புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2019

தமிழர்களால் சுதந்திரதினம் அழுத்தத்தின் பேரால் கொண்டாடப்படுகிறது. விக்னேஸ்வரன்

தமிழர்களால் சுதந்திரதினம் அழுத்தத்தின் பேரால் கொண்டாடப்படுகிறது
அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் தமிழர்களால் சுதந்திரதினம் கொண்டாடப்படுவது, அழுத்தத்தின் பேரால், இராணுவத்தினரின் பலவந்தத்தால் கொண்டாடப்படுவதாகவே அமையுமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சுதந்திரம் கிடைக்கப்பெற்றதன் பின்னரே, பிரித்தானியாவின் ஆட்சிக்கு கீழ் இருந்ததைவிட மோசமான அடக்கு முறைகளுக்கும், உரிமை மறுப்புகளுக்கும் தமிழர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “காலனியாதிக்கத்தின் கீழ் அடக்குமுறைகளுக்கும், வள சுரண்டல்களுக்கும் மத்தியில் வாழ்ந்த இனங்கள் பிரித்தானியர்கள் வெளியேறியபோது தமக்குச் சுதந்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

சுதந்திரதினம் என்பது சுதந்திரம் பெற்ற மக்களாலேயே கொண்டாடப்பட வேண்டிய தினமாகும். அடக்கு முறைகள் மத்தியில் வாழும் எம்மால் சுதந்திரதினம் கொண்டாடப்படுவது அழுத்தத்தின் பேரால் நடைபெறுவதாக அமையும்.

எம்மிடையே பத்து வருடங்களின் பின்னரும் பெருவாரியாக குடி கொண்டிருக்கும் இராணுவத்தினரின் பலவந்தத்தாலேயே நடைபெறுவதாக அமையும்.

அத்தோடு, இனியும் எமது மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாத ஒரு கட்டம் தற்பொழுது உருவாகியுள்ளது“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad