புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2019

சரணடைந்த 2,994 பேர் எங்கே?

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்து, காணாமல் போனோரை கண்டறியும் வகையில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், யுத்தம் இடம்பெற்ற தருணத்திலும், யுத்தம் நிறைவடைந்த தருணத்திலும் இராணுவத்திடம் சரணடைந்தோர் காணாமல் போயுள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், பாதுகாப்பு முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவிடம், இறுதிக் கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தோர் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊடகவியலாளர்கள் காணாமல் போனோர் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

பாதுகாப்பு அமைச்சக செயலாளராக பணியாற்றியோது, 13,784 பேர் சரணடைந்திருந்ததாகவும், அவர்கள் அனைவரும் இரண்டு வருட காலப் பகுதிக்குள் புனர்வாழ்களிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அவ்வாறாயின், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தோர் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் கூறி வருகின்றமை பொய்யான குற்றச்சாட்டா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.

யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தாக்குதல்களுக்கு இலக்காகி அடையாளம் தெரியாத அளவிற்கு பலரது உடல்கள் சிதைந்து போனதாகவும், அவ்வாறு உடல் சிதைந்து உயிரிழந்தோரை அவர்களது உறவினர்கள் அடையாளம் காணாத நிலையிலேயே காணாமல் போனோர் தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்தார.

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட தகவலுக்கும், அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ள தகவலுக்கும் இடையில் பாரிய பரஸ்பரம் காணப்படுவது தொடர்பாக இலங்கையில் வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு அமையவே இந்த விடயம் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரணடைந்தோர் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவிப்புக்கும், தகவலறியும் சட்டத்தின் ஊடாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் தகவலுக்கு அமையவும் 2,994 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில், எங்குமே கணக்கில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்துக்கு, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயகவால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டிருக்கும் பதில் கடிதத்தில், "முன்னாள் போராளிகள் 10,790 பேர் புனர்வாழ்வுக்காக, 19ஆம் திகதி மே மாதம் 2009ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் சரணடைந்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லையென இராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பான தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்துக்கு "இராணுவத்திடம் புலிகள் சரணடையவில்லை எனவும், அவர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள்" என பதில் வழங்கியிருந்தது.

இது தொடர்பான தகவல்களைப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராணுவம் அண்மையில் பதில் வழங்கியிருந்தது.

இதன்படி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகம் வழங்கியிருந்த தகவல்களின்படி இறுதி யுத்தக் காலப்பகுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி ஒரு நேரத்தில் வெறும் 10 ஆயிரத்து 790 பேரே சரணடைந்தனரெனத் தெரிவித்துள்ளது.

இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஸ குறிப்பிடும் தொகைக்கும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகம் குறிப்பிட்டுள்ள தொகைக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாக பத்திரிகை செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad