புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,

உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,லக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.



அதன்படி நியூசிலாந்து அணியின் சார்பில், மார்ட்டின் கப்தில் மற்றும் கொலின் முன்றோ ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். அதில் கப்தில் 5(4) ரன் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கொலின் முன்றோ 12(17) ரன்களும், ராஸ் டெய்லர் 3(8) ரன்னும், டாம் லாதம் 1(14) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 46 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சுடன், ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை உயர்த்த போராடியது. அப்போது கேன் வில்லியம்சன் 41(69) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு நீஷம் உடன், கொலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியில் கிராண்ட்ஹோம் 64(71) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் நீஷம் 97(112) ரன்களும், சான்ட்னெர் 5(5) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளும், அமிர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில், இமாம் உல்-ஹக் மற்றும் பஹார் ஜமான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் பஹார் ஜமான் 9(10) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து இமாம் உல்-ஹக் 19(29) ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆனார். அடுத்ததாக பாபர் அசாம் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ஹபீஸ் 32(50) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக பாபர் அசாமுடன், ஹாரிஸ் சோகைல் ஜோடி சேர்ந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அந்த ஜோடியில் ஹாரிஸ் சோகைல் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியினர், அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பாபர் அசாம் தனது 10வது சதத்தை பதிவு செய்தார். கடைசியில் வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹாரிஸ் சோகைல் 68(76) ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் பாபர் அசாம் 101(127) ரன்களும், சர்ப்ராஸ் அஹமது 5(3) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 49.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக பெர்குசன், டிரென்ட் பவுல்ட் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.



1992 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த வரலாற்றை பாகிஸ்தான் அணி இன்று மீண்டும் தக்கவைத்து கொண்டது .

ad

ad