17 மார்., 2019

இந்தோனேஷியாவில் வெள்ளத்தால் 58 பேர் கொல்லப்பட்டனர்


இந்தோனேஷியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளங்களில், குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் இன்று (17) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையிலும், 4,150 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையிலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை அவசரகால சேவைகள் சென்றடைய தடுமாறுகின்ற நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்றுப் பெய்த தொடர்ச்சியான மழை, நிலச்சரிவுகளால் ஏற்பட்ட வெள்ளங்களானது, வடகிழக்கு நகரான சென்டாயிலுள்ள பல வீடுகளை சேதப்படுத்தியுள்ளது என இடர் முகவரகத்தின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ தெரிவித்துள்ளார்.

வெள்ளம் வடிந்துள்ளபோதும், வீழ்ந்துள்ள மரங்கள், கற்கள், சேறு, ஏனைய பொருட்களால், மக்களை வெளியேற்ற முயலும் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளதாக சுடோபோ புர்வோ நுக்ரோஹோ மேலும் கூறியுள்ளார்.

அந்தவகையில், மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியொன்றான டொயோவில், வீட்டு வளாகமொன்றானது, அருகிலுள்ள மலையொன்றிலிருந்து உருண்டு வந்த பாரிய கற்களால் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், 14 நாள்கள் அவசரகாலநிலையை அரசாங்கம் அறிவித்துள்ளதாக பப்புவா மாகாணத் தலைகரான ஜெயபுரத்தின் பொலிஸ் தலைவர் விக்டர் டீன் மக்போன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடிபாடுகளுக்குள் மணித்தியாலக்கணக்காக சிக்கியிருந்த ஐந்து மாதக் குழந்தையொன்றை அதிகாரிகள் மீட்டுள்ளதாக பப்புவா இராணுவப் பேச்சாளர் முஹமட் ஐடி தெரிவித்துள்ள நிலையில், அக்குழந்தையின் பெற்றோரின் விவரங்கள் தெரியவில்லை.

இந்நிலையில், ஜெயபுரவுக்கு அருகிலுள்ள விமானநிலையத்தின் ஓடுபாதையொன்றில் விமானமொன்று சேதமடைந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.