புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2019

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தது கூட்டமைப்பே;சுமன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய உங்களால் ஒரு கைதியாவது விடுவிக்கப்பட்டாரா? உங்களால் விடுவிக்க முடிந்ததா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், நேற்று சாவகச்சேரியில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் கிறிஸ்தவ மதகுரு றெக்ஸ் சவுந்தரநாயகம் அடிகளாரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் வழங்கிய பதில் வருமாறு:-

ஒரு கைதி அல்லர், நூறுக்கு மேற்பட்ட கைதிகளை நாம் விடுவித்திருக்கின்றோம். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 217. இன்றைக்கு இருக்கின்ற அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 107. அதிலே 20 இற்கு அண்மித்த எண்ணிக்கையானவர்கள் அண்மையில் கைதுசெய்யப்பட்டவர்கள். 80 வரையிலான கைதிகள்தான் முதல் இருந்தவர்கள். இப்பவும் இருக்கின்றவர்கள்.

அரசியல் கைதிகள் விடுவிப்பு துரிதமாக நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த காலத்திலே நானும் சட்டத்தரணி சயந்தனும் வெலிக்கடைக்குச் சென்று அவர்களுடன் பேசினோம். நாங்கள் போகின்றபோது முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரோடு சேர்ந்த சட்டத்தரணிகளும் அங்கே கூட இருந்தார்கள். அவர்கள் முன்னிலையிலேதான் நாங்கள் சம்பாசித்தோம். ரட்ணவேல் என்ற ஒரு சட்டத்தரணியும் அங்கே இருந்தார். நாங்கள் கைதிகளிடத்தில் பேசினோம்.

அந்த நேரத்தில் அந்த அரசியல் கைதிகள் எங்களிடத்தில் கூறினார்கள், நாங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்று கடிதம் ஒன்றைக் கொடுக்கின்றோம். அதை ஏற்று எங்களுக்குப் புணர்வாழ்வு பெற்றுத் தாருங்கள் என்றார்கள்.

நான் அவர்களிடத்தில் தெரிவித்தேன், இப்படியான ஆலோசனையை என்னால் கொடுக்கமுடியாது. இந்த புனர்வாழ்வு என்று சொல்வது சட்டவிரோதமானது என்பது என்னுடைய அபிப்பிராயம். அதற்காக இரண்டு தடவைகள் நான் உச்ச நீதிமன்றத்திலே வழக்காடியிருக்கின்றேன். அது ஒரு குற்ற ஒப்புதல் நிலைப்பாடு. ஆகையால், அதை செய்ய முடியாது என்று நான் வாதாடியிருக்கின்றேன். ஆகையால், அந்த ஆலோசனையை நான் உங்களுக்குத் தரமுடியாது என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் என்னிடத்தில் தெரிவித்தார்கள், இல்லை ஐயா, நாங்கள் எப்படியாவது வெளியே வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்கின்றோம் என்றார்கள். 99 பேர் அதில் கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார்கள். நான் அதை எடுத்துக்கொண்டு அமைச்சுக்குச் சென்றேன். இதற்கு சாட்சியாளர்களாகப் பலர் உள்ளார்கள். ஐயா விக்னேஸ்வரன் உட்பட.

நான் எதைச் செய்யவேண்டாம் என்று சொன்னேனோ, ஆனால் அவர்கள் அதைச் செய்யுமாறு கெஞ்சிக் கேட்டமையால் நான் அதைச் செய்தேன். அதன் அடிப்படையிலேயே அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு வழக்குகளும் வருகின்றபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள், மிகக்குறுகிய காலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவார்கள்.

ஒருசில மாதங்களிலே மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் வந்தபோது அவர்கள் சார்பாக ஆஜரான ரட்ணவேல் நீதிமன்றுக்குச் சொல்லியிருந்தார், இது இவர்கள் விரும்பிக் கொடுத்த கடிதம் அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவர்கள்மீது வலிந்து திணித்த ஒரு கடிதம். சுயமாக அவர்கள் இதைச் செய்யவில்லை. என்று நீதிமன்றுக்குத் தெரிவிக்க, நீதிபதி கூறினார் அப்படியென்றால் நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று.

அவ்வாறு நீதிமன்றில் கூறியமை மட்டுமன்றி, வெளியே வந்து ஊடகவியலாளர்களின் ஒலிவாங்கிகளுக்கு முன்னாலையும் நின்று சொன்னார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களை (அரசியல் கைதிகளை) கட்டாயப்படுத்தி இவ்வாறான ஒரு கடிதத்தை வாங்கியுள்ளது என்று சொன்னார். அன்று அவர்களுக்கு நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல, அவர்கள் என்னிடம் கெஞ்சிக்கேட்கும்போதும் இவர் இருந்தார். இதற்கு சாட்சியாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் இருக்கின்றார்.

இதன் காரணமாக விடுவிப்புக்கள் தடைப்பட்டன. ஒருவருட காலமாகத் தடைப்பட்டன. திரும்பக் கைதிகள் மீண்டும் எங்களிடத்தில் கோரினார்கள். அவர் செய்தமை தவறு ஐயா, நீங்கள் இதைச் செய்து முடியுங்கள் என்றார்கள். நாங்கள் சட்டமா அதிபரோடு பேசப்போனபோது சட்;டமா அதிபர் சொன்னார் நீங்கள் யார் தமிழருக்காகப் பேசுவதற்கு என்று. அவர்களுடைய சட்டத்தரணி சொல்கின்றார் இது அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்று. நீங்கள் யார் அவர்களுக்காகப் பேசுவதற்கு? என்றார்.

அதனால் நாம் கைவிடவேண்டி இருந்தது. அதற்குப் பின்னர் பல மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு மீண்டும் தந்தார்கன். அதன்பின்னர் ஒருசிலரை எம்மால் விடுவிக்க முடிந்தது. அதை செய்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதுவரை விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்தான் விடுவிக்கப்பட்டார்கள். வேறு எவரும் அதனைச் செய்யவில்லை. என்றார்.

ad

ad