதில்:- பிரதான இரு கட்சிகளினதும் கொள்கைகளுடன் என்னால் இணைந்து பயணிக்க முடியாத நிலையிலேயே நான் சுயாதீனமாக செயற்படும் தீர்மானத்தினை எடுத்திருந்தேன். ஆவ்வாறு தான் தொடர்ந்தும் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளேன். ஏந்த அரசாங்கமாக இருந்தாலும் சிறந்த, பயனுள்ள விடயங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு நான் பூரணமான ஆதரவை வழங்குவேன். 
நாட்டிற்கு குந்தகமான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பேன். இது தான் எனது தற்போதைய நிலைப்பாடாகும். அதற்காக உண்மையானதும் முற்போக்கானதுமான சக்தியொன்றை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறானதொரு வலுவான சக்தியை கட்டியழுப்புவதற்கு முனைப்பு கொண்டு முன்னெடுப்புக்களைச் செய்து வருகின்றேன்.
கேள்வி:- எவ்வாறான முன்னெடுப்புக்களைச் செய்கின்றீர்கள் என்று கூறமுடியுமா?
பதில்:- பிரதான இரு கட்சிகளுக்கும் எந்தவிதமான கொள்கையும் இல்லை. ஜே.வி.பி பொதுவுடமையாளர்கள் என்று கூறினாலும் அவர்களிடத்திலும் தெளிவான கொள்கை இல்லை. ஆகவே இன, மத, மொழி பேதமின்றி கொள்கை அடிப்படையில் செயற்படும் வலுவான அரசியல் சக்தி அவசியமாகின்றது. அவ்வாறான சக்தியுடன் நானும் இணைந்து எனது அரசியல் பயணத்தினை முன்னெடுப்பதற்கு உள்ளேன். தற்போதைய நிலையில் மேற்படி தொனிப்பொருளின் கீழ் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளேன். 'ஸ்ரீலங்கா ஜாதிக மஹா சபா' என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி நாடாளாவிய ரீதியில் மக்கள் கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.
தமிழ்த் தரப்பினருடன் எமது தொடர்பாடலும் உறவுகளும் சீரானவையாக இல்லை. தமிழ், சிங்கள தரப்புக்களில் இனவாதமே பேசப்படுகின்றது. தத்தமது இனங்களுக்கு அப்பால் நாடு தொடர்பில் சிந்திக்கின்ற நிலைமைகள் இன்னமும் உருவாகவில்லை. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக தமிழ், சிங்கள நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் கலாசாரத்தினை விரும்பும் தரப்பினரையும் எம்முடன் இணைப்பதில் அதீத ஈடுபாடுகளை கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- நீங்கள் ஒருங்கிணைக்கும் இந்தப் புதிய அணியில் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் உறுப்பினர்கள் யாராவது இணந்துள்ளனரா?
பதில்:- நான் அனைவருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன். தற்போது வரையில் இடதுசாரிக் கொள்கையுடயைவர்கள், தமிழ்த் தரப்பில் முற்போக்காளர்கள் எனப் பலர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசியல் கட்சிகளிலிருந்து இதுவரையில் யாரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. தற்போதைய அரசியல் கட்சிகளில் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்தவர்களே உள்ளார்கள். அவ்வாறானவர்களை எம்முடன் இணைக்கும் எண்ணமும் இல்லை. இதேநேரம், சில கட்சிகளில் கட்சியின் முடிவுகளாலும் செயற்பாடுகளாலும் வெறுப்படைந்துள்ள உறுப்பினர்கள் எமது அணியுடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். அதுதொடர்பிலான பரிசீலனைகளைச் செய்து வருகின்றோம்.
கேள்வி:- தமிழ்த் தரப்பிலும், வன்போக்கு, மென்போக்கு அரசியல் தரப்புக்கள் காணப்படுகின்ற நிலையில், மென்போக்கான தலைமையைக் கொண்டிருக்கும் கூட்டமைப்புடன் தங்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டீகளா?
பதில்:- அனைத்து தரப்பினருடனும் அவசியமேற்படுகின்ற போது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும். அதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழ்த் தரப்பில் கூட்டமைப்பினை விடவும் அரசியலில் ஈடுபடாத முற்போக்கானவர்கள், நாடு சார்ந்து சிந்திப்பவர்கள் உள்ளார்கள். அவ்வாறானவர்களின் ஒத்துழைப்புத் தான் எமக்கு அவசியமாகின்றது. அவ்வாறானவர்களை ஒருங்கிணைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இவை எல்லாவற்றையும் விட இன, மத பேதமின்றி பொது மக்களின் மனதை வெல்ல வேண்டும். அவ்வாறு வெல்வதானால் எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும். நாட்டின் வளங்கள், எதிர்காலம் தொடர்பில் தெளிவு படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாக கூறுவதாயின், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இயற்கைப்பசளைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாய விளைபொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டு விவசாயிகளுக்கான கடன்கள் நியாயமாக பெற்றுக்கொடுக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை பாதுகாப்பதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து அரசியலுக்காக இனங்களுக்கிடையில் மேலும் விரிசல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைப்பது பொருத்தமானதல்ல.
கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்து பட்ட கூட்டணியொன்று உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தங்களில் நிலைப்பாடு என்ன?
பதில்:- ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்காக இணைந்து செயற்படுகின்றோம் என்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் கூறியிருந்தாலும் அத்தகையதொரு கூட்டணியில் அக்கட்சிகள் இணைந்து கொள்ளாது. ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தரப்புக்கள் அவ்வாறே தான் இருக்கும் புதிதாக அக்கூட்டணியில் யாரும் இணைவதற்கு இல்லை என்றே கருதுகின்றேன். என்னைப்பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த பொருளாதார கொள்கைக்கு நான் முழுமையாக எதிரான ஒருவனாவேன். நூட்டையும் வளங்களையும் விற்பனை செய்யும் கொள்கையையே அவர்கள் பின்பற்றுகின்றார்கள். அவ்வாறான நிலையில் அக்கட்சியுடனே அல்லது அக்கட்சி தலைமையிலான அணியுடனோ நான் இணையப்போவதில்லை என்று தீர்மானம் எடுத்தாகிவிட்டது.
கேள்வி:- மறுபக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மையப்படுத்திய பொதுஜனமுன்னணியும் கூட்டிணைந்து பரந்து பட்ட கூட்டணியொன்று அமைப்பது தொடர்பில் பேசப்படுகின்ற நிலையில் அக்கூட்டணியுடன் தாங்கள் இணைந்து பயணிப்பதற்கு வாய்ப்புள்ளதா?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால் ரணில் விக்கிரமசிங்கவை தவிர்த்துச் சிந்திக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்க யார் என்பதை அவர் முழு நாட்டிற்குமெ காட்டிவிட்டார். ஆகவே அவருடன் இணைந்து பயணிப்பதைப் பற்றிச் சிந்திக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணியுடன் ஒப்பிடுகையில் இந்தக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பது பற்றிச் சிந்திக்கலாம். இந்த அணியுடன் அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொள்வதாயின் எமது தரப்புக்கு வலுவான சக்தி இருக்க வேண்டும்.
அவ்வாறான சக்தி இருக்கின்றபோதே எம்மால் அந்த அணியின் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது எதனையும் செய்ய முடியாது. இவற்றையெல்லாம் விடவும் புதிய அரசியல் சக்தியை உருவாக்குதே சிறந்தது. அந்த சக்தியை சுலபமாக குறகிய காலத்திற்குள் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் இருந்தாலும் முதலில் அமைப்பாக உருவெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
கேள்வி:- தாங்களும் ஸ்தாபக உறுப்பினராக இருந்து தேசிய சிந்தனையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஜாதிக ஹெல உறுமய சரியான பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விகள் உள்ள நிலையில் மீண்டும் தாங்கள் புதிய சக்தியை ஒருங்கிணைக்கும் முயற்சி மீது எத்தகைய நம்பிக்கையை கொண்டிருக்கின்றீர்கள்?
பதில்:- நாட்டில் பயங்கரவாத சூழல் இருந்த காலத்தில் தான் ஹெல உறுமய உருவாக்கப்பட்டது. தேசியத்தினை பாதுகாப்பதற்காக சிங்கள மக்களை ஒருங்கிணைப்பதை நோக்காக கொண்டிருந்தது. யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டின் பொருளாதார கொள்கை, எதிர்கால சுபீட்சம் தொடர்பிலான விடயங்களை மையப்படுத்திய நடவடிக்கைகளை ஹெல உறுமய முன்னெடுக்கவில்லை. ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் நானும் அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவராகின்றேன். தற்போது ஹெல உறுமய இல்லாமல் போகும்
நிலைமையே உள்ளது. எனவே அக்கட்சி தொடர்பில் நான் அதிகம் பேசவில்லை. எவ்வாறாயினும் கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் நாம் அரசியல் கட்சிகளைக் கடந்து முன்னோக்கியே சிந்திக்க வேண்டியுள்ளது. 
கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் தங்களின் செயற்பாடு எவ்வாறு அமையும்?
பதில்:- தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பொன்று உருவாகும் என்று கூறமுடியாது. அதற்கான காலம் கடந்து விட்டது. யுதார்த்த பூர்வமாக அனைவரும் அந்த விடயத்தினை அறிவார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. மீண்டும் மக்கள் ஆணைக்குச் செல்கின்றபோது வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதையும் முன்னிலைப்படுத்த முடியும். அவ்வாறு முன்னைப்படுத்தி மக்கள் ஆணைபெறுகின்றபோது மட்டுமே அச்செயற்பாடு சாத்தியமாகலாம். தற்போதைய நிலையில் அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சி அமைத்திருந்தாலும் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கையும் இல்;லை. இந்த அரசாங்கத்திற்கு ஆணையும் இல்லை.
கேள்வி:- ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கின்றாரே?
பதில்:- கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டிருந்தாலும் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதற்கான அங்கீகாரத்தினை வழங்க வேண்டியிருக்கின்றதல்லவா? மேலும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் தரப்புக்கள் மிகவும் அரசியலைக் கடந்து உணர்வுபூர்வமானதாக இருக்க வேண்டும். அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது அவர்கள் அமைதியாக இருந்திருந்தால் அவர்களின் அரசியல் தந்திரோபாயம் பெறுமதியானதாக இருந்திருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக மக்களால் வெறுப்பைச் சம்பாதித்த கட்சியொன்று தலைமை வகித்து அரசாங்கத்தினை அமைப்பதற்கு முண்டு கொடுத்துள்ளது. இந்த செயற்பாட்டால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் உள்ள முற்போக்காளர்களால் கூட்டமைப்புடன் கலந்துரையாட முடியாத நிலைமையே தோற்றம் பெற்றுள்ளது. கூட்டமைப்பளவிற்கு தமிழ் மக்கள் இனவாதிகளாக இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி கிடைத்திருந்தது. அப்பதவி அவருக்கு கிடைத்ததும் அவர் முழு நாட்டிற்கும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற நிலைப்பாட்டினை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டும்.
எதிர்க்கட்சித்தலைவர் பதவி கூட்டமைப்புக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பமொன்றாகும். அந்த சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சம்பந்தன், முழு நாட்டிற்கும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற பாத்திரத்தினை ஏற்று அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாராயின் சிங்கள மக்கள் மத்தியிலும் நாயகனாக வலம் வந்திருக்க முடியும். எமது நாட்டுக்காக பேசுகின்றார் என்ற சிந்தனை சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கி அவர்களது சிந்தனைகளில் வெகுவான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அந்த பொன்னான சந்தர்ப்பத்தினை கைநழுவிட்டு நாட்டை கீழ்த்தரமான இனவாத சூழலுக்குள் தள்ளிவிடுவதற்கு காரணமாகி விட்டார்.
கேள்வி:- நீங்கள் குறிப்பிட்டதைப்போன்று கூட்டமைப்பு அமைதியாக(நடுநிலைமையாக) இருந்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ தரப்பிற்கு அது சாதமாக மாறியிருக்கும் அல்லவா?
பதில்:- மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லாமில்லை. ஆனால் இலங்கை மத்தியவங்கியில் மோசடியை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தினை சீர்குலைத்த தரப்பினை ஆட்சியில் அமர்த்தியது சரியாகுமா? இவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்தியதால் நாட்டிற்கு நன்மை ஏற்படுமா? ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையை மாற்றியமைத்து ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு உதவியிருந்தால் அது மிகச்சரியென்று நான் கூறுவென். ஆனால் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. கூட்டமைப்பு தமது இனவாத அரசியலை மையப்படுத்தி எடுத்த தீர்மானத்தினையே தவறு என்கின்றேன்.
சரி, நாட்டின் நிலத்தினை விற்பனை செய்கின்றமை, திருமலையில் அமெரிக்க முகாமை அமைப்பதற்கு இடமளித்தமை, சிங்கப்பூர் ஒப்பந்தம் இதுபோன்ற விடயங்களில் சம்பந்தன் அல்லது கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? எதுவுமே இல்லையே. தேசிய வளங்களை பாதுகாப்பது தொடர்பில் எவ்வித நிலைப்பாடும் இல்லையே. மேற்படி செயற்பாடுகளால் சிங்கள விவசாயிகள், வர்த்தகர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. நாட்டின் அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்படுகின்றார்கள். 1977இல் யாழில் விவசாயத்துறையின் நிலைமைகளை கூட்டமைப்பு அறியும். ஆனால் இவ்விடயம் சம்பந்தமாக அமைதியாக இருப்பதால் எதனைச் சாதிக்க முடியும்.