30 மே, 2019

பதவி விலகமாட்டேன் - முடிந்ததைப் பாருங்கள்-அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

பதவி விலகமாட்டேன் - முடிந்ததைப் பாருங்கள்


“எந்தக் குற்றமும் செய்யாத என்னைப் பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார்.”

– இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் கூறுகையில்,

“சில ஊடகங்களும் எதிர்க்கட்சியும் இன்று என்னைத் தவறான வகையில் சித்திரிக்க முயற்சித்து வருகின்றன. என் மீது எந்தத் தவறும் இல்லாத நிலையில் என்னைக் குற்றவாளியாகக் காட்டவே முயற்சிக்கின்றன.

சிலர் என்னைப் பயங்கரவாதி என்றே கூறும் நிலைமை உருவாகியுள்ளது. இன்று எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்துள்ளனர். நான் பதவி விலகவேண்டும் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

நான் எந்தத் தவறும் செய்யாத நேரத்தில் குற்றச்சாட்டை ஏற்க நான் தயாரில்லை. அதேபோல் இவர்களுக்கு அஞ்சி நான் எனது அமைச்சைத் துறக்கவும் தயாரில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரட்டும். நான் அதற்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளேன்.

என்னால் எந்தக் குற்றமும் இடம்பெறாத நிலையில் நான் தைரியமாக அதற்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளேன். அத்துடன் இப்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் நான் சாட்சியமளிக்கத் தயாராக உள்ளேன்.

என்னை நியாயமானவன் என நிரூபிக்க என்னால் முடியும். எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே அடிப்படை நியாயமற்றவையாகவே உள்ளன.

குறிப்பாக நான் இராணுவத் தளபதியைத் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்தேன் எனக் கூறுவது முற்றிலும் பொய்யானது. அதனை இராணுவத் தளபதியே கூறியுள்ளார்.பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நான் ஒருநாளும் துணைபோனவன் அல்லன். நான் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலும் அமைச்சராகச் செயற்பட்டுள்ளேன். அப்போது என்னுடன் இணைந்து செயற்பட்ட நபர்கள்தான் இன்று தமது அரசியல் சுயலாபங்களைக் கருத்திற்கொண்டு எனக்கெதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். யார் அழுத்தம் கொடுத்தாலும் என் மீது குற்றம் இல்லாத நிலையில் அனைத்துச் சவால்களையும் தைரியமாக முகங்கொடுக்க நான் தயார்” – என்றார்.