2 ஆக., 2019

எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!

பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2-வது நாடாக திகழும் எத்தியோப்பியாவில், வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வருகிறது. கடந்த நூற்றாண்டில் 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு, கடந்த 2000-ம் ஆண்டில், 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் நாட்டில் நிலவும் வறட்சியை மரங்களால்தான் எதிர்கொள்ள முடியும் என அந்நாட்டு அரசு தீர்க்கமாக நம்புகிறது. எனவே மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என பிரதமர் அபிய் அகமது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி ‘பசுமை மரபு’ என்ற பெயரில் நாடு முழுவதும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நாட்டில் இருக்கும் அனைத்து பொதுமக்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென பிரதமர் அபிய் அகமது வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களும் பங்கேற்கும் வகையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா 12 மணி நேரத்தில் 6 கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டதே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனையை எத்தியோப்பியா பெரும் வித்தியாசத்தில் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.