18 அக்., 2019

ஆயுள் தண்டனையை நிறுத்த வேண்டும்; பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : நவ.5-ல் விசாரணை

பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழு (MDMA) விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, இதுதொடர்பாக கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.


இந்த வழக்கானது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக விசாரணைக்கு வரவில்லை குறிப்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தமுறை அந்த வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது, விசாரிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.