புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 மே, 2019

தமிழர்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்

தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரித்துடையவர்கள் என்பதால் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்';

இவ்வாறு முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்கா அரச படைகளால் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு மேற்படி பிரகடனத்தை வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு – வடக்கு, கிழக்கு விடுத்துள்ள பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே - 18 பிரகடனம், பேரன்புக்குரிய உறவுகளே,

வலராற்றின் வழிகளில் தமிழ் இனப்படுகொலை உச்சம் தொட்ட நாட்களின் தசாப்தத்தின் நினைவில், எமது உறவுகள் துடிதுடித்த, கொல்லப்பட்ட மண்ணில் கனத்த இதயத்துடன் அவர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கின்றோம். தமிழர்களுக்கு எதிராக சிங்கள - பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கட்டம் கட்டமாக அரங்கேற்றி வந்துள்ளது. இந்த இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அதி உச்சத்தை அடைந்து இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். கொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை நினைத்து நினைவில் சுமந்து நிற்கின்றோம். முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவுகூரவில்லை.

சிங்கள - பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெ வ்வேறு வடிவங்களையும் கூட்டுரிமைக்கான தியாகங்களையும் நினைவுகூருவது எம் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை.

தமிழீழம்

தமிழர் உரிமைக்கான போராட்டத்தை சிறிலங்கா அரசு பயங்கரவாத முத்திரை குத்தி, அதன் நியாயப்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தி வந்துள்ளது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாதப் பிரச்சாரத்தினூடு ஆயுதப் போராட்ட வடிவம் மௌனிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஆயுத மெனனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெ வ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால்

பின் முள்ளிவாய்க்கால் தசாப்பத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது. தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். வன்புணரப்பட்டார்கள், பூர்வீக வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால்

தமிழர்கள் வந்தேறு குடிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறிலங்கா, சிங்கள - பௌத்த தேசம் எனவும் அது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என காலணித்துவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசு நவ காலனித்துவத்தைக் கட்டவிழ்த்தது. தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பையும் கேள்விக்குள்ளாக்கியது.

தமிழினத்தின் மீது நடந்தேறிறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக்கொண்டிருந்தது கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழர்கள் அனைவரும் ஒரு தசாப்த காலமாக ஐ.நாவின் சர்வதே சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால்

நடந்தேறிய அநீதியையும் உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேச நீதி விசாரணை இன்னும் ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. சிறிலங்கா அரசு பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கத்தையும் இராணுவ மயமாக்கத்தையும் விஸ்தரித்து இராணுவ இருப்பை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

தமிழர்களின் பூர்வீ நிலங்கள் படைத்தரப்பாலும் மகாவலி அபிவிருத்தி திட்டத்தாலும் தொல்லியல், வனவளத் திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முள்ளிவாய்க்கால்

தமிழர் மத்தியில் சிறிலங்கா அரசு பயத்தைத் தக்கவைத்துக்கொண்டு உளவியல் யுத்தம் செய்துகொண்டிருக்கின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தம் ஆகியும் கைதுகளும் எச்சரிக்கைகளும் மிரட்டல்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. பேச்சுரிமைக்கான வெளி நசுக்கப்பட்டுள்ளது.

ஒருதேசத்தின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பேணப் பாதுகாப்பதற்கு அடிப்படையான பூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது எல்லா தேசங்களினதும் விட்டுக்கொடுக்கவே முடியாத அடிப்படை உரிமை ஆகும். இலங்கைத் தீவில் தமிழர்கள் ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால்

சிங்களவர்களுக்கு இருப்பது போன்று அதைவிடத் தொன்மையானதுமான செழிப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதனாலும் போர்க்குற்ற விசாரணை தொட்ந்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றி வீரர்களாக உலா வருகின்றனர்.

பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் ஒன்றுகூடியுள்ள தமிழ் மக்களாகிய நாங்கள் நினைவுகூரலை அணிதிரட்லாக மாற்றக்கூடிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தப்பட்டிருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால்

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து நினைவுகூரலை சமூக இயக்கமாக மாற்றி சபதம் செய்வோம். எங்கள் உறவுகளின் கல்லறைகள் மீது சத்தியம் செய்வோம்.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நிற்கின்றோம்.

தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரியவர்கள். தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.

தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்க தமிழர் சமூக அமைப்புக்களைப் பலப்படுத்தி விடுதலைக்காக முனைப்புடன் உழைக்க மக்கள் பலத்தை நம்பி நினைவுகூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்றவேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

அக்குமுறைக்குள் வாழும் சமூகத்திற்கு நினைவுகூரல் ஒரு போராட்ட வடிவமே. தமிழ்த் தேசிய நினைவுத் திறன் அடக்குமுறைக்கு எதிரான ஊடகம் என்பதை நினைவிற்கொண்டு உறுதி பூணுவோம். தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கான பயணத்தில் இணைவோம்.

மே-18 இன்றைய நாளில் இன அழிப்பிற்கு எதிரான தமிழ்த் தேச எழுச்சி நாளாகவும் 2019 ஆம் ஆண்டை இன அழிப்பிற்கு எதிரானதும் அரசியல் உரிமைக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு

வடக்கு - கிழக்கு